மாகாணசபை தேர்தல் மழையில் முளைத்த அரசியல் காளான்கள் – சத்தியலிங்கத்திற்கு ஈ.பி.டி.பி விளக்கம்!

Monday, December 12th, 2016

வடக்கு மாகாணசபை அமைச்சர்கள் ஊழல் செய்திருக்கின்றார்கள். அவர்களை விசாரிக்க வேண்டும் என்று டக்ளஸ் தேவானந்தா சொல்கின்றார். முதலில் அவருக்கு நாங்கள் என்ன செய்யவேண்டும் என்று பார்க்க வேண்டும். கடந்த காலங்களில் டக்ளஸ் தேவானந்தா என்ன? ஊழல் செய்தவர்,எத்தனைபேரை போட்டுத் தள்ளியவர், எவ்வளவு நிதி வைத்திருந்தவர் என்பது எல்லோருக்கும் தெரியும் என்றும் வடக்கு மாகாணசபை சுகாதார அமைச்சர் சத்தியலிங்கம் வவுனியாவில் கிராமிய சுகாதார நிலையம் ஒன்றை திறந்து வைத்த நிகழ்வில் கூறியிருக்கின்றார்.

எமது செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தொடர்ச்சியாக ஆறுமுறை பாராளுமன்ற உறுப்பினராகவும்,நான்கு முறை அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சராகவும் பதவி வகித்தவர். அக்கால கட்டத்தில் ஊழல் செய்ததாகவோ, அதிகாரத்தை துஸ்பிரயோகம் செய்ததாகவோ எவரும் கூறமுடியாது. கடந்த ஆட்சியாளர்கள் மீது பல்வேறு ஊழல் மோசடிகள் தொடர்பாக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றபோதும், செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா மீது அவ்விதமான எந்த முறைப்பாடுகளும் இல்லை.

ஆனால் ”மலர்ந்தது தமிழ் அரசு” என்று வடக்கு மாகாணசபையை பொறுப்பேற்றவர்கள்,கடந்த மூன்று வருடத்திற்குள் மாகாணசபை நிர்வாகத்தை செயற்திறனோடு முன்னெடுக்கவில்லை என்பதும், இவர்களுக்கு அத்தகைய ஆளுமையும், விருப்பமும் இல்லை என்பதையும் இன்று எமது மக்கள் உணர்ந்துள்ளனர்.

நாடாளுமன்றத்தில் நிதி அமைச்சர் ரவி கரணாநாயக்க உரையாற்றும்போது, வடக்கு மாகாணசபைக்கு கடந்த வருடம் 2300 கோடிரூபாய்களை மத்திய அரசாங்கம் ஒதுக்கியபோதும், 120 கோடிரூபாய்களையே வட மாகாணசபை செலவு செய்திருப்பதாகக் குறிப்பிட்ட நிதி அமைச்சர், அந்த மாகாணசபை திறனற்றுக்காணப்படுவதே இந்தப் பின்னடைவுக்குக் காரணம் என்று கூறியபோது, அவ்வேளையில் சபையில் இருந்த மாவை சேனாதிராசா உள்ளிட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவரும் மறுத்துப்பேசவோ, தமது மாகாணசபை உறுப்பினர்களுக்கு திறன் இருப்பதாகவோ எந்தக் கருத்தையும் முன்வைக்காமல் இருந்தது,அமைச்சரின் குற்றச்சாட்டை ஏற்றுக் கொண்டதாகத்தானே அர்த்தமாகும். இதை சத்தியலிங்கம் தெரிந்திருக்கின்றாரா? அல்லது தெரியாததுபோல் நடிக்கின்றாரா?

வடக்கு மாகாணசபையில் பெரும்பான்மையாகவும், ஆளும்தரப்பாகவும் இருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதலமைச்சரே குற்றச்சாட்டுக்களை ஏற்றுக்கொண்டு தனது நிர்வாகச் சகாக்களான வடக்கு மாகாணசபையின் அமைச்சர்கள் ஊழல் மோசடியிலும், அதிகாரத் துஸ்பிரயோகத்திலும் ஈடுபட்டிருப்பதாக குற்றம் சுமத்தியிருப்பதுடன், அது தொடர்பாக விசாரிப்பதற்க ஒரு விசாரணைக் குழுவையும் நியமித்துள்ளார். இது வினைத்திறனான நடவடிக்கையா? அல்லது வினைத்திறனற்ற செயலா?

இந்த அசிங்கத்தை சத்தியலிங்கத்தால் மறுக்கமுடியுமா? வடக்கு மாகாணசபையில் அமைச்சுக்கள் தொடர்பாக நடந்து கொண்டிருக்கும் ஊழல் மோசடி விசாரணைகளைப் பற்றியே எமது செயலாளர் நாயகம் நாடாளுமன்றத்தில் சுட்டிக்காட்டினாரே தவிர, இல்லாத ஒன்றை அவர் வலிந்து குறிப்பிடவில்லை என்பதை சத்தியலிங்கத்தால் ஏன் பொறுத்துக்கொள்ள முடியவில்லை? எமது மக்களிடம் பொய் வாக்குறுதிகளை வழங்கி, வாக்குகளை அபகரித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர், நாடாளுமன்றத்திலும், மாகாணசபைகளிலும் செய்கின்ற மோசடிகளையும்,அதிகாரத் துஸ்பிரயோகங்களையும் நாம் கண்டு கொள்ளாமல் இருக்க வேண்டும் என்று சத்தியலிங்கம் போன்றவர்கள் விரும்புகின்றார்களா?

வடக்கு மாகாணசபையில் அமைச்சர்கள் ஊழல் மோசடி செய்திருக்கின்றார்கள் என்ற செய்தியிலும், அது தொடர்பான விசாரணையிலும், வடக்கு மாகாணசபை அமைச்சர் என்ற வகையில் சத்தியலிங்கமும் ஊழல்மோசடியிலும்,விசாரணையிலும் குற்றவாளியாக இருப்பதாலா அவருக்கு கோபம் வந்திருக்கின்றது என்பதை அவரே எமது மக்களுக்கு தெளிவுபடுத்தினால் நல்லது. அல்லது வடமாகாண முதலமைச்சர் நியமித்துள்ள ஊழல் விசாரணைக்குழுவுக்கும், முதலமைச்சருக்கும் எதிராக சத்தியலிங்கத்தால் சட்ட நடவடிக்கை எடுக்கமுடியுமா?

இந்தச் சந்தர்ப்பத்தில் சத்தியலிங்கம் தொடர்பாக மக்கள் மத்தியில் முன்வைக்கப்படும் சில கேள்விகளையும் நாம் கேட்கலாம் என்று கருதுகின்றோம். சத்தியலிங்கம் வைத்திய அதிகாரியாக இருந்த காலத்தில் டெங்கு நோய் சம்மந்தமாக அரசாங்கத்தாலும், வெளிநாட்டு நிறுவனங்களாலும், வழங்கப்பட்ட கோடிக்கணக்கான நிதிகளை எங்கு கொண்டு சேர்த்தார். மெனிக் பாமில் தஞ்சமடைந்திருந்த எமது மக்களுக்கு வெளிநாட்டு நிறுவனம் ஒன்றினால் இலவசமாக வழங்கப்பட்ட பெருமளவான மருந்து மாத்திரைகளை சத்தியலிங்கமும், சத்தியலிங்கத்தின் சகாக்களும் சேர்ந்து மலிவு விலையில் வெளியே விற்பனை செய்ததாக மக்கள் கூறுகின்றார்களே.

சத்தியலிங்கம் வெளிநாட்டுக்கு சென்றிருந்த போது எமது புலம் பெயர்ந்து வாழும் உறவுகளிடம் பெருமளவு பணத்தை, தாயகத்தில் உறவுகளுக்கு சேவை செய்வதற்காக என்று சேகரித்த அந்தப் பணம் சத்தியலிங்கத்தின் தம்பியின். தனிப்பட்ட வங்கிக் கணக்கில் வைப்புச் செய்யப்பட்டதே அந்தப் பணத்தில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு ஒரு தண்ணீர் போத்தலாவது வாங்கிக் கொடுக்கப்பட்டதா?சத்தியலிங்கத்தின் தம்பி திடீர் கோடீஸ்வரன் ஆன கதையை சத்தியலிங்கத்தின் சக மாகாணசபை உறுப்பினர் ஒருவர் தனியார் தொலைக்காட்சியில் அம்பலப்படுத்தியதை சத்தியலிங்கம் இன்றுவரை ஏன் மறுக்கவே இல்லை?

வவுனியா வைத்தியசாலை உட்பட வன்னிப் பிராந்தியத்தில் இருக்கும் வைத்தியசாலைகளுக்கு உணவு வழங்கும் ஒப்பத்தத்தை சத்தியலிங்கத்திற்கு தனக்கு வேண்டப்பட்டவர்களுக்கு பெற்றுக்கொடுத்திருப்பதாக எமது மக்கள் கூறுவதை மறுக்கவில்லையே ஏன்?

கொலை செய்வதும், கொள்ளையடிப்பதும், ஆட்களை காணாமல் போகச் செய்வதும் ஈ.பி.டி.பி கட்சியின் கொள்கையோ, வேலைத்திட்டமோ இல்லை. அவ்வாறான செயல்களில் ஈடுபடுகின்றவர்களுக்கு எமது கட்சியில் இடமும் இல்லை. சிலர் அவ்வாறான குற்றங்களோடு தொடர்பு பட்டிருப்பதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படும்போது அது தொடர்பான சட்ட நடவடிக்கை எடுக்கவே கட்சி முற்பட்டிருக்கின்றது.

அவ்வாறானவர்கள் மீதான சட்ட ஒழுங்கு விவகாரங்களில் கட்சி ஒருபோதும் செல்வாக்குச் செலுத்தியதுமில்லை. இடையூறுகளைச் செய்ததும் இல்லை. இந்த நிலைப்பாட்டில் ஈ.பி.டி.பி மிகவும் உறுதியாகவே இருந்துவருகின்றது.

இந்தச் செய்தியை நாம் தொடர்ந்தும் வெளிப்படுத்தியே வருகின்றோம். இந்த உண்மையை அறிந்து கொண்டும்,அல்லது எமது நிலைப்பாட்டை அறிந்து கொள்ளாததுபோல் நடிக்கும் சத்தியலிங்கம் போன்றவர்கள் அரசியல் செய்வதாகவும், தமிழரின் அரசியல் தளத்தில் இருப்பதாகவும் கூறுகின்ற கதைகள்தான் வேடிக்கையானதாக இருக்கின்றது.

பொதுவாழ்வில் இருப்பவர்கள் தாம் சார்ந்த விடயத்திலும்,தமது எதிர்நிலை சார்ந்தவர்கள் சார்ந்த விடயத்திலும் தெளிவுள்ளவர்களாக இருப்பது அவசியம். அவ்வாறில்லாமல்,மாகாணசபை தேர்தல் காலத்தில் முளைத்து அதன் முடிவு காலத்துடன் முடிந்துபோகும் அரசியல் காளான்கள்போலவே இருந்துவிட்டு போக நேரிடும் என்பதை சத்தியலிங்கமும், அவரது சகாக்களும் புரிந்துகொள்ள வேண்டும்.

ஊடகப் பிரிவு

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி

hqdefault

Related posts:

நுண்கடன் விடயத்தில் பொருத்தமான வழிமுறை வேண்டும் - செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கோரிக்கை!
புகையிரத சேவையில் பாரிய சுகாதாரச் சீர்கேடுகள்: தமிழ் மொழியும் புறக்கணிப்பு – நாடாளுமன்றில் டக்ளஸ் எம...
யாழ்ப்பாணம் நெடுந்தூர தனியார் பேருந்து நிலையத்தை திறந்துவைத்து சேவைகளை ஆரம்பித்து வைத்தார் அமைச்சர் ...