மக்களின் தேவைகளை அறிந்து சேவை செய்பவர்களை வெற்றிபெறச் செய்யுங்கள் – கண்டாவளையில் டக்ளஸ் எம்.பி. தெரிவிப்பு!

Monday, January 15th, 2018

கடந்த காலங்களில் யார் மக்களின் தேவைகளை அறிந்து சேவை செய்தார்களோ அவர்களை நீங்கள் வரவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வெற்றிபெறச் செய்வதனூடாகவே  ஏனைய அபிவிருத்திப் பணிகளையும் தொடர்ந்து முன்னெடுக்க முடியும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி கண்டாவளை கல்லாறு பகுதியில் இன்றையதினம் நடைபெற்ற மக்களுடனான சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து  தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

கடந்த காலங்களில் நாம் மக்களுக்கான பல்வேறுபட்ட பணிகளை முன்னெடுத்த போதிலும் அவற்றை எம்மால் முழுமையாக முன்னெடுக்க முடியவில்லை. அதற்கு காரணம் எமக்கு முழுமையான அரசியல் பலம் இல்லாமல் போனமைதான் . தற்போதுள்ள சூழலில் மக்கள் எமக்கு முழுமையான அரசியல் பலத்தை தருவார்களேயானால் இந்த பகுதியினது அபிவிருத்தியை மட்டுமல்லாது உங்கள் வாழ்வாதாரத்தையும் நாம் நிச்சயம் நிவர்த்தி செய்து காட்டுவோம்.

இப்பகுதியில் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளான குடிநீர், போக்குவரத்து, வீட்டு திட்ட திருத்தம், பாதைப் புனரமைப்பு, ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இன்னமும் தீர்க்கப்படாமலேயே உள்ளது.  அவை நிச்சயம் தீர்த்துவைக்கப்பட வேண்டும். அதற்கேற்ற வகையில் நீங்கள் வரவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலில் எமது வீணைச் சின்னத்தை வெற்றிபெறச் செய்வதனூடாக அவற்றுக்கான தீர்வுகளை இலகுவில் காணமுடியும்.

கடந்தகாலங்களில் மக்களிடம் வந்து பல்வேறு வாக்குறுதிகளை வழங்கியவர்கள் உங்களை நட்டாற்றில் விட்டுள்ளனர். இந்த நிலையில் நீங்கள் கடந்தகாலங்களில் தவறான தலைமைகளை தெரிவு செய்த காரணத்தால் இப்பகுதிகளை உரிய முறையில் அபிவிருத்தி செய்ய முடியவில்லை. எனவே வரும் சந்தர்ப்பத்தை நீங்கள் சரியான முறையில் பயன்படுத்தி மாற்றத்தை உருவாக்கிக்கொள்ளமுடியும்.

அந்தவகையில் கடந்தகாலங்களில் யார் உங்களுடன் நின்று உங்களுக்கான சேவைகளைச் செய்தார்களோ அவர்களையே நீங்கள் உங்கள் பிரதிநிதிகளாக தெரிவுசெய்யவேண்டும். இது காலத்தின் கட்டாயமுமாகும் என்றும் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

இதன்போது மக்களின் பல்வேறுபட்ட அடிப்படைத் தேவைகள் தொடர்பாகக் கவனம் செலுத்திய டக்ளஸ் தேவானந்தா சுயதொழில் வாய்ப்புகளினூடாக மக்களை வாழ்வாதாரத்திலும் பொருளாதாரத்திலும் தூக்கி நிறுத்துவதற்கு நாம் எப்போதும் தயாராகவே இருக்கின்றோம் என்றும் தெரிவித்தார்.

இதனிடையே  கல்லாறு கடல்மீன் விளையாட்டுக் கழக மைதானத்தை பார்வையிட்ட செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அதன் புனரமைப்பு தொடர்பாகவும் ஆராய்ந்தறிந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts:


பயனற்ற அலுவலகங்களுக்கு மக்கள் பணத்தினை வீண்விரையம் செய்யாதீர்கள் - நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா எம...
மக்களின் விருப்பத்தை சிதைக்க எந்தவொரு சக்தி முனைந்தாலும் அனுமதிக்க மாட்டேன்: செம்பியன்பற்று மக்களுக்...
கடற்றொழிலாளர்களின் தொழில்சார் பிரச்சினைகளுக்கு சாத்தியமான நடவடிக்கை - அமைச்சர் டக்ளஸ் உறுதி!