முல்லைத்தீவில் தொடரும் மர்மக் காய்ச்சல் தொடர்பில் தடுப்பு ஏற்பாடுகள் அவசியம் – டக்ளஸ் தேவானந்தா சுகாதார அமைச்சருக்கு அவசர கடிதம்!

Sunday, December 17th, 2017

முல்லைத்தீவு நகரப் பகுதியில்; பரவி வருகின்ற ஒருவகை காய்ச்சல் நோய் காரணமாக கடந்த மூன்று வாரக் காலப்பகுதியில் 9 பேர் உயிரிழந்துள்ள நிலையில், இது தொடர்பில்; மேற்கொள்ளப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்ற ஆய்வுகள் குறித்து உடனடி நடவடிக்கைகளையும், மேலும் இந் நோய் பரவாமல் தடுப்பதற்குரிய நடவடிக்கைகளையும் உடன் எடுக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் சுகாதார, போசாக்கு மற்றும் தேசிய மருத்துவ அமைச்சர் ராஜித சேனாரத்ன அவர்களுக்கு அவசர கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார்.

மேற்படி விடயம் தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள அவர், வடக்கில் டெங்கு நோயாளர்களது அதிகரிப்பு தொடர்பிலும், மலேரியா நோய் பரப்புகின்ற நுளம்புகளின் பெருக்கம் தொடர்பிலும் நான் ஏற்கனவே சுகாதார அமைச்சின் அவதானத்திற்குக் கொண்டு வந்துள்ள நிலையில், தற்போது மேற்படி மர்மக் காய்ச்சல் முல்லைத்தீவு மாட்டத்தில் 9 உயிர்களை பலியெடுத்துள்ளதாகத் தெரிய வருகின்றது. சுமார் மூன்று காலப் பகுதிக்குள் 9 பேர் உயிரிழந்தமையானது மிகவும் பாரதூரமான நிலைமையாகவே காணப்படுகின்றது. எனவே, இவ்விடயம் தொடர்பில் உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளது.

உள்ளூராட்சி சபைகளின் மக்கள் பிரதிநிதிகளின் செயற்பாடுகள் இன்மையும், மாகாண சபையின் வினைத்திறன் இன்மையும் காரணமாக வடக்கு மாகாணத்தில் பல்வேறு நோய்கள் பரவுகின்ற நிலைமையினையே காணக்கூடியதாக இருக்கின்ற சூழலில், வடக்கின் சுகாதார நிலைமை குறித்து மத்திய அரசும் அதிக அவதானமெடுக்க வேண்டியத் தேவை ஏற்பட்டுள்ளது.

அந்த வகையில், இவ்விடயம் தொடர்பில் உடனடி அவதானமெடுத்து, மேற்படி நோயின் காரணம் கண்டறியப்படவும், இந்நோய் மேலும் பரவாமல் தடுப்பதற்கும், நோய்க்கான மருந்து வகைகள் பற்றாக்குறை அல்லது தேவைகள் இருப்பின் அவற்றை விரைந்து வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்குமாறு டக்ளஸ் தேவானந்தா அவர்கள் சுகாதார அமைச்சரைக் கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

யாழ் குடாநாட்டில் சட்டவிரோத மணல் அகழ்வுகள் - நாடாளுமன்றத்தில் பகிரங்கப்படுத்தினார் டக்ளஸ் தேவானந்தா ...
தீர்வுகள் எட்டப்படாத நிலைமைக்கு காரணம் மக்கள் சரியானனவர்களை தெரிவு செய்யாமையே காரணம் - டக்ளஸ் தேவானந...
கிளிநொச்சி குளத்தை சுற்றுலாத்தளமாக அமைப்பது தொடர்பான அமைச்சர் டக்ளஸ் தலைமையில் கலந்துரையாடல்!