மக்கள் நலன் சார்ந்ததாகவே எமது பணிகள் முன்னெடுக்கப்படுகின்றது – டக்ளஸ் தேவானந்தா!

Friday, September 30th, 2016

எமது கட்சியின் கொள்கைவழியின் ஊடான அரசியல் வழியை மக்கள் தெரிவு செய்யும் பட்சத்தில் அவர்களது வாழ்வாதாரம் பொருளாதாரம் மட்டுமன்றி அரசியல் அபிலாஷைகளை வென்றெடுப்பதற்கானதொரு சூழலை நாம் ஏற்படுத்துவோமென ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற வல்வெட்டித்துறை ஆதிகோவிலடி பகுதி மக்களுடனான சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் எமது கட்சியின் கொள்கைவழியில் நின்று நாம் பல்வேறுபட்ட இடர்பாடுகளையும் நெருக்கடிகளையும் துயரங்களையும் சுமந்து நீண்டதொரு பயணத்தில் பயணித்துக் கொண்டிருக்கின்றோம். கடந்த காலங்களில் எமது இணக்க அரசியலின் ஊடாக எமது மக்களுக்கான பல்வேறுபட்ட வாழ்வாதார உதவிகளைப் பெற்றுக் கொடுத்த அதேவேளை எமது பகுதிகளை அபிவிருத்தியாலும் கட்டியெழுப்பியுள்ளோம்.

2

நாம் இணக்க அரசியல் செய்ததெல்லாம் எமது மக்களின் நலன்சார்ந்தது அமைந்ததாகவே இருந்ததேயல்லாமல் எமது சுயலாபத்திற்காக ஒருபோதும் பயன்படுத்தியது கிடையாது. கிடைக்கப் பெற்ற சந்தர்ப்பங்களையும் வாய்ப்புக்களையும் சரியான முறையில் பயன்படுத்தியதன் பயனாகவே யாழ். மாவட்டம் மட்டுமன்றி வடபகுதியின் ஏனைய சில மாவட்டங்களிலும் எம்மால் முடிந்தளவான மக்கள் நலன்சார்ந்த செயற்றிட்டங்களை முன்னெடுத்துக் காட்டியுள்ளோம்.

கடந்த காலங்களிலும் சரி இனிவரும் காலங்களிலும் சரி நாம் செய்த அபிவிருத்திகளைப் போல வாழ்வாதார மேம்பாட்டுத் திட்டங்களைப் போல எந்தத் தமிழ் அரசியல் கட்சிகளாலும் முன்னெடுக்க முடியாது என்பதை நான் திடமாகக் கூறிக் கொள்ள விரும்புகின்றேன்.

எமது மக்கள் சரியான அரசியல் வழிமுறையைக் காட்டுபவர்களை விடுத்து தவறான அரசியல் வழியைக் காட்டுபவர்களை தமது பிரதிநிதிகளாகத் தெரிவு செய்ததின் பயன்தான் முள்ளிவாய்க்கால் வரையான மனிதப் பேரவலத்திற்கு வழிகோலியிருந்தது.

1

1996ஆம் ஆண்டு யாழ். மாவட்டத்திற்கு நாம் வருகைதராது விட்டிருந்தால் வன்னி மக்கள் முள்ளிவாய்க்கால் வரையில் பட்ட மனித பேரவலத்தைத்தான் யாழ். மாவட்ட மக்களும் சந்திக்க வேண்டியிருந்திருக்கும். நாம் இங்கு இருந்தபடியால்தான் ஓரளவு இழப்புக்களுடன் எமது மக்களை மட்டுமன்றி அவர்களது சொத்துக்களையும் வணக்க ஸ்தலங்கள் கல்விக்கூடங்கள் யாழ். பொது நூலகம் உள்ளிட்ட வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பொக்கிஷங்களையும் பாதுகாக்க முடிந்தது என்றும் சுட்டிக்காட்டினார்.

இதனிடையே ஆதிகோவிலடி மக்கள் தமக்கான வீடமைப்புத் திட்டம் குடிநீர் வசதி வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறுபட்ட அடிப்படை தேவைப்பாடுகள் தொடர்பில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவின் கவனத்திற்குக் கொண்டு வந்திருந்தனர்.

மக்களது கோரிக்கைகள் மற்றும் தேவைப்பாடுகள் தொடர்பில் அவதானம் செலுத்திய செயலாளர் நாயகம் துறைசார்ந்தவர்களிடம் கலந்துரையாடி உரிய நடவடிக்கை எடுப்பதற்கான முயற்சிகளைத் தான் முன்னெடுக்கவுள்ளதாகத் தெரிவித்தார்.

இதன்போது கட்சியின் யாழ். மாவட்ட நிர்வாகச் செயலாளர் கா வேலும்மயிலும் குகேந்திரன் (வி.கே.ஜெகன்) கட்சியின் பருத்தித்துறை நிர்வாகச் செயலாளர் குமார் ஆகியோர் உடனிருந்தனர்.

Related posts: