முதலமைச்சர் என்ற பொறுப்பை ஏற்றுக்கொள்ள நான் பின்நிற்கப்போவதில்லை – டக்ளஸ் எம்.பி. தெரிவிப்பு!

Sunday, August 4th, 2019

யார்? யாரை ஆதரித்தாலும் கடந்த காலத் தவறுகளையும், படிப்பினைகளையும் கவனத்தில் கொண்டு தமிழ் மக்கள் எதிர்காலத்திற்கான தீர்மானத்தை எடுக்கவேண்டும். அவ்வாறான தெளிவான தீர்மானத்தை எடுப்பார்கள் என்றும், பலமான சூழலில் எமது மக்களுக்கும், மண்ணுக்கும் பணி செய்வதற்கு எமக்கு தமிழ் மக்கள் ஆதரவளிப்பார்கள் என்றும் நம்புகின்றேன். எமது கரங்களை பலப்படுத்தினால் அது தமிழ் மக்களுக்கே பயன்களாக மாறும் என்பதே எமது உத்தரவாதமாகும் என ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர்’ நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தள்ளார்.

வீரகேசரி வார இதழுக்கு வழங்கிய விஷேட நேர்காணலிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அந்த நேர்காணலின் முழு வடிவம் வருமாறு –

கேள்வி:-

அடுத்து ஜனாதிபதி தேர்தலொன்று நடைபெறுவதற்குரிய அதிக சாத்தியப்பாடுகள் உள்ளநிலையில் தாங்கள் ஆதரிக்கும் தரப்பில் எத்தகையதொரு வேட்பாளர் நிறுத்தப்பட வேண்டும் என்று கருதுகின்றீர்கள்?

பதில்:-

நாடு யுத்தமற்ற சூழலிலும் தேசிய இனப்பிரச்சனைக்கு நிரந்தரமான தீர்வொன்றைக்காணாமல் இனங்களுக்கிடையே நம்பிக்கையீனமும், முரண்பாடுகளும் தொடர்கின்ற இந்தச் சூழ்நிலையை அரசியல் தீர்வொன்றின் ஊடாக தடுத்து நிறுத்தி நாட்டில் இன ஐக்கியத்தையும், தேசிய ஒருமைப்பாட்டையும் ஏற்படுத்தக் கூடிய தலைமையை எதிர்பார்க்கின்றோம்.

அத்தகைய துணிச்சலான ஒரு தலைமைத்துவம் நாட்டுக்கு அமையும்போதுதான், நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடியிலிருந்தும், புதிய பயங்கரவாத அச்சுறுத்தலில் இருந்தும் நாட்டையும், நாட்டு மக்களையும் பாதுகாக்க முடியும். நிலையான ஆட்சி அமையும்போதுதான் நாடு முன்னோக்கிச் செல்லமுடியும். எமது நாட்டின் பெரும்பொருளாதார எதிர்பார்ப்புகளான ஏற்றுமதித்துறை மற்றும் சுற்றுலாத்துறை போன்றவற்றை மேலும் பலமாக கட்டியெழுப்ப முடியும்.

அதன் ஊடாக தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்தி பட்டதாரிகள் மற்றும் தகமையுடையவர்கள் என அனைவருக்கும் தொழில் வழங்கி அவர்களின் எதிர்காலத்தை நம்பிக்கையுடையதாக மாற்ற வேண்டியது அவசியமாகும்.

நாட்டின் வளங்கள் சூறையாடப்படுவதையும், ஊழல், மோசடிகள், போதைப்பொருள் விநியோகம் போன்ற சட்டவிரோத மற்றும் சமூகவிரோதச் செயல்களை துணிச்சலாக எதிர்கொண்டு தடுக்க முடிந்த தலைமைத்துமே எமது நாட்டின் தேவையாக இருக்கின்றது.

கேள்வி:-  

இவ்விடயம் குறித்த தாங்கள் ஆதரிக்கும் தரப்புடன் பேச்சுக்களை நடத்தினீர்களா?

பதில்:-

யார்? தமது கட்சி அல்லது கூட்டணிகளின் சார்பில் ஜனாதிபதி வேட்பாளர் என்பதை இதுவரை எவரும் தெளிவாக வெளிப்படுத்தவில்லை. இதுவரையுமே வேட்பாளர் யார்? என்பது குறித்த ஊகங்களே உலா வருகின்றன.

ஆனாலும் பிரதான கட்சிகளுடன் பேச்சுவார்த்தைகளை நடத்திவருகின்றோம். கடந்த காலத்தில் பிரதானமான அரசியல் கட்சிகள் ஜனாதிபதித் தேர்தல்களின்போது தமிழ் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாமை தொடர்பாகவும், தமிழ் மக்களை தொடர்ந்தும் ஜனாதிபதிகளும், ஆட்சியாளர்களும் ஏமாற்றி வந்துள்ளது தொடர்பாகவும் எமது அதிருப்திகளையும் நாம் சுட்டிக்காட்டியுள்ளோம்.

இலங்கையின் வரலாற்றில் மாறி மாறி ஆட்சிக்கு வந்திருந்த ஆட்சியாளர்கள் தேசிய இனப்பிரச்சனையைத் தீர்ப்பதிலும், தமிழ் மக்களுக்கு தாங்கள் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதிலும் நேர்மையாக நடந்து கொள்ளவில்லை என்றபோதும், நல்லாட்சி என்று ஆட்சி பீடமேறியவர்களும், அவர்களை ஆட்சியில் அமர்த்தியவர்களும் கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போதும், அதன் பின்னர் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலின்போதும் தமிழ் மக்களுக்கு அதிகமான வாக்குறுதிகளை வழங்கியதுடன், நம்பிக்கையையும் கொடுத்தார்கள்.

அதில் தென் இலங்கை ஆட்சியாளர்களை விடவும் அவர்களுக்காக வக்காளத்து வாங்கிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரே இனப்பிரச்சனையை சமஷ்டி அடிப்படையில் தீர்ப்பதாகவும், போர்க் குற்றங்களை சர்வதேச நீதிப் பொறிமுறையை ஏற்படுத்தி விசாரிப்பதாகவும், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களை கண்டுபிடித்துத் தருவதாகவும், தமிழ் அரசியல் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை பெற்றுத்தருவதாகவும், படையினர் வசமுள்ள எமது மக்களுக்கச் சொந்தமான காணிகளை மீட்டுத் தருவதாகவும்,எமது இளைஞர், யுவதிகளுக்கு ஆயிரக்கணக்கான வேலை வாய்ப்புகளைப் பெற்றுத்தருவதாகவும் வாக்குறுதி வழங்கினார்கள்.

ஆனால் இந்த ஆட்சிக்காலம் நிறைவுக்கு வரக்கூடிய சூழலில் இப்போது ஒரு ஜனாதிபதித் தேர்தலும் அதைத் தொடர்ந்து நாடாளுமன்றத் தேர்தலும் நடைபெறக் கூடிய அரசியல் மாற்றங்களும் நடந்தேறிக் கொண்டிருக்கும் நிலையிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரால் தமிழ் மக்களுக்கு வழங்கப்பட்ட எந்தவொரு வாக்குறுதியும் நிறைவேற்றப்படவில்லை. தமிழ் மக்கள் நம்ப வைக்கப்பட்டு ஏமாற்றப்பட்டிருக்கின்றார்கள்.

எனவேதான் தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வு கிடைக்காமல் போனதற்கும், தமிழ் மக்களின் பிரதான பிரச்சனைகள் தீர்க்கப்படாமலிருப்பதற்கும் தென் இலங்கை ஆட்சியாளர்கள் மட்டும் காரணமல்ல. காலத்திற்குக் காலம் தமிழ் மக்களின் வாக்குகளை அபகரித்து அரசியல் சுயலாபங்களை தாமும், தமது குடும்பங்களுமாக அனுபவித்துவிட்டு தமிழர்களை நட்டாற்றில் விட்ட பெரும் துரோகத்தைச் செய்து, பிரச்சனைகளை தீர்க்க சந்தர்ப்பங்கள் கிடைத்தும் அதை துஷ்பிரயோகம் செய்த தமிழ்த் தலைமைகளுமே காரணம் என்பதை நான் தொடர்ச்சியாக கூறிவருகின்றேன்.

இதைத்தான் தற்போதைய ஆட்சியளர்களுக்கு யானைக்கு தும்பிக்கையாக இருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர், தமிழ் மக்களுக்கு நம்பிக்கையாக இருக்கவில்லை என்று கூறிவருகின்றேன்.

கேள்வி:-

தென் இலங்கை கட்சிகளோடு ஜனாதிபதித் தேர்தல் குறித்து பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டிருப்பதாகக் கூறுகின்றீர்கள். அப்பேச்சு வார்த்தைகளில் தாங்கள் முன்வைத்த பிரதான நிபந்தனைகள் என்ன அவை ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளனவா?

பதில்:-

எமது நிபந்தனைகள் ஐந்து வருடத்திற்கு ஒரு முறை மாற்றமடைவதல்ல. நாம் ஐக்கிய இலங்கைக்குள் சமாதான சகவாழ்வையே ஆரம்பத்திலிருந்து வலியுறுத்தி வருகின்றோம். தமிழ் மக்கள், தமிழர்களாக இருக்கும் அதேவேளை இலங்கையர்களாகவும் இருக்கவே விரும்புகினறார்கள்;, தமிழர்களாக இருப்பதற்காக இலங்கையர் என்பதை விட்டுக் கொடுப்பதற்கோ, இலங்கையர் என்பதற்காக தமிழர்கள் என்பதை விட்டுக்கொடுப்பதற்கோ தமிழ் மக்கள் ஒருபோதும் தயாராக இல்லை என்பதையே எல்லாத் தரப்புகளிடமும் நாம் வலியுறுத்துகின்றோம்.

தேசிய இனப்பிரச்சனைக்கு அரசியல் தீர்வொன்று காணப்படுவதற்கு இலங்கை, இந்திய ஒப்பந்தத்தைத் தொடர்ந்து ஏற்படுத்தப்பட்ட 13ஆவது திருத்தச் சட்டமானது ஏற்கனவே இலங்கையின் அரசியலமைப்பில் ஏற்றுக்கொள்ளப்பட்டிருப்பதால், உடனடியாக அதை முழுமையாக நடைமுறைப்படுத்துவதிலிருந்து ஆரம்பித்து நிலையான தீர்வைநோக்கி முன்னேற முடியும் என்பதே எமது நடைமுறைச்சாத்தியமான நம்பிக்கையாகும் இதையே நாம் வலியுறுத்துகின்றோம்.

அதேநேரம் தமிழ் மக்கள் எதிர்கொண்டுள்ள ஏனைய கோரிக்கைகள் தொடர்பிலும் அரசியல் ரீதியாக குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் தீர்வுகளைப் பெற்றுக்கொடுக்க வேண்டும் என்ற உத்தரவாதம் எமக்குக் கொடுக்கப்பட வேண்டும் என்பதையும் வலியுறுத்துகின்றோம். இந்தப் பிரச்சனைகளுக்கான தீர்வானது புதிய ஜனாதிபதி பதவி ஏற்றதன் பின்னர் ஆரம்பிக்கப்பட வேண்டும் என்றும், புதிய ஆட்சி ஏற்படுத்தப்பட்டு ஆறு மாதம் அல்லது ஒரு வருடத்திற்குள் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட்டு, தீர்வுகாணப்பட வேண்டும் என்பதை எமது முதன்மையான நிபந்தனையாகவே முன்வைக்கின்றோம்.

அதேபோல் வடக்கு கிழக்கு மாகாணத்தில் ஒரு லட்சம் வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தி எமது இளைஞர், யுவதிகளுக்கும், முன்னாள் இயக்கப் போராளிகள், கைம்பெண்கள் ஆகியோருக்கு வழங்கி அவர்களை சுய பொருளாதாரத்தில் முகம் உயர்த்தி வாழச்செய்வதற்கும், 40 வருடங்களுக்கு மேலாக அபிவிருத்தியில் பலவிதமான பின்னடைவுகளைக் கண்டுள்ள வடக்கு கிழ்க்கு மாகாணங்களை எல்லாவிதத்திலும் தூக்கி நிறுத்தும் பொறுப்பு எமக்கு மக்கள் மீது கரிசனை உள்ள சரியானவர்களிடம் வழங்கப்பட வேண்டும் என்பதையும் எமது கோரிக்கைகளாக முன்வைத்துள்ளோம்.

