மக்கள் வங்கியையும் விற்கப் போகும் அபாயம் – டக்ளஸ் எம்.பி. தெரிவிப்பு!

Thursday, August 22nd, 2019


தேசிய பாதுகாப்பிற்கு பாதகம் வருகின்ற நிலையில், முப்படைகளைக் கொண்டு, தேசிய பாதுகாப்பினை உறுதி செய்வதற்கு ஏற்பாடுகளை மேற்கொள்வதுபோன்று, ஒரு நாட்டில் பொருளாதாரக் கட்டமைப்பிற்கு பாதகம் வருகின்ற நிலையில், அதனைப் பேணிப் பாதுகாப்பதற்கு அரச நிதி நிறுவனங்களைக் கொண்டே அந்த ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டியள்ளது.

மக்கள் வங்கி திருத்தச் சட்டம் கொண்டு வரப்படுகின்ற நிலையில், மக்கள் வங்கியையும் இந்த அரசு விற்கப் போகிறது என்ற குரலே இன்று நாடளாவிய ரீதியில் ஓங்கி எழுந்து நிற்கின்றது.

ஆனால், அப்படியல்ல, மக்கள் வங்கியின் மூலதனத்தை விருத்தி செய்வதற்காகவே இந்தத் திருத்தச் சட்டம் கொண்டு வரப்படுவதாக அரச தரப்புக் கூறுகின்றது. இந்த அரச தரப்பு இப்படிக் கூறினாலும், எப்படிக் கூறினாலும் அதை நம்புகின்ற அளவிற்கு இந்த நாட்டு மக்கள் இல்லை. ஏனென்றால், ஒன்றைக் கூறி, இன்னொன்றைச் செய்வதே இந்த அரசின் செயற்பாடுகளாக இருந்து கொண்டிருப்பதாகவே எமது மக்கள் நம்புகின்றனர் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

மக்கள் வங்கி சட்டமூலத் திருத்தம் தொடர்பில் நடைபெறுகின்ற விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்

இது தொடர்;பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –

1961ஆம் ஆண்டு அப்போதைய வாணிப, வர்த்தக, உணவு மற்றும் கப்பற்துறை அமைச்சராக இருந்த அமரர் டீ. பீ. இலங்கரத்ன அவர்களால் சமர்ப்பிக்கப்பட்டிருந்த 29ஆம் இலக்கச் சட்டத்தின் ஊடாக கூட்டுறவு சமஸ்ரி வங்கியானது மக்கள் வங்கியாக மாற்றப்பட்டு, 50 ரூபாவினைக் கொண்டதான 1 இலட்சத்து 20 ஆயிரம் பங்குகளைக் கொண்ட ஆரம்ப நிதியான 60 இலட்சம் ரூபாவினைப் பயன்படுத்தி வங்கி பலப்படுத்தப்பட்டது.

இந்த பங்குகளின் பாதியை அரசு பெற்றுக் கொண்டதுடன், ஏனைய பங்குகளை நாடளாவிய ரீதியில் செயற்;பட்டிருந்த கூட்டுறவுச் சங்கங்கள் பெற்றிருந்தன.

இந்த வங்கியானது கூட்டுறவுச் சங்கங்களால் ஏற்பாடு செய்யப்பட்ட மக்களும், அரசும் இணைந்து மேற்கொள்கின்ற நிறுவனம் என்பதால் ஆரம்ப நிதி என்ற வகையில் தனிப்பட்டவர்களது நிதியினைப் பயன்படுத்துவதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போதைய நிலையில் 738 கிளைகளைக் கொண்டு, தனது சேவைகளை மிகவும் சிறந்த முறையில் மேற்கொண்டு, வெற்றிகரமாக இந்த மக்கள் வங்கி செயற்பட்டு வருகின்றதாகவே அறிய முடிகின்றது.

