மக்களின் நலன்களின் அடிப்படையிலேயே தீர்மானங்கள் அமையும் – அமைச்சர் டக்ளஸ் திட்டவட்டம்!

Friday, June 18th, 2021

ஒவ்வொரு பிரதேசத்திலும் வாழுகின்ற மக்களில் பெரும்பாலானவர்களின் நலன்களை அடிப்படையாகக் கொண்டே தீர்மானங்கள் மேற்கொள்ளப்படும் என்று கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

வடமாராட்சி கிழக்கு பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற தொழில் முறைகளை ஒழுங்குபடுத்துவது தொடர்பாக வடமாராட்சி கிழக்கு கடற்றொழிலாளர் சமாசத்தின் நிர்வாகிகளுக்கும் கடற்றொழில் அமைச்சருக்கும் இடையிலான நேற்றைய (17.06.2021) கலந்துரையாடலின் போதே, கடற்றொழில் அமைச்சரினால் குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடமாராட்சி கிழக்கில் நேற்று இடம்பெற்ற குறித்த கலந்துரையாடலில், மக்களின் அபிப்பிராயங்களின் அடிப்படையிலேயே தொழில் முறைகள் தொடர்பான தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று வடமாராட்சி கிழக்கு கடற்றொழிலாளர் சமாசத்தினால் வேண்டுகோள் முன்வைக்கப்பட்டது.

மேலும், கடல் வளத்திற்கு  பாதிப்பை ஏற்படுத்துகின்ற சட்டவிரோத தொழில் முறைகள் அனைத்தும் கட்டுப்படுத்தப்பட வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பு எனவும் சமாச நிர்வாகிகளினால் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் தொடர்ந்தும் கருத்து தெரிவித்த கடற்றொழில் அமைச்சர்,  கடற்றொழிலாளர் சங்களினால் தமக்கு ஏற்ற தொழில் முறைகளுக்கு அனுமதியைக் கோருகின்ற போக்கினை அவதானிக்க கூடியதாக இருப்பதாகவும், கடற்றொழில் உத்தியோகத்தர்கள் மூலம் பிரதேச மக்களின் பொதுவான அபிப்பிராயங்கள் உள்வாங்கப்படுவதுடன், நேரடியாகவும் பிரதேச மக்களின் கருத்துக்களை அறிந்து, சம்மந்தப்பட்ட பிரதேச மக்களில் பெரும்பாலானவர்கள்  நலன்களைப் பெற்றுக்கொள்ளும் வகையில் ஆராய்ந்தே இறுதித் தீர்மானங்கள் அமையும் எனவும் தெரிவித்துள்ளார்.

Related posts: