மக்கள் தமது உரிமைகளைக் கோருவது தேசிய பாதுகாப்புக்கு குந்தகமானது அல்ல  – நாடாளுமன்றில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டு!

Friday, June 8th, 2018

தேசிய பாதுகாப்பு தொடர்பில் இந்த நாட்டில் வாழ்கின்ற அனைவருக்கும் பொறுப்பு இருக்கின்றது. ஆனாலும்,  எந்த வகையிலும் பொறுப்பு அற்றவர்களாக ஒரு சிலர், அடிக்கடி, இந்த நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது என ஏன்? கூறுகிறார்கள் என்பது பற்றி ஆராயுமிடத்து, தமிழ் பேசும் மக்களுக்கு எதுவுமே கிடைக்கக் கூடாது என்ற கொள்கையிலிருந்தும், அதனையே தங்களது இருப்பிற்கான பிரதான மூலதனமாகக் கொண்டுமே இனவாத ரீதியில் இந்தக் கூற்றினை அடிக்கடி ஏந்திக் கொண்டிருக்கிறார்கள் என்றே தெரிய வருகின்றது. இது ஒரு துரதிர்ஸ்டவசமான நிலைமையாகும என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நடைபெற்ற தேசிய பாதுகாப்பு நிதியம் திருத்தச் சட்டமூல தொடர்பிலான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –

வடக்கிலே எமது மக்கள் தங்களது சொந்த காணி, நிலங்களை விடுவிக்குதமாறு கோரினால், அது தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல்.

காணாமற்போன உறவுகளைக் கண்டறிவதற்கு உதவுமாறு எமது மக்கள் கோரினால், அது தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்கக் கோரினால், அது தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல்.

இப்போது கேபிள் ரீ. வி. தொடர்பில் வடக்கில் சில பிரச்சினைகள் வந்தாலும்கூட, அதுவும் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல்.

ஆக, வடக்கில் காய்ச்சல் வந்தாலும் கூட, அதுவும் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் என்றே இந்த குறுகிய கூட்டத்தினர் கூறி வருகின்றனர்.

இவ்வாறு ஒரு குறுகிய கூட்டத்தினர் கூறிவருகின்ற கூற்றுகளுக்கு அஞ்சுகின்ற நிலையில், எமது மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு தென் பகுதி தலைமைகள் பின்னடித்து வருவதும், இத்தகைய பின்னடிப்புகளுக்கு ‘எமது மக்களின் அனைத்துப் பிரச்சினைகளையும் தீர்ப்போம்’ என்று பொய்யான வாக்குறுதிகளை வழங்கி, எமது மக்களின் கணிசமான வாக்குகளைப் பெற்று அரசியல் அதிகாரங்களைப் பெற்றுள்ள தமி;ழ்த் தலைமைகள் காலக்கெடுக்களை கொடுத்து, எமது மக்களின் பிரச்சினைகளை தவணை முறைகளில் விற்றுப் பிழைக்கின்ற நிலைமைகளே இன்று நடந்தேறிக் கொண்டிருக்கின்றன.

இந்த நாட்டில் தேசிய பாதுகாப்பு என்பது முக்கியமானது. எமது நாட்டைப் பொறுத்தவரையில் 1971ஆம் ஆண்டு முதல் 2009ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதிக்குள் உள்நாட்டு ஆயுதமேந்தியப்  போராட்டங்கள் தென் பகுதியிலும், வடக்கு, கிழக்கு மாகாணங்களிலும் உருவாகியுள்ளன.  எனவே, வடக்கு, கிழக்கு மாகாணங்களில் மாத்திரமே அதிகளவில் இராணுவ நிலைகொள்ளல் இருப்பதால் மட்டுமே தேசிய பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்பதில் அர்த்தமில்லை. அது, நீங்கள் உருவாக்கிக் கொண்டுள்ள – உங்களது குறுகிய இனவாத அரசியல் இருப்பினைத் தக்கவைத்துக் கொள்வதற்கான  மாயையேயாகும்.

யுத்தம் முடிவுக்கு வந்ததன் பின்னர் – இன்று வரையில் இந்த இராணுவத்தை அடிப்படையாக வைத்து அரசியல் நடத்தப்பட்டு வருகின்ற இந்த நாட்டில், அத்தகைய அரசியலில் ஈடுபட வேண்டியத் தேவை எமக்கு இல்லை என்பதை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

Related posts:

எக் ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விபத்தின் பாதிப்பு குறித்து அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நாளை விசேட...
கச்சத்தீவு திருவிழா - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் திமுகாவின் மூத்த தலைவர் டி.ஆர்.பாலு தொலைபேசியில...
600 ஹெக்டேர் காணியில் கெளதாரிமுனையில் காற்றாலை மின் உற்பத்தி திட்டம் - மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர...