யாழில் பலரைப் பாதித்துவரும் தென்னிலங்கை நிதி நிறுவனம் உடன் தடை செய்யப்பட வேண்டும் – டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்து!
Sunday, June 26th, 2016இலங்கை மத்திய வங்கியால் தடை செய்யப்பட்டுள்ள பிரமிட் முறை சார்ந்த தென்னிலங்கை நிதி நிறுவனமொன்று யாழ் குடாநாட்டில் எமது மக்களில் பலரை பாதிப்படையச் செய்து வருவதாகப் புகார்கள் கிடைத்துள்ளன. எனவே, இதனை இனங்கண்டு, இந்த நிறுவனத்தை தடை செய்வதுடன், பாதிப்படைந்துள்ள எமது மக்களுக்கு எவ்வகையில் மீள் நிவாரணம் அளிக்க இயலும் என்பது தொடர்பில் ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி(ஈ.பி.டி.பி)யின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் பொலிஸ் மா அதிபருக்கு வலியுறுத்தியுள்ளார்.
இவ் விடயம் தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள செயலாளர் நாயகம் அவர்கள், பிரமிட் முறை சார்ந்த கட்டமைப்பினைக் கொண்டதான இந்த நிதி நிறுவனமானது கடந்த காலங்களில் தென் பகுதியில் பல்வேறு இடங்களில் தமது செயற்பாடுகளை மேற்கொண்டிருந்த நிலையில், பெருந்தொகையான மக்கள் இதனால் பாதிக்கப்பட்டு, பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடுகளை மேற்கொண்டதையடுத்து, மத்திய வங்கி இவ்வகைக் கட்டமைப்பினாலான நிதி சார் நடவடிக்கைகளுக்கு தடைவிதித்தது. அதன் பின்னர், தென் பகுதியில் தலையெடுக்காதிருந்த மேற்படி நிறுவனத்தின் செயற்பாடுகள் சில வருடங்களுக்கு முன்பதாக யாழ்ப்பாணம் வலிகாமம் பகுதியில் முன்னெடுக்கப்பட்டிருந்தன. இதனால் அப்பகுதியில் பெரும்பாலான மக்கள் பாதிப்புகளுக்கு உள்ளாகியிருந்தனர். இந்நிலையில் இது பற்றி எமக்கு முறைப்பாடுகள் கிடைத்திருந்த நிலையில் இதன் செயற்பாடுகளை நாம் தொடரவிடவில்லை. தற்போது மீண்டும் யாழ்ப்பாணத்தில் இந்த நிறுவனத்தின் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டு, தொடர்வதாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.
இந்த நிறுவனத்தின் செயற்பாடுகளால் குறிப்பிட்ட ஒரு சிலர் நன்மை அடைகின்றனரே தவிர பாரிய அளவிலான மக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். எனவே, இது தொடர்பில் உடனடியாக ஆராய்ந்து இந்த நிறுவனத்தின் செயற்பாடுகளை நிறுத்த நடவடிக்கை எடுக்கும்படியும், அதே நேரம், பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஏதேனும் வகையில் உதவக்கூடிய வாய்ப்புகள் குறித்தும் ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கும்படியும் பொலிஸ் மா அதிபரிடம் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|