மக்கள் அரசியல் பலத்தை எமக்கு வழங்கியிருந்தால் அவர்கள் எதிர்நோக்கிவரும் கணிசமான பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டிருப்போம்  – டக்ளஸ் எம்.பி.!

Monday, January 22nd, 2018

மக்களின் தேவைகள் மட்டுமல்லாது அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளையும் இனங்கண்டு முன்னுரிமை அடிப்பிடையில் அவற்றுக்கான தீர்வுகளைப் பெற்றுத் தருவதற்கு நாம் எப்போதும் அர்ப்பணிப்புடன் கூடியதான உழைப்பை வழங்கத் தயாராக இருக்கின்றோம் என

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி மன்ற தேர்தலை முன்னிட்டு மன்னார் தேவன்பிட்டி பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் –

கடந்த காலங்களில் நாம் கொடுத்திருந்த வாக்குறுதிகளை மக்கள் ஏற்றுக்கொண்டு எமக்கு வாக்களித்து எம்மை வெற்றிபெறச் செய்திருப்பார்களேயானால் மக்கள் தற்போது எதிர்நோக்குகின்ற பிரச்சினைகளில் கணிசமான அளவிற்கு நாம் தீர்வுகண்டிருப்போம்.

நாம் நடைமுறை யதார்த்தமானதும் சாத்தியமாகக் கூடியதுமான வாக்குறுதிகளையே மக்களுக்கு வழங்கிவருகின்றோம். ஆனால் மக்கள் எமது வாக்குறுதிகளை உதாசீனம் செய்திருந்தார்கள்.

நடைமுறைச் சாத்தியமாகாத பொய்யான வாக்குறுதிகளை நம்பி சுயலாப அரசியல்வாதிகளது உணர்ச்சிப் பேச்சுக்களையும் உசுப்பேற்றல்களையும் நம்பி தமது வாக்குகளை தாரைவார்த்திருந்தார்கள்.

அதன்காரணமாக தீர்க்கப்படக் கூடியதும் தீர்க்கப்படவேண்டியதுமான பல பிரச்சினைகளுக்கு இன்றும் தீர்வுகாணமல் மக்களின் வாக்குகளை அபகரித்துக்கொண்ட சுயலாப அரசியல்வாதிகள்   மக்களை இற்றைவரை ஏமாற்றி வருகின்றனர். இதனால் மக்கள் தமது தேவைகள் நிறைவேற்றப்படாது நட்டாற்றில் நிற்கின்றனர்.

அதுமாத்திரமன்றி நல்லாட்சியைக் கொண்டுவந்தவர்கள் தாமே என்று இறுமாப்புப் பேசும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரால் மக்கள் வீதிகளில் இறங்கி முந்நூறு நாட்களைக்கடந்து கொட்டும் மழைக்கு நடுவிலும் கொதிக்கும் வெயிலிலும் பனிக் குளிரிலும் தமது போராட்டத்தை முன்னெடுக்கவேண்டிய அவஸ்தைக்குள்ளாகியுள்ளனர்.

அந்தவகையில் மன்னார் தேவன்பிட்டியில் வாழும் மக்களாகிய நீங்களும் பல்வேறு நெருக்கடிகளுடனும் பிரச்சினைகளுடனும் வாழ்ந்துவருவதை நான் நன்கு அறிவேன்.

உண்மையைச் சொல்லப்போனால் கடந்தகால தேர்தல்களில் நீங்கள் எமக்கு அரசியல் அதிகாரங்களை வழங்கியிருந்தால் இந்தப் பகுதி மக்களது பிரச்சினைகள் மட்டுமன்றி மன்னார் மாவட்டத்தில் வாழும் எமது மக்களது பிரச்சினைகளில் கணிசமானவற்றுக்கும் நிச்சயம் உரிய தீர்வுகளைப் பெற்றுத் தந்திருப்போம்.

எனவே நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலில் மக்களாகிய நீங்கள் ஒன்றிணைந்து எமது கட்சிக்கு ஆதரவுப்பலத்தை தருவீர்களேயானால் நீங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளில் முன்னுரிமை அடிப்படையில் உரிய தீர்வுகளை பெற்றுத் தருவதற்கு நாம் தயாராக இருக்கின்றோம் என மேலும் அவர் தெரிவித்துள்ளார்.


யுத்த வெற்றி இல்லை என்பதுடன் தமிழ்ப் பகுதிகளில் யுத்த வெற்றிச் சின்னங்களும் இல்லாத நிலை வேண்டும்.! ...
யுத்தத்தின் எச்சங்களாக வாழும் எமது வாழ்வியலுக்கு விளக்கேற்றித் தாருங்கள் - டக்ளஸ் தேவானந்தாவிடம் முழ...
மகளிர் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பில் தீர்வுகளைக் காணமுடியாத நிலை காணப்படுவதேன்?...
சிறுமி சங்கீதாவின் கண்ணீருக்கு மனிதாபிமான நீதி வேண்டும் - நாடாளுமன்றில் எம்.பி டக்ளஸ் தேவானந்தா கோரி...
மறைமாவட்ட ஆயருடன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சந்திப்பு!