அத்துடன், அரசின் கூட்டிணைந்த நிதியத்திற்கு வருடந்தோறும் மக்கள் வங்கியானது 5 பில்லியன் போன்ற பாரியதொரு தொகையினை வழங்கி வருவதாகவும், இதற்கு மேலதிகமாக வரி என்ற வகையிலும் பாரியதொரு தொகையை வழங்கி வருவதாகவும் தெரிய வருகின்றது.

கடந்த வருடத்தில் மாத்திரம், மக்கள் வங்கி, இலங்கை வங்கி உள்ளிட்ட அரச வங்கிகளின் மூலமாக 50 பில்லியனுக்கும் அதிகமான நிதி அரசுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும், இதில் மக்கள் வங்கி மாத்திரம் 19.8 பில்லியன் ரூபாவினை வழங்கியுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

இத்தகைய இலாபத்தினை இந்த வங்கி ஈட்டி வருகின்ற நிலையில், மக்கள் வங்கியிடமுள்ள சொத்துக்களை அதிகரிக்கின்ற வகையில் பங்கு நிதியினை ஒன்று திரட்டுவதற்கும், தொகுதிக் கடன்களை வழங்குகின்ற வரையறையை மேலும் அதிகரிப்பதற்குமாக இந்தத் திருத்தச் சட்டம் கொண்டு வரப்படுவதாகக் கூறப்படுகின்றது.

ஆரம்பத்தில் இந்த நாட்டில் இலாபம் தராத அரச நிறுவனங்களே விற்கப்பட்டு வந்தன. இப்போது, அரசுக்கு நிறையவே இலாபம் தருகின்ற நிறுவனங்களும் விற்கப்பட்டு வருகின்றனவா? என்ற கேள்வி அரச காப்புறுதிக் கூட்டுத்தாபனத்திலிருந்து எழுகின்றது.

இந்தத் திருத்தச் சட்டத்தின் மூலமாக இரண்டாம் தர மூலதனத்தைப் பெற்றுக் கொள்வதற்கென தொகைக் கடன்களை விநியோகிப்பதே எதிர்பார்ப்பு என்றும், எவ்வகையிலேனும், பங்கு விற்பனைகள் நடைபெற மாட்டாது என்றும் மக்கள் வங்கியின் நிர்வாகத் தரப்புக் கூறுவதாகவும், அதேநேரம், பணியாளர்களுக்கும், கொடுக்கல் வாங்கலில் ஈடுபடுவோருக்கும் பங்குகள் விநியோகிக்கப்படும் என நிதி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளதாகவும் இலங்கை, வங்கி ஊழியர்கள் சங்கத்தினர் தெரிவிக்கின்றனர்.

மக்கள் வங்கிச் சட்டத்தின் 13வது சரத்தினைப் பார்க்கின்றபோது, ‘கூட்டுறவுச் சங்கமோ அன்றி உத்தியோகபூர்வ நிலைமையின் பிரகாரம் திறைசேரியின் செயலாளர் அல்லாத நபருக்கு வங்கியின் எந்தவொரு பங்குதாரர்களாலும் தமது பங்குகள் விற்பனை செய்யக்கூடாது’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளமையையும் இங்கு சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது.


மக்களின் அவலங்களுக்கு தவறான அரசியல் தலைமைகளே காரணம் - கிளிநொச்சியில் டக்ளஸ் தேவாந்தா
அரச அலுவலகங்களில் தகுதியான மொழி பெயர்ப்பாளர்கள் நியமிக்கப்பட வேண்டும் - நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி....
அபிவிருத்தியில் பின்தங்கியுள்ளமைக்கு மக்களின் தவறான அரசியல் தெரிவுகளே காரணம் - சம்பூரில் டக்ளஸ் தேவா...
கரைதுரைப்பற்று பிரதேச சபையை நகர சபையாகத் தரமுயர்த்தி மக்களின் தேவைகளுக்கு தீர்வு காணப்படும் - முல்லை...
"நீதியரசர் பேசுகின்றார்" நூல் வெளியீட்டு விழாவில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா பங்கேற்...