மக்களின் நம்பிக்கையை எவரும் வென்றெடுக்கவில்லை – செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா நாடாளுமன்றில் தெரிவிப்பு!

Thursday, February 21st, 2019

இந்த நாட்டில் மக்கள் இன்று மிகவும் கொடுமையான பொருளாதார நிலைமையினை அனுபவித்துக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில், ‘அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் யார்  என்ற விடயத்தை தெற்கில் பேசிக் கொண்டும்,  ஆளுந்தரப்பின் அடுத்த போலித் தமிழ்த் தேசியத் தலைவர் யார் என்ற விடயத்தை வடக்கில் பேசிக் கொண்டும், இதனையே தலைப்புகளாக்கி எமது மக்கள் மனங்களில் திணித்துக் கொண்டு, எமது மக்களின் பிரச்சினைகள், இந்த நாடு முகங்கொடுத்துள்ள பிரச்சினைகள் என்பன மழுங்கடிக்கப்பட்டு வருகின்ற ஒரு சூழலே தோற்றுவிக்கப்பட்டுள்ளது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் நாடாளுமன்றில் நடைபெற்ற ஏற்றுமதி அபிவிருத்தி சட்டத்தின் கீழான இரண்டு கட்டளைகள் தொடர்பிலான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –

இன்றைய நிலையில் இந்த நாட்டுக்குள் மிகப் பயங்கரமான போதைப் பொருட்கள் கூட அதிக பயன்பாட்டில் இருப்பதாகக் கண்டு பிடிக்கப்பட்டு வருகின்றது. இந்த நாட்டில் போதைப் பொருள் ஒழிப்பினை தீவிரமாக முன்னெடுக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் ஜனாதிபதி இருக்கிறார்.

இந்த நிலையில் போதைப் பொருள் பயன்படுத்தும் அமைச்சர்கள் உள்ளிட்ட 24 பேர் நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தி வருவதாக ஆளுந்தரப்பு இராஜாங்க  அமைச்சர் ஒருவரே கூறி வருகின்றனர்.

இந்த 24 பேர் குறித்து தொலைபேசி மூலமாக அவர் சபாநாயகருக்கு அறிவித்துள்ளதாகவும் இன்றைய ஊடகங்களில் செய்தி வெளிவந்துள்ளது. ‘இறக்குமதி பால்மாவில் எவ்விதமான கலப்பும் இல்லை’ என இந்த நாட்டு சுகாதார அமைச்சர், அதிகாரிகளையும் வைத்துக் கொண்டு அடிக்கடி ஊடகங்களில் மாநாடு நடத்திக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில், ‘இல்லை இறக்குமதி பால்மாவில் கலப்படம் உள்ளது’ என இதே ஆளுந்தரப்பின் பிரதி அமைச்சர் ஒருவர் கூறிவருகின்றார். இதனை மருத்துவர் சங்கத்தினரும் உறுதிப்படுத்தி வருகின்றனர்.

இத்தகைய நிலையில், இந்த நாட்டு மக்கள் யாரை நம்புவது எனத் தெரியாமல், ஒரு கேள்விக் குறியாகவே இருக்கின்றனர். இவ்வாறு, மக்களை தொடர்ந்தும் கேள்விக் குறியாகவே வைத்திருப்பது தான் உங்களது திட்டமா எனக் கேட்க விரும்புகின்றேன். ஆளுங்கட்சி குறித்து எதிர்க்கட்சி இவ்வாறான முறைப்பாடுகளை முன்வைத்தால் அது ஆளுங்கட்சிக்கு எதிரான எதிர்க்கட்சி அரசியல் என கூறலாம். ஆனால், இங்கே?. இதை என்னவென்று கூறுவது.

Related posts:

திறமையானவர்களுக்கு உரிய சந்தர்ப்பங்கள் வழங்கப்படுவதில்லை – செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்...
இதுபோன்று பல அறிவிப்புகள் வந்து போயுள்ளது - பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் இந்திய மீனவர்களின் அ...
யாழ். - பாண்டிச்சேரி இடையில் போக்குவரத்து சேவை: அமைச்சர் டக்ளசின் முயற்சிக்கு அமைச்சரவை பச்சைக் கொட...