கேள்வி:-

தாங்கள் ஆதரிக்கும் தரப்பு ஒட்டுமொத்தமாக சிறுபன்மையின மக்களுக்கு எதிரான நிலைப்பாட்டினைக் கொண்டிருப்பதாகவும் தமிழ், முஸ்லிம் தரப்புக்கள் ஐ.தே.க தலைமையிலான கூட்டணியையே ஆதரிப்பதற்கு அதிகளவு சாத்தியப்பாடுகள் உள்ள நிலையில் தங்கள் ஆதரவு தரப்பின் வெற்றி சாத்தியமாகுமா?

பதில்:-

நாங்கள் இதுவரை யாரை ஆதரிக்கப்போகின்றோம் எனபதை தீர்மானிக்கவில்லை. இவ்விடயத்தில் நாங்கள் அவசரப்பட முடியாது. ஏன் என்றால் நாங்கள் தமிழ் மக்களிடம் ஆட்சியாளர்களை நம்புங்கள் என்றோ, அரசுகளை நம்புங்கள் என்றோ கூறுவதுமில்லை. பின்னர் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் இருந்துவிட்டு, ஜனாதிபதி ஏமாற்றிவிட்டார் என்றோ, பிரதமர் நம்பிக்கைத்துரோகம் செய்துவிட்டார் என்றோ புலம்புவதுமில்லை.

நாம் ஆட்சியாளர்களுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தினாலும், இணக்கப்பாடுகளைக் கண்டாலும் எமது மக்களுக்கு எமது வேலைத்திட்டங்களையே வாக்குறுதிகளாகக் கூறியிருக்கின்றோம். நாம் வழங்கும் வாக்குறுதிகளை நிறைவேற்றுவது எமது பொறுப்பு. துரதிஷ்டவசமாக கடந்த காலத்தில் எமக்கு போதுமான அரசியல் பலம் கிடைக்கவில்லை ஆகையால் எமக்கு கிடைக்கப்பெற்ற அரசியல் பலத்துக்கு ஏற்றவாறு நாம் எம்மால் முடிந்ததையும், எமது முயற்சிகளுக்கு ஏற்றவகையிலும் பல பணிகளை செய்திருக்கின்றோம். யுத்தத்தில் அழிந்துபோன வடக்கு மாகாணத்தை துரிதமாக மீளக்கட்டி எழுப்பியதில் எமது முயற்சிகளும், அர்ப்பணிப்புகளுமே பிரதான காரணங்களாக இருந்துள்ளது என்பதை எவரும் மறுக்கமுடியாது.

யார்? யாரை ஆதரித்தாலும் கடந்த காலத் தவறுகளையும், படிப்பினைகளையும் கவனத்தில் கொண்டு தமிழ் மக்கள் எதிர்காலத்திற்கான தீர்மானத்தை எடுக்கவேண்டும். அவ்வாறான தெளிவான தீர்மானத்தை எடுப்பார்கள் என்றும், பலமான சூழலில் எமது மக்களுக்கும், மண்ணுக்கும் பணி செய்வதற்கு எமக்கு தமிழ் மக்கள் ஆதரவளிப்பார்கள் என்றும் நம்புகின்றேன். எமது கரங்களை பலப்படுத்தினால் அது தமிழ் மக்களுக்கே பயன்களாக மாறும் என்பதே எமது உத்தரவாதமாகும்.

கேள்வி:-

ஜனாதிபதி தேர்தல் மற்றும் வேட்பாளர் தொடர்பில் தமிழ்த் தரப்புக்கள் தமிழ் மக்கள் மத்தியில் பல்வேறு கருத்துக்களை பிரஸ்தாபிக்க ஆரம்பித்துள்ள நிலையில் தாங்கள் என்ன கூற விளைகின்றீர்கள்?

பதில்:-

தமிழ் மக்கள் தேர்தல்களிலிருந்து ஒதுங்கி இருப்பதால் எவ்விதமான நன்மைகளும் ஏற்படப்போவதில்லை. பொய்யான வாக்குறதிகளையும், நிறைவேற்ற முடியாத வாக்குறதிகளையும் அள்ளிவீசும் கபடதாரிகளையும், அவர்களின் உசுப்பேற்றல்களையும் நம்பி அதற்கு எடுபடாமல், மக்களோடு வாழ்ந்துகொண்டு, கிடைத்த சந்தர்ப்பங்களைப் பயன்படுத்தியும், சந்தர்ப்பங்களை உருவாக்கியும் தம்மால் முடிந்த சேவையை மக்களுக்காக செய்தவர்களுக்கு ஒரு வாய்ப்பை வழங்கும் தீர்மானத்தையே தமிழ் மக்கள் எடுக்கவேண்டும்.

