மக்களின் அத்தியாவசிய தேவைகளுக்கு உடனடித் தீர்வு காணப்பட வேண்டும் – ஊர்காவற்றுறையில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Tuesday, October 16th, 2018

மக்கள் எம்மை நம்பியதன் அடிப்படையிலேயே இந்த பிரதேச சபையை மீண்டும் எமது கைகளில் ஒப்படைத்துள்ளார்கள். அந்த வகையில் இந்த மக்களின் எதிர்பார்ப்புக்களை ஈடு செய்யும் வபையில் இந்த பிரதேச சபையை நாம் ஆட்சி புரியும் காலத்தில் முடியுமான மக்கள் நலன்சார்ந்த செயற்திட்டங்களை முன்னெடுக்க தயாராக இருக்கின்றோம் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

ஊர்காவற்றுறையில் இன்றையதினம் இடம்பெற்ற கட்சியின் ஆலோனை சபைக் கூட்டத்திலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில் –

கடந்த காலங்களில் தீவகத்தின் வேலணை, நெடுந்தீவு மற்றும் ஊர்காவற்றுறை பகுதிகளில் உள்ளுராட்சி சபைகளை கைப்பற்றிக்கொண்டு பல்வேறுப்பட்ட மக்கள் நலன்சார்ந்த செயற்திட்டங்களை நாம் முன்னெடுத்திருந்தோம். அந்த அடிப்படையிலேயே நெடுந்தீவில் 24 மணிநேர மின்சாரத்தை வழங்கியிருந்தது மட்டுமன்றி உவர் நீரை நன்னீராக்கி மக்களுக்கு குடிநீர் தட்டுப்பாட்டையும் தீர்த்து வைத்திருக்கின்றோம்.

இதேபோன்றுதான் வேலணை மற்றும் ஊர்காவற்றுறை பிரதேச சபைகளுக்கூடாகவும் பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுத்துள்ளோம். தீவகத்தில் நீண்டகாலமாக இருக்கக்கூடியதான குடிநீர் பிரச்சினைக்கு எதிர்காலத்தில், சரியான முறையில் தீர்வு காண வேண்டியது அவசியமானது.

அந்த அடிப்படையில் இங்குள்ள குளங்களை ஆழமாக்கி புனரமைக்கும் பணிகளை கடந்த காலங்களில் முன்னெடுத்திருந்தோம். அதுபோன்று இனி வரும் காலங்களிலும் சிரமதானப் பணிகளு10டாகவும் ஏனைய வேலைத்திட்டங்களுக்கூடாகவும் குளங்களை பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தையும் ஆலோசனையாக வழங்கியிருந்தேன். அதனடிப்படையிலேயே இங்குள்ள குளங்கள் சில சிரமதானப் பணிகளுக்கூடாக செப்பனிடப்பட்டுள்ளதையும் நினைவுபடுத்திக் கொள்ள விரும்புகிறேன்.

இனிவரும் காலம் மழை காலமாக இருக்கும் நிலையில், நிலத்தடி நீரை பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தையம் மக்களுக்கு பிரதேச சபையூடாக தெளிவுபடுத்த வேண்டும் குறிப்பாக இங்குள்ள கால்நடைகளுக்கு கோடை காலங்களில் குடிநீர்த்தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யும் வகையில் தொட்டிகள் அமைக்கப்பட்டு அவற்றில் மழை நீரை சேகரிப்பதனூடாக கோடைகாலங்களில், கால்நடைகளுக்கு போதுமான நீரை வழங்க முடியும் என்ற அடிப்படையிலேயே தொட்டிகளும் அமைக்கப்பட்டுள்ளன.

இவ்வாறான தொட்டிகள் எதிர்காலத்தில் பாரியளவில் அங்காங்கு அமைக்கப்படும் திட்டங்களும் முன்மொழியப்பட்டு செயற்படுத்தப்படும் எண்ணங்களையும் நாம் செயல்வடிவத்தில் கொண்டுவர வேண்டும். எனவே பிரதேச சபையூடாக எடுக்கப்படும் தீர்மானங்கள் யாவும் செயல்வடிவம் பெறவேண்டும் என்பதும் அவசியமானது. அதுமாத்திரமன்று மாரி காலங்களில் எமது மக்களுக்கு ஏற்படக்கூடிய தொற்றுநோய்கள் உள்ளிட்ட நோய்த் தாக்கங்களில் இருந்தும் மக்களை பாதுகாக்கும் நடவடிக்கைகளிலும் பிரதெச சபை அர்ப்பணிப்புடனும் அக்கறையுடனும் உழைக்க வேண்டும்.

இதேவேளை வீதி விளக்குகள், பாதை புனரமைப்பு, குடிநீர் விநியோகம் உள்ளிட்ட மக்களுக்கான தேவைகளை இனங்கண்டு அவற்றை சரியான முறையில், முன்னெடுப்பதற்கு பிரதேச சபை எப்போதும் முன்ணுதாரனமாக திகழ வேண்டும் என்பதே எனது எதிர்பார்ப்பாகும். அதுமாத்திரமன்று அதிக மழை வீழ்ச்சி இடம்பெறும் பட்சத்தில் ஏற்படக்கூடிய அனர்த்த காலங்களின் போதும் மக்களின் தேவைகளை அறிந்துகொண்ட அவற்றுக்கான தீர்வுகளை காண்பதிலும் பிரதெச சபை மக்களின் எதிர்பார்ப்பிற்கு ஏற்ப செயற்பட வேண்டியது காலத்தின் கட்டாயம் என்றும் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டினார்.

இதன்போது கட்சியின் ஊர்காவற்றுறை பிரதேச சபை தவிசாளரும் கட்சியின் குறித்த பிரதேச நிர்வாக செயலாளருமான ஜெயகாந்தன், கட்சியின் யாழ் மாவட்ட நிர்வாக செயலாளர் கா வேலும்மயிலும் குகேந்திரன்  உள்ளிட்ட கட்சியின் முக்கியஸ்தர்கள் பலர் உடனிருந்தனர்.

IMG_20181016_154631 IMG_20181016_154811

Related posts:

அதிகளவு அரச ஊழியர்கள் இருந்தும் மக்களது தேவைகள் தீர்க்கப்படாதிருப்பது ஏன் - நாடாளுமன்றில் டக்ளஸ் தேவ...
கல்விக் கொள்கையில் மாற்றாந்தாய் மனப்பான்மை இருக்கின்ற போது சமச்சீரான சமூகத்தை எவ்வாறு உருவாக்கப் முட...
நிரந்தர நியமனம் தான் கிடைக்காது போனாலும் எமது சேவைக்கு ஏற்ற ஊதியத்தையாவது அதிகரித்துத் தாருங்கள்- அம...