தற்துணிவுகளின் அடிப்படையில் பல்வேறு செயற்றிட்டங்களை முன்னெடுத்து நாம் வெற்றி கண்டுள்ளோம் – செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா!

Saturday, December 30th, 2017

எமது மக்களை கடந்தகாலத் துயரம் நிறைந்த வாழ்விலிருந்து மீட்டெடுப்பதற்கு  நாம் நம்பிக்கை மற்றும் தற்துணிவுகளின் அடிப்படையில் பல்வேறு செயற்றிட்டங்களை முன்னெடுத்து வெற்றிகண்டுள்ளோம். ஆனாலும் இதை மேலும் அதிகளாவாக முன்னெடுத்தச் செல்வதற்கு மக்களின் அதிகரித்த ஆதரவும் ஒத்துழைப்பும் எமக்கு அவசியமானது. அந்த ஆதரவுப்பலம் இம்முறை நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலினூடாக மக்கள் எமக்கு வழங்குவார்கள் என நம்பிக்கை கொண்டுள்ளதாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

கொடிகாமம் பெரியநாவலடி விநாயகர் சனசமூக நிலைய கட்டட திறப்புவிழாவில் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு கட்டடத்தை நாடா வெட்டி சம்பிரதாயபூர்வமாக திறந்துவைத்தபின்னர் நிகழ்வில் கலந்துகொண்ட மக்கள் மத்தியில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தற்போது மக்களின் அடிப்படை தேவைகளை பெற்றுக்கொள்ளக்கூடியதான அதிகாரங்களைக் கொண்ட உள்ளூராட்சி மன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. கடந்த காலங்களைப்போன்று எதிர்காலங்களிலும் உணர்ச்சிப் பேச்சுக்களுக்கும் உசுப்பேற்றுதல்களுக்கும் இடங்கொடுக்காது உண்மையானதும் நியாயமானதுமான கருத்ததுக்களுக்கு செவிகொடுத்து மக்களுக்கு பணிசெய்யும் அரசியல் தலைமைகளை தெரிவுசெய்யவேண்டும்.

எமக்கு கிடைத்த வாய்ப்புக்களையும் சந்தர்ப்பங்களையும் மக்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்காகவும் அபிவிருத்தி செயற்றிட்டங்களுக்காகவும் மிகச் சிறந்தமுறையில் நாம் முன்னெடுத்திருக்கின்றோம்.

எம்மால் மேற்கொள்ளப்பட்ட மக்கள் நலன் சார் பணிகளையோ அபிவிருத்தி சார் வேலைத்திட்டங்களையோ எக்காலத்திலும் எந்த தமிழ் அரசியல்வாதிகளாலோ அன்றி தமிழ்க் கட்சிகளாலோ முன்னெடுக்கமுடியாது என்பதையும் திடமாக கூறவிரும்புகின்றேன்.

இச்சந்திப்பின்போது குறித்த பகுதி மக்கள் தமது பகுதி வீதிகள் புனரமைப்பு, வீடுகள் புனரமைப்பு, காணிகளுக்கான நிரந்தர உரிமங்கள், பாலர் பாடசாலை அமைத்தல் வாழ்வாதாரம் தொழில் வாய்ப்பு உள்ளிட்ட பல கோரிக்கைகளை செயலாளர் நாயகம் அவர்களிடம் முன்வைத்தனர்.

மக்களது கோரிக்கையைளை செவிசாய்த்துக்கொண்ட செயலாளர் நாயகம் காலக்கிரமத்தில் குறித்த கோரிக்கைகளுக்கான தீர்வுகளை பெற்றுத்தர முயற்சிப்பதாக தெரிவித்திருந்தார்.

இதன்போது கட்சியின் யாழ்.மாவட்ட மேலதிக நிர்வாக செயலாளரும் வடமராட்சி மற்றும் தென்மராட்சி பிரதேச ஒருங்கிணைப்பாளருமான ஐயாத்துரை ஶ்ரீரங்கேஸ்வரன், சாவகச்சேரி பிரதேச நிர்வாக செயலாளர் மெடிஸ்கோ,.சாவகச்சேரி நகர நிர்வாக செயலாளர் அமீன் கறித்த 11 ஆம் வட்டார வேட்பாளர் ஜெகதாஸ் உள்ளிட்ட கட்சியின் முக்கியஸ்தர்கள் பலர் உடனிருந்தனர்.

Related posts: