மண்கும்பானில் பாரிய படகு கட்டும் தொழிற்சாலை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வினால் அங்குரார்ப்பணம்!

Thursday, March 4th, 2021

சுற்றுலாத் துறையை அபிவிருத்தி செய்வதன் மூலம் பல்வேறு வேலைவாய்ப்புக்களையும் பொருளாதார மேம்பாட்டையும் ஏற்படுத்த முடியும் என்று கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

யாழ்ப்பாணம், மண்கும்பானில் பாரிய படகு கட்டும் தொழிற்சாலை மற்றும் பயிற்சி நிலையத்திற்கான அங்குரார்ப்பண நிகழ்வை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இதனைத் தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,

“வடக்கு மக்களின் வாழ்வில் பொருளாதார ரீதியில் ஆரோக்கியமான மாற்றத்தினை ஏற்படுத்துவதற்கு பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

குறிப்பாக, சுற்றுலாத்துறையை விருத்தி செய்வதன் மூலம் குறித்த இலக்கை அடைய முடியும்.

அந்தவகையில், படகு கட்டும் தொழிற்சாலை மற்றும் பயிற்சி நிலையம் அமைக்கப்படுகிறது.

இங்கே தொழில் வாய்ப்புக்கள் உருவாக்கப்படுவதுடன் இங்கு உருவாக்கப்படுகின்ற படகுகளை பயனபடுத்தி சுற்றுலாத்துறையை விருத்தி செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன” என்று தெரிவித்தார்.

கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் முயற்சியினால் தனியார் முதலீட்டாளர்களின் பங்களிப்புடன் மண்கும்பானில் அமையவுள்ள பாரிய படகு கட்டும் தொழிற்சாலை மற்றும் பயிற்சி நிலையத்தில் வருடந்தோறும் சுமார் நூறுக்கு மேற்பட்டவர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டு தொழிறசாலையில் வேலைவாய்ப்புகளும்  வழங்கப்படவுள்ளன.

குறிப்பாக பயிற்சிக்காக தெரிவு செய்யப்படுகி்ன்ற இளைஞர் யுவதிகளுக்கு பயிற்சிக் காலத்தில் கொடுப்பனவு மற்றும் உணவு வழங்கப்படும் என்பதுடன், பயிற்சி நிறைவில் சர்வதேச தரத்திலான சான்றிதழ்களும் வழங்கப்படவுள்ளமை   குறிப்பிடத்தக்கது.

Related posts: