மக்களால் தெரிவு செய்யப்பட்டவர் என்ற வகையில் வடக்கு முதல்வர் எமது மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க முன்வர வேண்டும்! – ஈ.பி.டி.பி.

Friday, April 8th, 2016

வடக்கு மாகாண சபையின் முதல்வராக எமது மக்களின் அதிகூடிய விருப்பு வாக்குகளால் தெரிவு செய்யப்பட்டுள்ளவர் எமது மக்களைச் சந்திப்பதைத் தவிர்த்தும், எமது மக்களின் பிரச்சினைகளை நடைமுறை சாத்தியமான முறையில் தீர்ப்பதற்கு எதுவித முயற்சிகளையும் மேற்கொள்ளாமலும் இருந்துவரும் நிலையில், மத்திய அரசுடனும், தனது கட்சி சார்ந்தவர்களுடனும் சச்சரவுகளை ஏற்படுத்திக் கொண்டு, அவற்றுக்கு வியாக்கியானம் கற்பிப்பதிலேயே காலத்தை கழித்து வருகிறார்.

மாகாண சபை என்பது எமது மக்களின் பிரச்சினைகள் பலவற்றைத் தீர்க்கக்கூடிய சபையாகும். இதனூடாக எமது மக்களின் பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்வதற்காகவே மாகாண சபையையும், அதன் உறுப்பினர்களையும் நம்பி எமது மக்கள் வாக்களித்தனர்.

இவ்வாறான நிலையில், அதனைக் கைப்பற்றி வைத்துக் கொண்டுள்ளவர்கள், தங்களது சுய அரசியல் நோக்கங்களுக்கான அறிக்கைகள் மற்றும் பிரேரணைகளை தயாரித்து ஊடக விளம்பரம் பெறுகின்ற நிறுவனமாகவே அதனைப் பயன்படுத்தி வருகின்றனர். தவிர, எமது மக்களின் பிரச்சினைகளை இனங்கண்டு, அவற்றைத் தீர்ப்பதற்கு அதனை இதுவரையில் பயன்படுத்துவதாக இல்லை.

எமது மக்களில் பலர் தங்களது பிரச்சினைகளைத் தெரிவித்து, அவற்றுக்கான தீர்வுகளைப் பெற முதல்வரைச் சந்திக்க பல காலமாகக் காத்திருந்தும் அவர் எமது மக்களைச் சந்திப்தைத் தவிர்த்து வருவதாகவும் கூறப்படுகின்றது.

இவர் வடக்கு மாகாண சபையின் முதல்வராகத் தெரிவு செய்யப்பட்டது எமது மக்களின் வாக்குகளால்தான் என்பதை இவர் மனதில் கொண்டு செயற்பட வேண்டும். அதைவிடுத்து, வாக்களித்த எமது மக்களுக்கு நன்றிக் கடன் பட்டிருப்பதாகக்கூட காட்டிக் கொள்ளாத நிலையிலுள்ள இவர், ஏதோ வானத்திலிருந்து தனக்கு முதல்வர் பதவி கிடைத்ததைப் போல் செயற்பட்டு வருவது எமது மக்களுக்கு செய்யும் துரோகமாகும்.

பல்வேறு பாதிப்புகளுக்கு உட்பட்டிருக்கும் எமது மக்களின் பல்வேறு பிரச்சினைகளைத் தீர்க்கக்கூடிய அதிகாரங்கள் தற்போதைய மாகாண சபை நடைமுறையில் இருந்தும், எமது மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க உண்மையான அக்கறையும், ஆற்றலும், திறமையும் இன்றி, வெவ்வேறு காரணங்களைக் கூறி, மக்களின் தேவைகளை நிறைவேற்றாமல், மக்களின் வாக்குகளின் மூலம் பெறப்பட்ட பதவியில் அமர்ந்து, அதற்குரிய சுகபோகங்களை மாத்திரம் அனுபவித்துக் கொண்டிருப்பதும் எமது மக்களுக்கு செய்யும் பாரிய துரோகமாகும்.

Related posts: