மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவால் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் சட்டவிரோதமானவை – டக்ளஸ் எம்.பி. குற்றச்சாட்டு!

Saturday, May 11th, 2019

அரச சுற்றறிக்கையின்படி மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு தலைவர்களாக அமைச்சரவை அந்தஸ்துள்ள சிரேஸ்ட அமைச்சர் ஒருவரும் பிரதித் தலைவராக அரசாங்கத்தின் சிரேஸ்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரும் தான் பதிவியிலிருக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. ஆனால் தற்போது வடக்கு மற்றும் கிழக்கில் ஒருங்கிணைப்புக்குழு தலைவர் தெரிவு சுற்று நிருபத்தில் கூறப்பட்டவாறு அமைந்திருக்கவில்லை. அந்தவகையில் இதுவரை அவர்கள் தலைமையில் நடைபெற்ற கூட்டங்கள் சட்டவிரோதமானவையாகவே அமைகின்றது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

கட்சியின் யாழ்ப்பாணம் தலைமை அலுவலகத்தில் இன்றையதினம் நடைபெற்ற ஊடகவியலாளர்களுடனான சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –

உள்ளக, உள்நாட்டலுவல்கள், மாகண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் 13.02.2019 ஆம் திகதியையும் 4/2019 ஆம் இலக்கத்தையும் கொண்ட சுற்றறிக்கையின் பிரகாரம், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவானது, அரசாங்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற சிரேஷ்ட அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர் ஒருவரை தலைவராகவும், அரசாங்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற சிரேஷ்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரை உப தலைவராகவும், பிரதேச ஒருங்கிணைப்புக் குழுவானது அரசாங்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரை தலைவராகவும், அரசாங்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற மாகாண சபை உறுப்பினர் ஒருவரை உப தலைவராகவும் கொண்டிருப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன்“மாவட்ட மற்றும் பிரதேச ஒருங்கிணைப்புக் குழு தான் குறித்த மாவட்டம் மற்றும் அந்த மாவட்டத்திலுள்ள பிரதேசங்களினதும் அபிவிருத்தியை ஒருங்கிணைப்புச் செய்யும் அதிகாரம் கொண்டது. அதுமட்டுமல்லாது தமது அதிகார எல்லைக்கு உட்பட்ட அனைத்து அபிவிருத்திக் கருத்திட்டங்களையும் ஒருங்கிணைக்கின்ற மற்றும் மேற்பார்வை செய்கின்ற பிரதான குழுக்களாகவும் அமைகின்றன.

அந்தவகையில் மேற்படி சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விதிமுறைகளுக்கு அமைவாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் செயற்பட்டுவருகின்ற அனைத்து மாவட்ட மற்றும் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்களுக்கான தலைவர்கள் மற்றும் உப தலைவர்கள் நியமிக்கப்படவில்லை என்றே எண்ணத்தோன்றுகின்றது.

கடந்தவருடம் நாட்டிலேற்பட்ட அரசியல் தளம்பல் நிலையின் பின்னர் உருவான அரசினூடாக கொண்டுவரப்பட்ட சுற்றுநிருபத்தின் பிரகாரம் வடக்கு கிழக்கில் அமைக்கப்பட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவர்களது செயற்பாடுகள் சட்டவிரோதமானவையாகவே அமைகின்றது என்றும் அவர் மேலும் குற்றம் சாட்டினார்.

மேலும் இது தொடர்பில் நாடாளுமன்றிலும் குறித்த அமைச்சரிடம் வினா எழுப்பியதாகவும் தெரிவித்த  செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts:


வடக்குக் கிழக்கே தமிழர் தாயகம் - நாடாளுமன்றில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!
மக்கள் நலன்களை முன்னிறுத்தி பொது முடிவுடன் செயற்படுங்கள் – கட்சியின் யாழ் மாவட்ட, பிரதேச நிர்வாக செய...
சவால்களை வெற்றி கொள்ள ஒன்றிணைந்து செயற்படுவோம் - புத்தாண்டு நிகழ்வில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அழைப...