மக்களின் ஆழ்மனக் கனவுகளை நனவாக்க நாம் என்றும் தயாராகவே இருக்கின்றோம் – டக்ளஸ் எம்.பி தெரிவிப்பு!

கொள்கை அரசியல் என்ற பெயரில் தமது கொள்ளை அரசியலையும் சுயலாப அரசியலையும் முன்னெடுக்கும் போலித் தேசியவாதிகளை மக்கள் இனியும் நம்பத் தயாராகவில்லை. மக்கள் விரும்பும் புதிய அரசியல் மாற்றத்தை வழங்கவும் அதனூடாக மக்களது அன்றாடப் பிரச்சினைகள் மற்றும் உரிமை சார்ந்த பிரச்சினைகளுக்கும் நிரந்தர தீர்வுகாண்பதற்கு நாம் எப்போதும் தயாராக இருக்கின்றோம் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு மாவட்டம் வலைஞர் மடம் பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில் –
மக்களின் நியாயமான கோரிக்கையை காலக்கிரமத்தில் நிறைவு செய்வதே எமது நிலைப்பாடாகும். நாம் எடுத்துக்கொண்ட முயற்சியின் பயனாகவே இந்திய அரசிடமிருந்து 50ஆயிரம் வீட்டுத்திட்டங்களை பெற்றுக்கொண்டோம். அதுமாத்திரமன்றி அதனோடு இணைந்த பல்வேறு உதவிகளையும் இந்திய அரசிடமிருந்து தமது மக்களுக்காக பெற்றுக் கொடுத்தோம். இது யாராலும் மறைக்க முடியாத உண்மை. ஆனால் இன்று எம்மால் பெற்றுக்கொள்ளப்பட்ட பல்வேறு உதவித்திட்டங்களுக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு உரிமை கோருவது எமக்கு மிகுந்த வேதனையை தருகின்றது.
இங்கு மக்களாகிய உங்களால் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகள் நியாயமானவை உடனடியாக தீர்வு காணப்பட வேண்டியவை. குறிப்பாக நந்திக்கடலை ஆழமாக்கி அங்கு தொழிற்சாலையை மேற்கொண்டால் 3000 ற்கும் மேற்பட்ட குடும்பங்கள் பயன்பெற முடியும்.
இதே போன்று பனந்தொழிலை தமது வாழ்வாதார தொழிலாக கொண்டுள்ள பல ஆயிரக்கணக்கான குடும்பங்களின் பொருளாதாரத்தை மேம்படுத்த வேண்டும். இந்த செயற்றிட்டங்களை முன்னெடுக்க எமக்கு மக்கள் பலமே முக்கியமானது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார் .
இதே போன்று தேர்தல் பிரச்சாரக் கூட்டங்கள் முள்ளியவளை புதுக்குடியிருப்பு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் இடம் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|