முப்பது ஆண்டு யுத்தத்தில் படிக்காத பாடத்தை இனிப் படிக்கமாட்டீர்கள் – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. சுட்டிக்காட்டு!

Saturday, March 16th, 2019

வடக்கு, கிழக்கு மாகாணங்களிலே வரலாற்றுக் காலந்தொட்டு எமது மக்கள் வாழ்ந்து வருகின்றனர். கடந்த கால யுத்தம் காரணமாக பல்வேறு இடப்பெயர்வுகளுக்குப் பின் தற்போது எமது மக்கள் தங்களது சொந்த இடங்களில் மீளக்குடியேறி வாழ்ந்து வருகின்றனர். மேலும், மீளக்குடியேறி வாழ்வதற்காகப் போராடிக் கொண்டு இருக்கின்றனர்.

இந்த நிலையில் தற்போது புதிது புதிதாக தொல்பொருள் திணைக்களத்திற்கு சொந்தமான இடங்கள் என அங்கே இருக்கின்ற பெரும்பாலான நிலங்களை, எமது மக்களின் வரலாற்று ரீதியிலான மதவழிபாட்டுத் தலங்களைப் பிடித்து வைத்துக் கொண்டு, எமது மக்களின் உணர்வுகளுடன் நீங்கள் விளையாடிக் கொண்டிருப்பீர்கள் என்றால், இந்த நாட்டில் நீங்கள் எத்தனைக் கோடி மில்லியன் ரூபா செலவழித்தாலும், தேசிய நல்லிணக்கம் என்பது கானல் நீராகவே இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

எனவே, உண்மையிலேயே இந்த நாட்டில் அனைத்து மக்களும் சம உரிமை கொண்டவர்களாக வாழ வேண்டுமென்றால் ஏனைய மதங்களைச் சார்ந்த மக்களை உணர்வு ரீதியில் புண்படுத்தாத வகையில் உங்களது செயற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இவ்வாண்டுக்கான வரவுசெலவுத்திட்ட விவாதத்தின், புத்தசாசன மற்றும் வடமேல் மாகாண அபிவிருத்தி அமைச்சு – வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு என்பன தொடர்பான குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தொல்பொருள் அடையாளங்கள் கொண்ட தொல்லியல் இடங்கள் காணப்படுமாயின் அதனை அந்தந்த மாவட்டங்களில் வாழுகின்ற இன, மதங்களைச் சார்ந்த தொல்லியல் நிபுணர்களை – வரலாற்று பேராசான்களைக் கொண்டு அடையாளப்படுத்துங்கள்.

இந்த நாட்டில் வாழுகின்ற அனைத்து மக்களுக்கும் என வரலாறுகள் இருக்கின்றன. அந்தந்த இன மக்கள் பரம்பரை, பரம்பரையாக வரலாற்று ரீதியாக வாழ்ந்து வருகின்ற பகுதிகளில் அவர்கள் சார்ந்த வரலாற்றுத் தொல்லியல்கள் இருக்கலாம். எனவே, தொல்பொருள் திணைக்களத்தில் அந்தந்த இன ஆய்வாளர்களை இணைத்துக் கொள்ள வழிவகைளை மேற்கொள்ள வேண்டும். அல்லது பல்கலைக்கழங்களிலுள்ள தமிழ் மற்றும் இஸ்லாமிய வரலாற்று பேராசான்களின் உதவிகள் பெறப்பட வேண்டும்.

இது எதுவுமே இல்லாமல் கொழும்பிலிருந்து செல்கின்ற அதிகாரிகளாலும், கொழும்பிலிருந்து விடுக்கின்ற தகவல்களின் அடிப்படையில் செயற்படுகின்ற காவல்த்துறையினராலும் இத்தகைய இடங்களைப் பிடிக்கின்ற செயற்பாடுகள் மேற்கொள்ளப்படும் எனில், அது இனங்களுக்கிடையில் மீண்டும், மீண்டும் குரோத மனப்பாங்கினையே வளர்க்கும் என்பதனை நீங்கள் உணர வேண்டும்.

அந்தவகையில் முப்பதாண்டு யுத்தத்திலேயே பாடம் படிக்காத நீங்கள், இனி வேறு எப்போது பாடம் படிக்கப் போகிறீர்கள்? எனக் கேட்க விரும்புகின்றேன்.

Related posts:

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா முன்வைத்த வடமேல் மாகாண “வனமி” இறால் செய்கை ஊக்குவிப்பு திட்டத்திற்கு அமைச்...
வடக்கு வாழ் இந்து குருமார்கள் ஒன்றியத்தினர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் விஷேட சந்திப்பு!
வடக்கு கிழக்கில் காணப்படும் காணி பிரச்சினைக்கு பாதீட்டின் மூலம் விரைவில் தீர்வு கிடைக்கும் - நம்பிக்...