முகமாலை பகுதியில் மிதிவெடிகளை அகற்றும் பணிகள் விரைவுபடுத்தப்பட வேண்டியது அவசியமாகும்! டக்ளஸ் தேவானந்தா

Sunday, May 15th, 2016

கிளிநொச்சி மாவட்டத்தில் இன்னும் மிதிவெடிகள் அகற்றப்படாத பகுதிகளில் அவற்றை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுவரும் நிலையில் அப்பணிகள் மேலும் விரைவுபடுத்தப்பட வேண்டியது அவசியமாகும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி(ஈ.பி.டி.பி.)யின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் வலியுறுத்தியுள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்திருக்கும் செயலாளர் நாயகம் அவர்கள், யுத்தம் முடிவடைந்து பல வருடங்கள் கழிந்துள்ள நிலையில் வடக்கில் சில பகுதிகளில் இன்னமும் மிதிவெடிகள் அகற்றப்படாத நிலையே காணப்படுகின்றது. இதனால் பல குடும்பங்கள் மீளக் குடியேற இயலாத நிலையில், வாழ்வாதாரங்களும் அற்று பல்வேறு சிரமங்களை அனுபவித்து வருகின்றனர்.

இந்த வகையில், கிளிநொச்சி மாவட்டத்தில் முகமாலை, இத்தாவில், வேம்பொடுகேணி போன்ற பகுதிகளில் மீளக் குடியேற வேண்டிய சுமார் 257 குடும்பங்கள் மிதிவெடிகள் அகற்றப்படாத நிலையில் மீள்குடியேறாமலுள்ளனர் எனத் தெரியவருகிறது. அதிகளவில் யுத்தம் இடம்பெற்ற பகுதியாக அப்பகுதி இருப்பதன் காரணமாக மிதிவெடிகள் அகற்றுவதில் சிரமங்கள் இருப்பினும், பல குடும்பங்கள் மீளக் குடியேற வழியின்றி இருப்பதால் இதனைக் கருத்தில்கொண்டு இவ்வாறான பகுதிகளில் மிதி வெடிகளை அகற்றுவதற்கு முன்னுரிமை வழங்கப்பட்டு, துரித செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: