மாணவர்களிடையிலான  மோதல் இனியும் தொடராதிருக்க வழிசெய்ய வேண்டும்!

Friday, July 22nd, 2016

யாழ்ப்பாண பல்கலைக்கழக விஞ்ஞானபீட வரவேற்பு நிகழ்வின்போது மாணவர்களிடையேஏற்பட்ட மோதல் சம்பவமானது எமக்கு மிகுந்த துயரத்தை தந்துள்ளது. இதுபோன்ற மோதல் சம்பவங்கள் இனியும் நிகழாதிருப்பதே ஆரோக்கியமான விடயமாகும் என ஈழமக்கள் ஜனநாயக கட்சி விடுத்துள்ள ஊடக செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் அந்த செய்தியில் –

எமது  மரபுவழியிலான கலை பண்பாட்டு அடையாளங்களின் தனித்துவங்களை பாதுகாக்க விரும்பும் எமது மாணவர்களின் உணர்வுகளை என்றும் நாம் மதிக்கின்றோம்.

எமது மக்களின் இனத்துவ அடையாளங்களுக்காகவும், அரசியல் சமத்துவ உரிமைகளுக்காகவும் அதனுடன் கூடிய இன ஐக்கியத்திற்காகவுமே நாம் இன்றுவரை உழைத்துவருகின்றோம் என்பதில் மாற்றமில்லை. ஆனாலும் எமது மாணவர்களோடு ஒன்றாக கல்வி கற்க வந்திருக்கும் சக இன மாணவர்களின் கலை பண்பாட்டு உணர்வுகளுக்கும் நாம் மதிப்பளித்தே ஆகவேண்டும்.

ஆகவே யாழ். பல்கலைக்கழக நிகழ்வுகளின்போது சகல மாணவர்களும் ஒன்றிணைந்த தீர்மானங்களை எடுத்து அதன் முடிவுகளின் பிரகாரம் செயலாற்றுவதே இதுபோன்ற முரண்பாடுகளையும், மோதல்களையும் தவிர்க்கும் வழிமுறையாகும்.

அரசாங்கம் முன்னெடுக்கும் தேசிய நல்லிணக்க செயற்பாடுகள் அர்த்தமுள்ளதாகவும், எமது மக்கள் உணர்ந்து கொள்ளும்வகையிலும், முன்னெடுக்கப்பட வேண்டியது அவசியம் என்பதை நாம் ஆரம்பத்திலிருந்தே வலியுறுத்தி வருகின்றோம்.அத்துடன் இலங்கையின் சகல பல்கலைக்கழகங்களிலும் பல்லின மக்கள் தொடர்பிலான கலாசாரங்களிலும் பண்பாட்டு விழுமியங்களிலும் சமத்துவத் தன்மை பேணப்படுவதும் அவசியமாகும்.

அதற்கான சமிக்ஞைகள் எமது தரப்பில் இருந்தும் சரிவர வெளிக்காட்டப்பட வேண்டும் என நாம் வலியுறுத்திவரும் நிலையில்,நடந்திருக்கவே கூடாத இதுபோன்ற சம்பவங்களை எண்ணி நாம் வருந்துகின்றோம்.

கடந்த காலங்களில் இதுபோன்ற சம்பவங்களே கறைபடிந்த வரலாற்றுக்கு காரணமாக இருந்திருக்கின்றன.ஆகவே மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட  இம்மோதலுக்கான காரணங்களை ஆராய்ந்து அதற்கு சுமுகமான தீர்வைப் பெற்றுக்கொடுப்பதற்கு துறைசார்ந்தவர்கள் முன்வந்திருப்பதை வரவேற்கின்றேன்.

இந்நிலையில் இச்சம்பவத்தை அரசியல் நோக்கங்களுடன் விமர்சிப்பதும்,இனவாதப் பார்வையோடு அணுகுவதும் தவிர்க்கப்படல் வேண்டும். மாணவர்களின் உயர்கல்வியையும், அவர்களது எதிர்காலத்தையும் பாதிக்கும் இவ்வாறான சம்பவங்கள் எதிர்காலத்தில் நடைபெறாத வகையில், சமூகத்திற்கு நல்வழிகாட்டும் பொறுப்பை உணர்ந்து கொண்டவர்களாக மாணவர்கள் முன்மாதிரியாக செயற்பட வேண்டும் என்பதே எமது விருப்பமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊடகப் பிரிவு

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி


வடக்கின் அபிவிருத்தி குறித்து என்னிடம் கேள்வி கேட்பதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பினர் எவருக்கும் அருகத...
தமிழர்களின் அரசியல் அபிலாஷைகளை வென்றெடுப்பதற்கே அரசுடன் உறவு -  டக்ளஸ் தேவானந்தா!
கிளிநொச்சி மாவட்ட நிர்வாக உறுப்பினர்களுடன் செயலாளர் நாயகம் சந்திப்பு!
ஈ.பி.டி.பியின் பூநகரி பிரதேச காரியாலயம் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களால் நாடாவெட்டி திறந்த...
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களால் மீன் உணவு உற்பத்திப் பிரிவு ஸ்தாபிப்பு!