மாங்குளம் நகர அபிவிருத்தியின் போது வனங்களது பாதுகாப்பு முன்னிலைப்படுத்தப்பட வேண்டும் – டக்ளஸ் தேவானந்தா!

Wednesday, February 22nd, 2017

வடக்கு மாகாணத்திலுள்ள மாங்குளம் நகரை அபிவிருத்தி செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளதாகவும், இந்த அபிவிருத்தி நடவடிக்கையின்போது பனிக்கன்குளம், வன்னிவிளாங்குளம், மாங்குளம் போன்ற பாதுகாக்கப்பட்ட மூன்று வனப் பகுதிகள் அடங்கிய சுமார் 7200 ஏக்கர் வனங்கள் அழிக்கப்பட உள்ளதாகத் தெரிய வரும் நிலையில் இது தொடர்பான தெளிவுகளை வழங்குமாறு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி(ஈ.பி.டி.பி.)யின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா மகா நகரங்கள் மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாடாலி சம்பிக்க ரணவக்கவிடம் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.

இவ்விடயம் குறித்து அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில் –

பனிக்கன்குளம், வன்னிவிளாங்குளம், மாங்குளம் போன்ற வனப் பகுதிகளில் 986 கிலோ மீற்றர் நீளமுடைய நீர் நிலைகள்  காணப்படுவதாகத் தெரிய வருகிறது. அத்துடன், இந்தப் பகுதியிலிருந்தே கனகராயன் ஆறு ஊற்றெடுக்கின்றது. 896 கிலோ மீற்றர் வடி நிலத்தைக் கொண்ட இந்த ஆறு வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி போன்ற மாவட்டங்களின் நீர்த் தேவையை ஓரளவு பூர்த்தி செய்து சுண்டிக்குளத்தில் கடலுடன் கலக்கிறது. வடக்கு மாகாணத்தைப் பொறுத்த வரையில் நீருக்கான தட்டுப்பாடுகள் பரவலாகக் காணப்படுகின்ற நிலையில், இவ்வாறான காடழிப்புகள் இடம்பெறுமானால் மக்களுக்கான குடி நீர், விவாசாய மற்றும் கால்நடைகளுக்கான நீர் போன்ற தேவைகள் தொடர்பில் மேலும் பாரியதொரு பிரச்சினையே ஏற்படக்கூடும் என்பதை, எமது நாட்டில் சூழல் பாதுகாப்பு தொடர்பில் அக்கறையுடன் பல்வேறு நடவடிக்கைகளை ஏற்கனவே முன்னெடுத்திருந்த தாங்கள் அறிவீர்கள்.

அதே நேரம், இந்த வனப் பகுதிகளில் அதிகளவில் காட்டு யானைகள் வாழ்ந்து வரும் நிலையில், மேற்படி காடுகள் அழிக்கப்படுமானால், அப்பகுதிகளில் வாழ்ந்து வருகின்ற மக்களுக்கும், காட்டு யானைகளுக்குமிடையிலான மோதல்கள் அதிகரிக்கும் நிலையும் உருவாகும்.

மாங்குளம் நகரம் அபிவிருத்தி செய்யப்பட வேண்டும் என்பதில் எமக்கு மாற்றுக் கருத்து கிடையாது. எனினும், பாரியளவிலான காடுகள் அழிப்பு என்பது மிக அதிகளவில் நீர் வளத்தைப் பாதிப்பதாலும்,  மேலும் இயற்கை அனர்த்தங்கள் ஏற்படக்கூடும் என்பதாலும், காட்டு யானைகளின் தாக்குதல்கள் பாரியளவில் இடம்பெறும் என்பதாலும், இது எமது மக்களுக்கு பெரும் பாதிப்பினையே கொண்டுதரும் என்பதை இங்கு சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது.

எனவே, நிலையான அபிவிருத்தியை முன்னிலைப்படுத்தி, ஆபத்து மதிப்பீடுகள் மேற்கொள்ளப்பட்டு, மாங்குளம் நகரை அபிவிருத்தி செய்யும் நடவடிக்கையினை, வனப் பகுதிகளை அழிக்காத வகையில் முன்னெடுக்கக்கூடிய சாத்தியங்கள் குறித்து ஆராய்ந்து, அதற்கான செயற்பாடுகளை முன்னெடுக்குமாறு செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Untitled-1 copy

Related posts:

அரசு வெற்றி மனோநிலையோடு இருந்தபோதும் நான் தமிழ் மக்களின் குரலாக அரசின் கோட்டைக்குள் ஒலித்திருக்கின்ற...
மக்களின் தேவைகள் இன்னமும் பூரணப்படுத்தப்பட முடியாத நிலைமையே காணப்படுகின்றன - டக்ளஸ் தேவானந்தா!
மாகாணசபையில் எதுவும் இல்லை என்றவர் மீண்டும் முதல்வர் பதவிக்கு முண்டியடிப்பது ஏன்? - யாழில் ஊடகவியலாள...

இனசமூகங்களிடையேயான நம்பிக்கை சிதைக்கப்படுகின்றன - நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டு!
செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவின் முன்னிலையில் கட்சியின் சார்பில் தெரிவான உள்ளூராட்சி  மன்ற உறுப...
எங்களின் இரத்தம் சிந்தியபோது தமிழக மக்களின் இரத்தம் கொதித்ததை நான் மறக்கவில்லை - அமைச்சர் டக்ளஸ் தேவ...