யாழ் பல்கலையில் நிறுத்தப்பட்ட கற்கைநெறி தொடர வேண்டும் – அமைச்சர் டக்ளஸிடம் வேண்டுகோள்!

Monday, September 20th, 2021

கலாச்சார சுற்றுலாத் துறையை சிறப்பு பாடமாக கற்பதற்கு ஏற்பாடுகளை மேற்கொண்டு தருமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.

கடந்த வருடங்களில் யாழ் பல்கலைக் கழகத்தில் கற்பிக்கப்பட்டு வந்த குறித்த சிறப்புக் கற்கை நெறி இவ்வாண்டு நிறுத்தப்பட்டுள்ளது.

இதனால் பாதிக்கப்பட்ட மாணவர்களின் கோரிக்கைக்கு அமைவாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கும் மாணவர்களுக்கும் இடையில் இன்று(20.09.2021) நடைபெற்ற மெய்நிகர் வழியூடான கலந்துரையாடலின் போதே குறித்த விடயம் வலியுறுத்தப்பட்டது.

இதன்போது தொடர்ந்தும் கருத்து தெரிவித்த மாணவர் பிரதிநிதிகள், சுற்றுலாத்துறையை பொருளாதாரத்தின் முக்கிய மார்க்கமாக எமது நாடு கொண்டுள்ளமையினால் வேலைவாய்ப்புக்களை இலகுவாகப் பெறக்கூடிய இத்துறையினை சிறப்பு பாடமாக யாழ் பல்கலைக் கழகத்தில் கற்க முடியாத நிலை ஏற்பட்டிருப்பது ஏமாற்றம் அளிப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் குறித்த கற்கைநெறியினை தொடர்ந்து மேற்கொள்வதற்கு, போதிய விரிவுரையாளர்கள் இல்லை எனவும், பல்கலைக் கழகங்கள் மானியங்கள் ஆணைக்குழவின் அனுமதி இல்லை எனவும் நிர்வாகத்தினால் கூறப்படுகின்ற காரணங்களை ஏற்க முடியாது என்றும், குறிப்பாக மூன்று நிரந்தர விரிவுரையாளர்களும் வருகைதரு விரிவுரையாளர்களும் தற்போது இருப்பதாகவும் மாணவர்களினால் தெரிவிக்கப்பட்டது.

இந்தக் கலந்துரையாடலில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த பேராசிரியர் புஸ்பரத்னம், தென்னிலங்கை புத்திஜீவிகள் பலரின் ஆலோசனைக்கு அமைய, எமது பிரதேசத்தில் சுற்றுலாத்துறை வளர்ச்சியையும் மரபுரிமைகள் பாதுகாக்கப்படுவதையும் உறுதிப்படுத்துவதற்காக 2017 ஆம் ஆண்டு இந்த பாடநெறி ஆரம்பிக்கப்பட்டதாகவும், இதனை தெரிவு செய்வதில் மாணவர்கள் ஆர்வம் செலுத்தி வருவதாகவும் தெரிவித்தார்.

அதேவேளை, கற்கை நெறிகளை நிறுத்துவதற்காக சொல்லப்படுகின்ற காரணங்களை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் தெரிவித்தார்.

கடந்த 2010 ஆம் ஆண்டு காலப் பகுதியில் யாழ். பல்கலைக்கழகத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஒத்துழைப்புடன் சட்டப் பீடம் உருவாக்கப்பட்ட போது, போதிய விரிவுரையாளர்கள் இல்லாத நிலையிலும் ஏனைய கற்கைநெறிகளுக்கான விரிவுரையாளர்களைப் பயன்படுத்தி சட்டப் பீடத்தினை செயற்படுத்தியதனால் இப்போது வினைத் திறனான சட்டபீடம் உருவாக்கப்பட்டுள்ளது என்பதையும் சுட்டிக் காட்டினார்.

அதேபோன்று, புதிதாக பாடநெறிகள் ஆரம்பிக்கப்படுகின்ற போது, பல்கலைக கழக மானியங்கள் ஆனைக்குழுவின் அனுமதி பெற்றிருக்க வேண்டியதில்லை எனவும் குறித்த அனுமதிக்கான படிமுறைகளை முன்னகர்த்துவதன் மூலம் காலப்போக்கில் மானியங்கள் ஆணைக்குழுவின் அனுமதியைப் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் தெரிவித்தார்.

இதன்போது, யாழ் பலகலைக் கழகத்தில் இந்து பீடத்திற்கான உருவாக்கப்பட்டமை மற்றும் மற்றும் மட்டக்களப்பு இசை நடனக் கல்லூரியை கிழக்கு பல்கலைக் கழகத்தின் பீடமாக மாற்றியமை உட்பட பல்வேறு அனுபவங்களும், அவ்வாறான செயற்பாடுகளுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வழங்கிய ஒத்துழைப்புக்களும் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

இவ்வாறு பல்வேறு கருத்துக்களும் பல்வேறு தரப்பினராலும் தெரிவிக்கப்பட்ட நிலையில், அவற்றை செவிமடுத்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, மாணவர்களின் விருப்பங்களை புரிந்து கொள்வதாகவும், சம்மந்தப்பட்ட தரப்புக்களுடன் கலந்துரையாடி மாணவர்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவதற்கான சாதகங்கள் தொடர்பாக ஆராய்வதாகவும் உறுதியளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

யாழ். சிறுத்தீவினை அண்டிய கடற் பிரதேசத்தில் நீர் வேளாண்மையை அபிவிருத்தி செய்வது தொடர்பில் அமைச்சர் ட...
வடக்கிற்கான காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் செயற்பாடுகளை அநுராதபுரத்துக்கு பாரப்படுத்துவதற்கு மேற்கொள...
கௌதாரிமுனை இலங்கை - சீன கூட்டு நிறுவனத்தினால் அமைக்கப்பட்டுள்ள கடலட்டை குஞ்சு வளர்ப்பு நிலையத்திற்கு...

இலங்கைத் தமிழரது வாழ்வாதாரத்தை உறுதிசெய்ய இந்திய அரசு முன்வரவேண்டும் - செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந...
தாயகத்தில் வாழும் உறவுகளின் வாழ்வியலை முன்னேற்ற புலம்பெயர் தேச உறவுகள் முன்வரவேண்டும் – அமைச்சர் டக்...
ஜனாஸாக்களை அடக்கம் செய்வதற்கு இரணைதீவு பொருத்தமான இடமில்லை - அமைச்சர் டக்ளஸ் எடுத்துரைப்பு!