மொழிப் பரிச்சயம் இன்மை எமது மக்களை பலவழிகளிலும் பாதிக்கின்றது – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. சுட்டிக்காட்டு!

Thursday, March 28th, 2019

இன்றுவரையில் இந்த நாட்டில் தமிழ் மொழி மூலப் பரிச்சயம் மட்டுமே கொண்டுள்ள எமது மக்களால் வடக்கு மாகாணம் தவிர்ந்தும், கிழக்கில் ஒரு சில அரச நிறுவனங்களைத் தவிர்ந்தும் வேறு எந்தவொரு அரச நிறுவனங்களுக்கும் சென்று தங்களது தேவைகளை சுயமாக நிறைவேற்றிக் கொள்ள இயலாமல் இருக்கின்றது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் நடைபெற்ற உள்ளக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சு, மகாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சு ஆகிய அமைச்சுகள் தொடர்பிலான குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் அவர் தெரிவிக்கையில் –

ஒருவர் பிறப்பச் சான்றிதழ் ஒன்றைப் பெறப் போனால், அவருக்கு மரண சான்றிதழ் வரும்வரையில் அவர் அந்த அலுவலகத்திற்கெனவே நடந்துதிரிய வேண்டிய நிலைமைகளே காணப்படுகின்றன.
எனவே, இந்த நிலைமையில் உடனடி நடைமுறை மாற்றங்களைக் கொண்டு வருதல் வேண்டும். இது, இந்த அரசின் பொறுப்புக் கூறலின் மிக முக்கிய அடிப்படைகளில் ஒன்றாகும்.
மாகாண சபைகள், உள்ளுராட்சி சபைகள், மாவட்ட செயலகங்கள், பிரதேச செயலகங்கள், குடிவரவு குடியகல்வுத் திணைக்களம், ஆட்களை பதிவு செய்கின்ற திணைக்களம், பதிவாளர் நாயகம் திணைக்களம் என பொது மக்கள் அன்றாடம் தமது தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளச் செய்கின்ற நிறுவனங்களை இந்த அமைச்சு கொண்டிருக்கின்றது.
வடக்கு மற்றும் கிழக்கில் சில அரச நிறுவனங்கள் தவிர்ந்த ஏனைய மேற்படி அரச நிறுவனங்களில் தமிழ் மொழி மூலப் பரிச்சயமற்ற மக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்குகின்றனர் எனில், எதிர்காலத்தில் வடக்கு மாகாணத்திலும் அத்தகைய நிலைதோன்றிவிடுமோ என்ற அச்சமும் எமது மக்கள் மத்தியில் இப்போது ஏற்பட்டு வருகின்றது. அங்கும் இப்போது பிற மாவட்டங்களைச் சேர்ந்தோர்களே சிற்றூழியர்கள் முதற்கொண்டு நியமிக்கப்பட்டு வருகிறார்கள்.
இந்த நாட்டில் 41 பிரதேச செயலகங்கள் இரு மொழி மூலச் செயற்பாடுகளைக் கொண்ட பிரதேச செயலகங்களாக வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ளன. மேலும், 31 பிரதேச செயலகங்களை இரு மொழி மூல செயற்பாடுகளைக் கொண்ட பிரதேச செயலகங்களாக மாற்றப்பட வேண்டி பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிய வருகின்றது.
தற்போது இரு மொழி மூல பிரதேச செயலகங்களை பார்க்கின்றபோது, மொத்த ஜனத்தொகையில் சுமார் 65 வீதத்திற்கும் மேலாக தமிழ் பேசும் மக்கள் வாழுகின்ற திருகோணமலை மாவட்டத்திற்கென இருமொழி மூல பிரதேச செயலகங்கள் இன்னமும் செயற்பாட்டில் இல்லை என்றே தெரிய வருகின்றது. இந்த நிலையில், இந்த நாட்டுக்கு எதிர்க்கட்சித் தலைவராக ஒரு தமிழரையும் இந்த மாகாணமே அண்மையில் தந்திருந்தது எனும்போது, எவ்வளவு மோசமாக இருக்கின்றது? எமது மக்களின் நிலைமை என யோசித்துப் பார்க்க வேண்டியுள்ளது.
கம்பஹா மாவட்டத்தை எடுத்துக் கொண்டல், தமிழ் பேசும் மக்கள் அதிகமாக வாழுகின்ற வத்தளை மற்றும் நீர்கொழும்பு பகுதிகளில் இன்னமும் இரு மொழி பிரதேச செயலகங்கள் செயற்படுவதாக இல்லை என்றே கூறப்படுகின்றது. அம்பாறை மாவட்டத்தில் தெஹிஅத்தகண்டிய பிரதேச செயலாளர் பிரிவு மட்டுமே இரு மொழி பிரதேச செயலகமாக செயற்பட்டு வருகின்றதாகக் கூறப்படுகின்றது. மாத்தளை மாவட்டத்தில் இரத்தோட்டை, உக்குவளை ஆகிய பகுதிகளில் இரு மொழி மூல பிரதேச செயலகங்கள் இன்னமும் செயற்பாட்டில் இல்லாத நிலையே காணப்படுகின்றது.
கொழும்பு மாவட்டத்தில், கொழும்பு, திம்பிரிகஸ்யாய, தெஹிவளை மற்றும் கல்கிஸ்ஸ ஆகிய பிரதேச செயலகங்கள் இரு மொழி மூல பிரதேச செயலகங்கள் எனக் கூறப்படுகின்றது. கொலன்னாவை பிரதேச செயலகம் இன்னமும் அத்தகைய செயற்பாட்டில் இல்லை எனவும் கூறப்படுகின்றது.
கொழும்பு மாவட்டத்தைப் பொறுத்தவரையில், அரச நிறுவனங்களில் தலைமையகங்கள் பலவும் கோட்டை பிரதேச செயலாளர் பிரிவிலும் அடங்குகின்றன. குடிவரவு – குடியகல்வு திணைக்களமாக இருக்கட்டும், ஆட்களைப் பதிவு செய்கின்ற திணைக்களமாகட்டும், பல அமைச்சுகளாகட்டும், தேர்தல்கள் திணைக்களமாகட்டும் பல்வேறு அரச தலைமை அலுவலகங்கள் அமையப்பெற்றுள்ளன என்ற வகையில், கோட்டை பிரதேச செயலாளர் பிரிவினையும் இரு மொழி மூல பிரதேச செயலகமாக மாற்றப்பட வேண்டியத் தேவை அவசியமாகின்றது என்பதையும் இங்கு வலியுறுத்த விரும்புகின்றேன்.
இதுவரையில் உத்தியோகப்பூர்வ காலம் முடிவடைந்துள்ள மாகாண சபைகளுக்கு மக்கள் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கக் கூடிய வகையில் குறித்த மாகாண சபைகளுக்கான தேர்தலை உடன் நடத்துவதற்கு நடவடிக்கை எடுப்பது அவசியமாகும். எமது மக்களுக்கான அதிகாரப் பரவலாக்கத்திற்கென அமைக்கப்பட்ட மாகாண சபைகளுக்கு தேர்தலை நடத்தாது, அவற்றை முடக்கி வைத்திருப்பதானது, எமது மக்களுக்கு செய்கின்ற துரோகமாகவே தெரிகின்றது. எனவே, இது தொடர்பில் கூடிய அவதானமெடுத்து, வெகுவிரைவில் மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும் என்பதே எமது கோரிக்கையாகும் என்பதையும் இங்கு தெரிவித்துக் கொள்கின்றேன்.

Related posts: