யாழ் குடாநாட்டில் சட்டவிரோத மணல் அகழ்வுகள் – நாடாளுமன்றத்தில் பகிரங்கப்படுத்தினார் டக்ளஸ் தேவானந்தா !

Wednesday, May 3rd, 2017

யாழ் குடாநாட்டில் மணல் அகழ்வு தொடர்பில் உரிய பொறிமுறை ஒன்றை வகுத்து, பயனாளிகள் நியாய விலையிலும், இலகுவாகவும், தரமானதாகவும் அதனைப் பெறக்கூடிய ஒரு நிலைப்பாட்டினை புவிச்சரிதவியல் சுரங்கங்கள் பணியகத்தின் நேரடிக் கண்காணிப்பாளர்களின் கீழ் கொண்டு வர நடவடிக்கை எடுக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் இன்றைய தினம் (03) நாடாளுமன்றத்தின் ஊடாக சூழல் அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி அவர்களிடம் வலியுறுத்தியுள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள டக்ளஸ் தேவானந்தா அவர்கள், யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கு, மருதங்கேணி பிரதேசத்தில் அமைந்துள்ள J/425 கிராம சேவையாளர் பிரிவைச் சேர்ந்த குடாரப்பு வடக்கு கிராமத்தை மையமாகக் கொண்டு, அம் மக்களது பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற மணல் அகழ்வு நடவடிக்கைகள் சட்டத்திற்கு புறம்பான வகையில் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், இதனால் அப்பகுதிகளும், அப்பகுதி மக்களும் பாரிய பாதிப்புகளுக்கு உட்பட்டு வருகின்றனர் என்றும் அப்பகுதி மக்களால் தொடர்ந்து முறையிடப்பட்டு வருகின்றது.

மேலும், கனரக இயந்திரங்களைப் பாவித்தும், சுற்றுச் சூழலுக்கு பாரிய பாதிப்புகளை ஏற்படுத்தும் வகையில் காடழிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டும் மரங்களை அழித்தும், மணல் அகழ்வு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகவும், மணல் அகழ்வுப் பிரதேசங்களை துப்புரவு செய்து மரங்களை எரித்து தடயங்களை அழித்து புவிச்சரிதவியல் சுரங்கங்கள் பணியத்திற்கு தெரியாமலும், சுற்றுச் சூழல் மத்திய நிலையத்தின் ஆரம்ப  சூழல் பரிசோதனை மதிப்பீட்டு அறிக்கை   (IEEA) மற்றும் சுற்றுச் சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை (E I A) போன்ற அனுமதிகள் எதுவுமே பெறப்படாமலும், மாதத்திற்கு சுமார் 2500 கியூப்புகளுக்கும் அதிகளவிலான மணல் சட்டவிரோதமான முறையில் அகழப்பட்டு வருவதாகவும் தெரிய வருகிறது.

அதேநேரம், சட்டத்துக்கு புறம்பான விதிமுறைகளை வகுத்து மணல் அகழ்வுக்கான அனுமதியை வழங்குவோர் தங்களுக்கு நெருக்கமான ஒரு சில ஒப்பந்தக்காரர்களுக்கு மாத்திரம் மேற்படி அனுமதிகளை வழங்குவதாகவும், இதன் ஊடாக மணலுக்கு யாழ் குடாநாட்டில் ஒரு செயற்கையான தட்டுப்பாடு ஏற்படுத்தப்பட்டு, அதனது விலையை அதிகரித்தும், அளவுகளில் குறைபாடுகளைக் கொண்டும் அதிக இலாபமீட்டி வருவதாகவும் தெரிய வருகின்றது. குறிப்பாக, தற்போதைய நிலையில், யாழ்ப்பாணத்தில் மணலுக்கான அனுமதிப்பத்திரம் ஒன்று சுமார் 15,000 ரூபாவிற்கு  விற்கப்படுவதாகவும், இதனைப் பெறுகின்றவர்களால், மணல் அகழ்வுகளுக்கு சட்டரீதியாக அனுமதி வழங்கப்படாத, இயற்கைக்கு பாரிய அழிவுகளைக் கொண்டுதரக்கூடிய இடங்களில் எல்லாம் மணல் அகழப்படுவதாகவும் தெரியவருவதுடன், இரவு வேளைகளில் பயனாளிகளுக்கு மணல் ஏற்றி இறக்கப்படுவதால், அவற்றின் தரம் மிகவும் குறைந்து, களி மண் மற்றும் களி மண் கட்டிகள் மணலில் அடங்கியுள்ளதாகவும், இதனைக் கொண்டு கட்டிடங்கள் அமைக்கப்படும் நிலையில் அவை மிகவும் தரமற்ற கட்டிடங்களாகவே காணப்படுவதாகவும் தெரிய வருவதுடன், தற்போதைக்கு அங்கு மூன்று கியூப் மணலின் விலை 45,000 ரூபா முதல் 55,000 ரூபா வரையிலான விலைகளுக்கு விற்கப்படுவதாகவும், ஒரு டிரக்டர் மணல் 15,000 ரூபாவிற்கு விற்கப்படுவதாகவும் தெரிய வருகிறது. இதன் காரணமாக யாழ் குடாநாட்டில் மணலுக்கான தட்டுப்பாடு ஏற்பட்டு, பல கட்டுமாணப் பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ள நிலையில் இதனால் பல தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் தெரிய வருகிறது.

எனவே, மேற்படி மணல் அகழ்வு தொடர்பில் உரிய பொறிமுறை ஒன்றை வகுத்து, பயனாளிகள் நியாய விலையிலும், இலகுவாகவும்ஈ தரமானதாகவும் அதனைப் பெறக்கூடிய ஒரு நிலைப்பாட்டினை புவிச்சரிதவியல் சுரங்கங்கள் பணியகத்தின் நேரடிக் கண்காணிப்பாளர்களின் கீழ் கொண்டு வருவதற்கும், இதுவரையில் மேற்படிப் பகுதியில் மேற்கொள்ளப்பட்டுள்ள காடழிப்பு உட்பட்ட சட்டவிரோத சூழல் பாதிப்பு நடவடிக்கைகளினால் பாதிக்கப்பட்டுள்ள அப்பகுதியில்  மீளீட்டல் நடவடிக்கைகள் மேற்கொள்வதற்கும், மேற்படி மணல் அகழ்வு காரணமாக யாழ் குடாநாட்டில் பரவலாக முன்னெடுக்கப்பட்டு வருகின்ற சட்டவிரோத மணல் அகழ்வு நடவடிக்கைகளை தடுப்பதற்கும்  நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டுமென வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

எமது மாணவர்களுக்குச் சென்றடையக்கூடியதான கல்வி வாய்ப்புக்கள் சிதைக்கப்படுகின்றன - நாடாளுமன்றில் டக்ளஸ...
வேலணை பிரதேச முன்பள்ளிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வுகள் பெற்றுத்தரப்படும் – டக்ளஸ் எம்.பி...
சாதாரண சூழல் ஏற்படும் வரையில், வடக்கின் கூட்டுறவுச் சங்கங்களின் பதவிக் காலத்தினை நீடிப்பது தொடர்பில்...