மக்கள் நலத்திட்டங்களை முன்னெடுத்தால் அதை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி ஆதரிக்கும் – டக்ளஸ் தேவானந்தா எம்.பி.!

மக்கள் நலத்திட்டங்களை யார் முன்னெடுத்தாலும் அவர்களை வெளியில் இருந்து ஆதரிக்க ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி தயாராக இருக்கின்றது என கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
கட்சியின் தலைமை அலுவலகத்தில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்ற கட்சியின் பொதுச்சபைக் கூட்டத்திலேயே குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டது.
மேலும் அவர் தெரிவிக்கையில் –
நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் வடக்கு – கிழக்கு பகுதிகளில் ஒரு சில சபைகளை தவிர ஏனைய சபைகளில் எந்தவொரு கட்சியும் தனிப் பெரும்பான்மை பெறுவது கடினமானதாகக் காணப்படுகின்றது.
ஆனாலும் ஊர்காவற்றுறை பிரதேச சபையையும் நெடுந்தீவு பிரதேச சபையையும் எமது கட்சி பெரும்பான்மையுடன் வெற்றிகண்டுள்ளது.
இதனால் இப்பகுதிகளில் யாருடனும் நாம் கூட்டுச் சேரவேண்டிய நிலை இருக்கப்போவதில்லை. ஆனாலும் வடக்கு கிழக்கிலுள்ள ஏனைய சபைகளில் பூநகரி பிரதேச சபையை தவிர்ந்த ஏனைய சபைகளில் யாரும் தனித்து ஆட்சியமைக்கக் கூடிய வகையில் மக்கள் அங்கீகாரம் வழங்கவில்லை.
எனவே பெரும்பான்மை ஆசனங்களைப் பெற்ற எந்தக் கட்சியானாலும் அங்கு ஆட்சி அமைக்க முடியும். அத்தகைய சந்தர்ப்பம் ஏற்படும் பட்சத்தில் மக்கள் நலத்திட்டங்களை யார் முன்னெடுத்தாலும் அவர்களை அதை ஆதரிப்பதற்கு எமது பொதுச்சபைக் கூட்டத்தின்போது தீர்மானம் எடுத்துள்ளது.
இந்த தீர்மானமானது நாம் எமது தனித்துவத்தை பேணும் வகையிலும் மக்கள் நலன்களை முன்னிறுத்தியதாகவுமே இருக்கும்.
யாழ். மாவட்டத்தில் தமிழரசுக்கட்சி, ரெலோ, புளொட், வேறு சில பொது அமைப்புகள் என கூட்டு சேர்ந்து பெற்றுக்கொண்ட ஆசனங்களை விட நாம் தனியொரு கட்சியாக நின்று 81 ஆசனங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக எம்மை வெளிப்படுத்தியுள்ளோம் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதனிடையே வடக்கு கிழக்கு உள்ளிட்ட மாகாணங்களில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி 99 ஆசனங்களைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|