மாகாணசபை முறைமை உரிமை போராட்டத்திற்கு கிடைத்த முதல் வெற்றி – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி சுட்டிக்காட்டு!

Friday, July 6th, 2018

13வது திருத்தச்சட்டம் என்பதோ அன்றி மாகாணசபைகள் என்பதோ நாங்கள் யாரிடமும் இருந்து  கேட்டு பெற்ற பிச்சையல்ல. மயிலே மயிலே இறகு போடு என்று நாங்கள் யாரிடமும் இதை கேட்டு பெற்றதில்லை. எமது ஆரம்பகால உரிமை போராட்டத்தில் பங்கு பற்றிய அனைத்து விடுதலை இயக்கங்களும் போராடிப்பெற்ற உரிமையிது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டியுள்ளார்.

நாடாளுமன்றில் இன்றைய தினம் நடைபெற்ற மாகாண சபைத் தேர்தல் மற்றும் தேர்தல் முறைகள் பற்றிய சபை ஒத்திவைப்புவேளை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் –

மாகாணசபைகள் குறித்து இந்தச் சபையில் மூவின மக்கள் பிரதிநிதிகள் அனைவரும் ஒன்றுகூடி இன்று நாம் விவாதித்துக் கொண்டிருக்கின்றோம்!

இதை  நான் அகமகிழ்ந்து  வரவேற்கின்றேன். ஏனெனில்,.. 13வது திருத்தச்சட்டம் குறித்தோ,. அன்றி அதன் பிரகாரம் உருவாக்கப்பட்ட மாகாண சபைகள் குறித்தோ தமிழர் தரப்பில் இருந்து பலரும் பேச மறுத்து வந்திருக்கிறார்கள்.

மாகாண சபைத் தீர்வானது உழுத்துப்போன தீர்வென்றும்,.. ஒன்றுக்கும் உதவாத தீர்வென்றும், அதை “துப்புத்தடியால் கூட தொட்டும் பார்க்க மாட்டோம்” என்றும் தமிழர் தரப்பில் இருந்து சிலர் கூறி வந்திருக்கிறார்கள்.

தீண்டப்படாத தீர்வாக நினைத்த மாகாண சபை குறித்து காலம் கடந்தாவது சிலர் பேச வந்திருப்பது “சுடலை ஞானம்” என்றே சொல்லத் தோன்றுகிறது.

இன்று பிறந்திருக்கும் சுடலைஞானம் அன்றே பிறந்திருந்தால் எமது மண்ணில் பேரழிவுகள் நடந்திருக்காது! பெருந்துயரம் நிகழ்ந்திருக்காது!

எமது மக்கள் கொத்துக்கொத்தாக செத்தொழிந்து போன அவலம் இங்கு நடந்திருக்காது!…

“இரு தேசம் ஒரு நாடு” என்று கூறி கற்பனைத் தேரேறி வருவோரும் இது எமக்குத் தீர்வல்ல என்று மாகாண சபை முறைமையை மறுத்தவர்களும்,.. அடுத்த மாகாண சபைத் தேர்தலுக்கே தம்மை தயார் படுத்தி வருகின்றார்கள். அதேவேளை தமது பதவி சுகத்திற்காக தங்களது பதவிக் காலத்தை நீடிக்குமாறு கோரிக்கை விடுத்தும் வருகின்றார்கள்.

இது எமது கட்சியின் அரசியல் தீர்க்கதரிசனத்திற்கு வரலாறு வழங்கியிருக்கும் பெரு வெற்றி என்றே கூற வேண்டும். 13வது திருத்தச்சட்டமோ அதன் பிரகாரம் உருவான மாகாண சபைகளோ தமிழ் தேசிய இனத்தின் முழுமையான தீர்வாகாது.

ஆனாலும்,  13வது  திருத்தச்சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தி, மாகாண சபைகளுக்கு மேலதிக அதிகாரங்களைப் பெற்று, அதாவது இரண்டாவது சபையையும் விசெட அதிகாரங்களையும் பெற்று மேலும் அதைப் பலப்படுத்தி எமது இறுதி இலக்கு நோக்கிச் செல்வதே எமது விருப்பமாகும்.

ஆனாலும்,.. மக்களை உசுப்பேற்றி,.. போலி வாக்குறுதிகளை வழங்கி மக்களின் வாக்குகளை அபகரித்தவர்கள் தாம் பெற்ற அரசியல் அதிகாரத்தை வைத்து முன்நோக்கி நகர்த்தியிருக்கவில்லை.

ஆடம்பர வாகனங்களுக்காகவும். சொகுசு மாளிகைகளுக்காகவும், தமது சுகபோகங்களுக்காகவும், ஒன்றுக்கும் உதவாத நிறைவேறாத பிரேரனைகளுக்காகவுமே கைதடி மாகாண சபையை வெறும் கூச்சலிடும் கூடாரமாகவே இன்று வரை அவர்கள் பயன் படுத்தி வருகின்றார்கள்.

13வது திருத்தச்சட்டம் என்பதோ அன்றி மாகாண சபைகள் என்பதோ நாங்கள் யாரிடமும் இரந்து  கேட்டு பெற்ற பிச்சையல்ல,.

மயிலே மயிலே இறகு போடு என்று நாங்கள் யாரிடமும் இதை கேட்டுப் பெற்றதில்லை. எமது ஆரம்பகால உரிமைப் போராட்டத்தில் பங்கு பற்றிய அனைத்து விடுதலை இயக்கங்களும் போராடிப் பெற்ற உரிமை இது.

ஆனாலும், தமிழ் மக்களின் இரத்தமும் தசையுமாகச் சேர்ந்து பெற்ற இந்த மாகாண சபையின் நாற்காலியில் உட்கார்ந்து இருப்பவர்கள் யார் என்பதையே நான் இன்று கேள்வியாகக் கேட்கின்றேன்.

அரசியல் தீர்வுமின்றி,.. போதிய அபிவிருத்தியுமின்றி நடுக்கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த தமிழ் பேசும் மக்களுக்கு கரையேறி வரும் ஒரு கப்பலாகவே இந்த மாகாண சபை இருந்திருக்க வேண்டும்.

ஆனாலும்,.. அந்தக் கப்பலின் மாலுமியாக இருப்பவர் தமிழ் மக்கள் கரையேற வேண்டிய கலங்கரை விளக்கை நோக்கி அந்தக் கப்பலைக் கொண்டு செல்லாமல் இருப்பது யார் குற்றம்?..

இதுதான் இன்று தமிழ் பேசும் மக்கள் மத்தியில் கேள்விகள் எழுந்திருக்கிறது. வலிகளையும்,..  வதைகளையும் சுமந்த எமது மக்களின் வரலாற்றுடன் பின்னிப் பினைந்தவர்களே எமது மக்களை ஆளும் தகுதி படைத்தவர்கள்.

அந்தவகையில் வலிகள் சுமந்தோரே எம் மக்களுக்கு வழி காட்ட உருத்துடையோர் என கூறிவைக்க விரும்பகின்றேன்.

Related posts:

நீதியான போராட்டத்திற்கு நியாயத்தீர்ப்பு கிடைக்கும் - உடுவில் பாடசாலை மாணவர் சமூகத்திற்கு டக்ளஸ் தேவா...
அரசினால் முன்னெடுக்கப்படுகின்ற திட்டங்களுக்கு தமிழ் மொழியிலும் பெயரிடப்பட வேண்டியது அவசியமாகும் - டக...
யாழ் மாவட்ட கடற்றொழிலாளர்களின் நன்மை கருதி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களால் ஐஸ் பெட்டிகள் வழங்கிவ...