யாழ்ப்பாணத்தில் வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் அலுவலகம்: வெளிநாட்டலுவல்கள் அமைச்சருக்கு டக்ளஸ் தேவானந்தா பாராட்டு!

Wednesday, November 30th, 2016

யாழ்ப்பாணத்தில் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் அலுவலகம் ஒன்றினை ஏற்படுத்தி, மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வதற்கு முயற்சிகளை முன்னெடுத்துள்ள வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் மங்கள சமரவீர அவர்களுக்கு எமது மக்கள் சார்பாக எனது நன்றியை  தெரிவித்துக் கொள்கின்றேன் என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார்.

2017ஆம் ஆண்டக்கான வரவு செலவு திட்ட குழுநிலை விவாதத்தில் கலங்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில் –

எமது வெளிநாட்டுக் கொள்கையினைப் பார்க்கின்றபோது, நாம் இந்தியாவுடன் கொண்டிருக்கின்ற நெருக்கத்தை, இந்தியாவிலுள்ள தமிழ் நாட்டுடன் கொண்டிருக்காத நிலையே காணப்படுகின்றது என்பதை இங்கு நான் சுட்டிக் காட்ட விரும்புகின்றேன்.

அதாவது, எமது நாட்டினதும், எமது மக்களது பல்வேறு பிரச்சினைகளை நாம் மிகவும் இலகுவாகத் தீர்த்துக் கொள்ள வேண்டுமானால், அதற்காக நாம் தமிழ் நாட்டுடனான உறவையும் வலுப்படுத்திக் கொள்வது அவசியமானதாகும் என்பதை கௌரவ வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அவர்களது அவதானத்துக்குக் கொண்டுவர விரும்புகின்றேன்.

குறிப்பாக, தற்போது மிக அதிகமான அளவில் போதைப் பொருட்கள், கேரளக் கஞ்சா போன்றவை தமிழ் நாட்டின் ஊடாகவே நமது நாட்டுக்குக் கடத்தப்படுவதாகத் தெரிய வருகின்றது. ஆகவே, இந்த முயற்சிகளை ஒடுக்கக்கூடிய வகையிலான ஏற்பாடுகளைப் போதிய வகையில் முன்னெடுப்பதற்கும்,

இந்திய கடற்தொழிலாளர்களது எல்லைகள் தாண்டியதும், தடை செய்யப்பட்ட உபகரணங்களைக் கொண்டதுமான கடற்றொழில் நடவடிக்கைகளையும், எமது கடல் வளங்கள் சுரண்டப்படுவதையும் போதியளவில் கட்டுப்படுத்திக் கொள்வதற்கும்,

இலங்கைக்குத் தேவையான நவீன தொழில்நுட்ப, தகவல்தொழில் நுட்ப மென் பொருட்கள், மின்னியல் உபகரணங்கள்,  ஏனைய நுகர்வுப் பொருட்கள், மருந்து வகைகள் ஏனைய தொழில்சார் உபகரணங்களை மிகவும் மலிவான விலையில் இறக்குமதி செய்து கொள்வதற்கும்,

மற்றும் இதர பல அத்தியாவசியத் தேவைகளுக்காகவும், நாம் தமிழ் நாட்டுடனான நட்புறவை வளர்த்துக் கொள்வதே மிகவும் அத்தியாவசியமான விடயமாகும்.

அந்த வகையில் பார்க்கின்றபோது, அன்று தொட்டு இன்று வரை தமிழ் நாட்டு முதல்வர்களில் ஒருவர்கூட இலங்கைக்கான உத்தியோகபூர்வ நல்லெண்ண விஜயத்தை மேற்கொண்டதாக ஒரு வரலாறுகூட இல்லை என்பதை நாம் மனதில் கொள்ள வேண்டும்.

அதே நேரம், எமது நாட்டுத் தலைவர்கள், மத வழிபாடுகளில் கலந்து கொள்வதற்காகத் தமிழ் நாட்டிக்கு அடிக்கடி போய் வருகிறார்களே அன்றி, உத்தியோகபூர்வமான விஜயங்களைத் தமிழ்நாட்டுக்கு மேற்கொள்கின்ற நிலைமைகளும் காணப்படுவதில்லை.

எனவே, அமைச்சர் அவர்கள் இந்தக் கருத்தினைப் பரிசீலித்து, இலங்கைக்கான தமிழ் நாட்டுடனான நல்லுறவை வலுப்படுத்தக்கூடிய வகையிலான நடவடிக்கைகளை மேற்கொள்ள முன்வர வேண்டும் என நான் கேட்டுக் கொள்வதுடன்,

அதற்கென தமிழ் நாட்டிலுள்ள இலங்கைக்கான தூதரகத்தைப் பலப்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கின்றேன்.

அத்துடன், எமது பிரச்சினைகளை நாங்கள் தான் தீர்த்துக் கொள்ள வேண்டும் என்ற தீர்க்கமான நிலையில் நான் தொடர்ந்தும் இருந்து வருகின்றவன் என்பதையும், வெளிநாடுகள் வேண்டுமானால் ஒரு மருத்துவிச்சியின் பங்கினை இந்த விடயத்தில் வகிக்க முடியும் என்பதையும் நான் இங்கு மீண்டும் வலியுறுத்த விரும்புகின்ற அதே நேரம், தமிழ் நாட்டுடனான நட்புறவை வலுப்படுத்திக் கொள்வதானது, எமது நாட்டுக்கும், எமது நாட்டு மக்களுக்கும் பல்வேறு நன்மையான வாயப்புகளை ஏற்படுத்தும் என்ற விடயத்தையும் இங்கு முன்வைக்க விரும்புகின்றேன்.

01

Related posts:

வவுனியா சண்முகபுரம் கிராமத்தின் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்பட வேண்டும் - டக்ளஸ் தேவானந்தா வலியுறு...
மக்களின் தேவைகள் உரிய காலத்தில் தீர்த்துவைக்கப் படவேண்டும் – வவுனியா மாவட்ட அரச அதிபரிடம் டக்ளஸ் தேவ...
யாழ். போதனா வைத்தியசாலை விவகாரங்கள் அமைச்சரவையில் பிரஸ்தாபிக்கப்படும் - அமைச்சர் டக்ளஸ் உறுதி!