கேள்வி:-

இனப்பிரச்சினை தீர்வு முதல் அனைத்து விடயங்களிலும் தென்னிலங்கை தலைவர்கள் மீது தமிழ் மக்களின் நம்பிக்கை வலுவிழந்துள்ள நிலையில் தொடர்ந்தும் எந்த அடிப்படையில் அவர்கள் அபிலாஷைகளை நிறைவேற்றுவார்கள் என்று எதிர்பார்ப்புடனான நம்பிக்கை கொள்ள முடியும்?

பதில்:-

மீண்டும் கூறுகின்றேன். தென் இலங்கைத் தலைவர்கள் மட்டுமல்ல, தமிழ் மக்களின் பிரச்சனைகளைத் தீர்க்க சந்தர்ப்பங்கள் கிடைத்தும் அதை சரியாக பயன்படுத்திக் கொள்ளத் தவறிய தமிழ்த் தலைமைகளும் தமிழ் மக்களுக்கு நம்பிக்கைத் துரோகம் செய்துள்ளனர். எனவே தமிழ் மக்கள் அரசுகளை நம்புங்கள் என்றோ, அவர்கள் கொடுக்கும் வாக்குறுதிகளை நிறைவேற்றித் தருவதற்கான உத்தரவாதத்தை ஏற்றுக்கொள்ளுங்கள் என்றோ கூறுவதற்கோ நான் ஒருபோதும் தயாராக இல்லை.

நாம் வழங்கும் வாக்குறுதிகள் நடைமுறைச்சாத்தியமானவையாகும். அதற்கு பொறுப்பை நாமே ஏற்றுக்கொள்கின்றோம்.

வாக்குறுதிகளை முன்வைத்து மக்களிடம் ஆணைகேட்கும் போது மக்கள் எமக்கு வாக்களிக்கும் அதேவேளை நாம் குறிப்பிடும் வேட்பாளருக்கும் தமது ஆணையை வழங்குவார்களானால், மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை உரிய காலத்திற்குள் நிறைவேற்றித் தரும் பொறுப்பை நாமே நிறைவேற்றுவோம்.

இந்தச் சந்தர்ப்பத்தில் இன்னொரு விடயத்தையும் நான் பதிவு செய்ய விரும்புகின்றேன். அதாவது ஆட்சி மாற்றம் ஒன்றை ஏற்படுத்தி நல்லாட்சியை ஏற்படுத்தியதாகக் கூறிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர், இந்த அரசு அவசரம் அவசரமாக கொண்டுவந்த 19ஆவது திருத்தச் சட்டத்தை உருவாக்குவதிலும், நிறைவேற்றுவதிலும் பிரதானமான பங்களிப்பைச்  செய்திருந்தார்கள். அதன் ஊடாக ஆட்சியாளர்களைப் பாதுகாக்கவும், ஆட்சியாளர்கள் ஊடாக தமது சுய லாபங்களைப் பாதுகாப்பதற்குமே முயற்சித்தார்களே ஒழிய, தமிழ் மக்களின் நலன்கள் தொடர்பாக அதில் அக்கறை செலுத்தவில்லை. அந்த சந்தர்ப்பத்தை தவறவிட்டவர்கள் இப்போது புதிய அரசியலமைப்பு ஊடாக இனப்பிரச்சனைக்கு தீர்வைப் பெற்றுக்கொள்ள முயற்சித்ததாகக் கூறுவது வேடிக்கையாகும்.

கேள்வி:-

தங்களுக்கும் ஐ.தே.கட்சி தலைமையிலான கூட்டணிக்கும் இடையிலும் இரகசியப்பேச்சுக்கள் நடைபெற்றதாக கூறப்படுகின்ற நிலையில் அவை தோல்வியடைந்தமைக்கான காரணம் என்ன?

பதில்:-

நாம் யாருடனும் இரகசியமான பேச்சுவார்த்தைகளை நடத்துவதில்லை. இரகசிய பேச்சுக்களை நடத்தியதாகவும், இதயத்தோடு இதயமாக ஒப்பந்தங்களைச் செய்து கொண்டதாகவும் கூறிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தமிழ் மக்களுக்கு எதையும் பெற்றுக்கொடுக்கவில்லை. தமிழ் மக்களின் பிரச்சனைகளே எமது பிரதான பிரச்சனைகள் எனவே அவை இரகசியமானவை அல்ல. ஆகவே தமிழ் மக்களின் பிரச்சனைகள் தொடர்பில் எவருடனும் இரகசிய பேச்சுக்களை நடத்தவேண்டிய அவசியமில்லை. மக்களை ஏமாற்றவும், தமது சுய லாபங்களை அடைந்து கொள்ளவுமே அவ்வாறான இரகசிய பேச்சுக்கள் கூட்டமைப்புக்கு உதவியிருக்கின்றது.

எமக்கு தனிப்பட்ட நலன்கள் தொடர்பாக எவருடனும் இரகசியப் பேச்சுக்கள் நடத்தவேண்டிய தேவை இல்லை. தமிழ் மக்களின் பிரச்சனைகளையும் இரகசியமாக பேச வேண்டிய தேவை இல்லை. அவ்வாறான இரகசிய பேச்சுக்களால் எதுவும் ஆகப்போவதில்லை. அவ்வாறான இரகசியப் பேச்சுக்கள் தமிழ் மக்களுக்கும், சிங்கள மக்களுக்கும் தேவையற்ற சந்தேகங்களையே ஏற்படுத்தும்.

நாம் நடைமுறைச்சாத்தியமான பேச்சுவார்த்தைகளையே நடத்துவோம். நிலவை பிடுங்கி பூமியில் நடவேண்டும் என்றோ, நட்சத்திரங்களை எடுத்துவந்து வீட்டுக்கூரைகளில் பூட்டிவைக்க வேண்டும் என்றோ யாருடனும் அசாத்தியமான நிபந்தனைகளை முன்வைத்துப் பேசுவதில்லை. எனவே யாருடனான எமது பேச்சுவார்த்தைகளும் தோல்வியடைய வாய்ப்பில்லை.

கேள்வி:-

இனப்பிரச்சினைக்கான தீர்வுக்கு 13ஆவது திருத்தச்சட்டத்தின் பிரகாரம் அமுலாக்கப்பட்டுள்ள மாகாண சபைகள் முறைமையே ஆரம்பபுள்ளி என்ற நிலைப்பாட்டிலிருக்கும் தாங்கள் அவற்றுக்கான தேர்தல் தாமதப்படுத்தப்பட்டுக் கொண்டிருப்பது பற்றி கரிசனை கொண்டுள்ளீர்களா?

பதில்:-

மாகாணசபைகளுக்கான தேர்தல்கள் உரிய காலத்தில் நடத்தப்பட்டு மக்கள் பிரதிநிதிகளால் அந்த சபைகள் நிர்வகிக்கப்பட வேண்டும். மக்கள் மீது அக்கறையுள்ள சரியான மக்கள் பிரதிநிதிகளால் மாகாணசபைகளும், உள்ளுராட்சி சபைகளும் நிர்வகிக்கப்படும்போதே மக்கள் தமது பிரச்சனைகளுக்கான தீர்வுகளை தமது பிரதிநிதிகள் ஏடாக தீர்த்துக்கொள்ள முடியும்.

அதிகாரிகள், ஆணையாளர்கள், ஆளுனர்கள் நிர்வாகங்களை நடத்தும்போது, மக்களின் கோரி;க்கைகள், தேவைகள் உரிய காலத்தில், உரிய தீர்வைப் பெற்றுக்கொள்ள முடியாத நிலைமையே இருக்கும். எனவே மாகாணசபைகளுக்கு காலம் தாமதிக்காமல் தேர்தல்களை நடத்த வேண்டும்.

தேர்தல் முறைமை தொடர்பாக பல குழப்பங்கள் இருக்கின்றன. எல்லை நிர்ணயங்கள் தொடர்பாக சிறிய கட்சிகளிடையே கருத்து வேறுபாடுகள் இருக்கின்றன. எனவே புதிய தேர்தல் முறைமையில் தேர்தலை நடத்துவதற்கான சூழல் ஏற்படும்வரை காலத்தை இழுத்தடிப்புச் செய்யாமல், இல்லாது செய்யப்பட்ட பழைய தேர்தல் முறைமையை மீண்டும் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றிக்கொண்டு பழைய முறைமையிலேனும் தேர்தலை நடத்த வேண்டும் என்பதே எமது கோரிக்கையாகும்.

கேள்வி:-

மாகாண சபை தேர்தல் நடத்தப்படுகின்றபோது வடக்கு மாகாண சபையின் முதலமைச்சர் வேட்பாளராக களமிறங்குவதில் உறுதியாக இருக்கின்றீர்களா?

பதில்:-

மாகாணசபை முறைமையை பாதுகாத்து பலப்படுத்துவதன் ஊடாக தமிழ் மக்கள் தமது அரசியல் இலக்கை அடைந்துகொள்ள முடியும் என்ற நம்பிக்கை எமக்கு இருக்கின்றது. அந்த வகையில் மாகாணசபையை பொறுப்பேற்று அதை நிறைவாக செயற்படுத்துவதன் ஊடாக வட மாகாணத்தில் பாலாறும், தேனாறும் ஓடச் செய்வேன் என்று கூறிவந்திருக்கின்றேன்.

பாலாறும், தேனாறும் ஓடச் செய்வேன் என்று நான் கூறுவது பாலையும், தேனையும் ஊற்றி ஓடவிடுவதல்ல. எமது மாகாணத்தின் உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவதும், வளங்களை அடையாளம் கண்டும், தேவையான மூல வளங்களை இறக்குமதி செய்தும் எமது மாகாணத்தில் தொழில்துறைகளை வளர்க்கவும், புதிய தொழில்துறைகளை ஏற்படுத்தவும் கடுமையான முயற்சிகளை முன்னெடுப்பதுடன், புலம்பெயர் தேசங்களில் வாழும் எம்மவர்கள் எவ்வாறு தமது எவ்வாறு நிச்சயப்படுத்தப்பட்ட சூழலில் மகிழ்ச்சியாகவும், பொருளாதார வசதியோடும் வாழ்கின்றார்களோ, அதுபோல் இங்கு வாழும் எமது மக்களும் பொருளாதார தன்னிறைவுடன், மகிழ்ச்சியாக வாழும் சூழலை ஏற்படுத்தி எமது மக்கிடையே எதிர்காலம் மீதான நம்பிக்iகையை கட்டியெழுப்பி எமது மாகாணத்தை வளமான தேசமாகக் கட்டியெழுப்புவேன் என்பதையே நான் அவ்வாறு கூறுகின்றேன்.

புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்களின் உதவிகளையும், பங்களிப்புக்களையும் பெற்றுக்கொண்டு எமது மக்களின் வறுமையைப் போக்கவும், அவர்களை சுயபொருளாதாரத்தில் உயர்த்தவும் திட்டமிட்டு காரியங்களை நகர்த்த வேண்டும்.

இவ்வாறு திட்டமிட்டு அபிவிருத்தியாலும், பொருளாதாரத்தாலும் மாகாணத்தை தூக்கி நிறுத்தினால், நாம் கனவு காணும் தமிழர் தேசத்தை எமது காலத்திலேயே உருவாக்க முடியும் என்ற அசைக்கமுடியாத நம்பிக்கையுடனேயே எனது அரசியல் முயற்சிகள் தொடர்கின்றன.

நான் முதலமைச்சராக இருந்து சாதிக்க நினைக்கும் காரியங்களை சாத்தியப்படுத்தும் விருப்பத்தை தமிழ் மக்களும் வெளிப்படுத்துவார்களானால், அதற்காக நாம் காட்டும் திசைவழி நோக்கி ஓரணியாகத் திரண்டு மக்கள் எமது கரங்களை பலப்படுத்துவார்களானால் முதலமைச்சர் என்ற பொறுப்பை ஏற்றுக்கொள்ள நான் பின்நிற்கப்போவதில்லை.

துரதிஷ்டவசமாக கடந்தமுறை வடக்கு மாகாணசபையை பொறுப்பேற்றவர்கள் தமது ஆற்றலற்ற தன்மையாலும், அதிகார துஷ்பிரயோகங்களாலும், மோசடிகளாலும் அந்த சந்தர்ப்பத்தை துஷ்பிரயோகம் செய்திருக்கின்றார்கள்.

தமது இயலாமைகளையும், துஷ்பிரயோகங்களையும் மறைப்பதற்காக தம்மைத்தாமே விசாரிக்கும் விசாரணை ஆணைக்குழுக்களையும் அமைத்து விசாரணை நடத்திய கபடத்தனங்களையும் அவர்களே அரங்கேற்றினார்கள்.

மாகாணசபையில் அதிகாரங்கள் இல்லை என்றும், மாகாணசபை ஊடாக எதையும் சாதிக்கமுடியாது என்றும் கூறிய இவர்களே, மீண்டும் மாகாணசபை தேர்தலில் போட்டியிடுவதற்கும், மீண்டும் மாகாணசபையில் அதிகாரத்து~;பிரயோகங்களைச் செய்வதற்கும் முற்படுகின்றார்கள்.

அதற்காக தனிநபர் கட்சிகளை உருவாக்குவதும், அந்தக் கட்சிகளை இணைத்து அதை ஒரு மெகா கூட்டணி என்று கூறுவதும், அதுவே தமிழ்த் தேசிய இனத்தின் மாற்றுத் தலைமை என்றும் அவர்கள் நாளாந்தம் அறிக்கைகள் விடுவதையும், அதை சில ஊடகங்கள் முன்னுரிமைப்படுத்தி வியாபாரம் செய்வதை பார்க்கும்போது, இது தமிழ் மக்களின் தலைவிதி என்றே எண்ணத் தோன்றுகின்றது.

கேள்வி:-

தாங்கள் அரசியலில் இருந்து ஒதுங்குவதுதென்ற கருத்துப்பட சில கருத்துக்களை வெளியிட்டிருக்கின்றமைக்கான பின்னணி என்ன?

பதில்:-

அது உண்மைதான். தமிழ் அரசியல் தலைமைகளால் நம்பிக்கைத் துரோகம் இழைக்கப்பட்ட தமிழ் மக்களை மாறி, மாறி வந்த தென் இலங்கை ஆட்சியாளர்களும் ஏமாற்றி வந்துள்ளதுடன், பல பாதிப்புக்களையும் ஏற்படுத்தியுள்ளார்கள். அதனைத் தொடர்ந்து மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக தொடர்ந்த யுத்தம் காரணமாக ஈடு செய்ய முடியாத இழப்புக்களை சந்தித்தும் மீள எழ முடியாத அவலத்தில் இருக்கும் தமிழ் மக்களை அதிலிருந்து மீட்க வேண்டிய கடமைப் பொறுப்பு எனக்கு இருக்கின்றது.

ஆயுதப் போராட்டத்தின் ஆரம்பப் போராளிகளில் நானும் ஒருவன் என்றவகையில், எமது தமிழ் மக்களின் அரசியல் உரிமையை வென்றெடுக்கும் இலக்கு நோக்கி தொடர்ந்து போராட வேண்டிய தேவையை உணர்ந்தே தேசிய அரசியலில் ஈடுபட்டு தொடர்ந்தும் முயற்சித்து வருகின்றேன்.

இதுவரையும் எமக்குக் கிடைத்த அரசியல் பலத்தையும், வாய்ப்புகளையும் பயன்படுத்தியும், சந்தர்ப்பங்களை உருவாக்கியும் என்னால் முடிந்ததை இதுவரையும் அதிகமாகச் செய்திருந்தாலும், இன்னும் அதிகமாகச் செய்யவேண்டிய தேவை இருப்பதையும் ஏற்றுக்கொள்கின்றேன். எனவே அதைச் செய்வதற்கான மக்கள் ஆணை எதிர்வரும் சந்தர்ப்பங்களில் கிடைக்கும் என்று நம்புகின்றேன்.

இந்த நிலையிலேயே எதிர்காலத்தில் வரவிருக்கும் சந்தர்ப்பங்களில் தமிழ் மக்கள் எனக்கு அரசியல் ரீதியாக எதிர்பார்க்கும் பலத்தை வழங்காவிட்டால், தொடர்ந்தும் நான் அரசியலில் இருப்பதில் அர்த்தமில்லை என்பதாலும், வேறு தமிழ் அரசியல் கட்சித் தலைவர்களைப்போல் ஓய்வுகால அரசியல் நடத்தவும் நான் விரும்பவில்லை. என்பதையே நான் அன்மையில் கூறியிருந்தேன்.

(நன்றி வீரகேசரி வார இதழ்)

Related posts: