பொலித்தீன் விவகாரம் தொடர்பில் கிராமப்புறங்களையும் திரும்பிப் பாருங்கள் – நாடாளுமன்றில் செயலாளர் நாயகம் வலியுறுத்து!

Wednesday, May 23rd, 2018

இந்த நாட்டைப் பொறுத்தவரையில், நாளாந்த பொலித்தீன் பாவனை சுமார் 20 மில்லியன் என்றும், நாளாந்த லன்ச்சீட் பாவனை சுமார் 15 மில்லியன் என்றும் தெரியவருகின்றது. இதில் 40 வீதமே மீள்சுழற்சி செய்யப்படுவதாகவும், ஏனைய 60 வீதம் கழிவுகளாக அகற்றப்படுவதாகவும் தெரிய வருகின்றது. இந்தக் கழிவுகளில் கணிசமானவை இந்த  நாட்டின் நிலத்தில், நீர் நிலைகளில் தேங்கிக் கிடக்காமல் இருக்கமுடியாது.  இவற்றை எல்லாம் இனங்கண்டு, அவற்றை அகற்றுவதற்கு இதுவரையில் மேற்கொண்டுள்ள முயற்சிகள் என்ன? என்பது பற்றிக் கேட்க விரும்புகின்றேன் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

தேசிய சூழல் சட்டத்தின் கீழான 7 கட்டளைகள் தொடர்பில் நாடாளுமன்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் அவ்வாறு தெரிவித்துள்ளார் –

இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –

பொலித்தீன் தடை குறித்து நீங்கள் நகரப் பகுதிகளிலேயே குறிப்பாக அவதானத்தைச் செலுத்துவதாகத் தெரிகின்றது. நகரங்களை விட்டு, தூரப் பகுதிகளுக்குச் சென்று பாருங்கள். பொலித்தீன்களால் ஏற்பட்டுள்ள சூழல் பாதிப்புகளை உங்களால் கண்டு கொள்ள முடியும். கொழும்பில்கூட இரயில் பாதைகளை அண்டியதான பகுதிகளில், சேரிப் பகுதிகளில் போய்ப் பாருங்கள். பொலித்தீன்களை, பிளாஸ்ரிக் வகைகளை எரிக்கின்ற செயற்பாடுகளை காண முடியும்.

ஏற்கனவே ஒருமுறை பொலித்தீன் பாவனையில் மாற்றம் கொண்டு வந்தபோது, உணவகங்களில் ஒரு சாப்பாட்டின் விலை 10 ரூபாவால் அதிகரித்தது. பின்னர் அரிசி விலை, தேங்காய் விலைகள் அதிகரித்தபோது, மேலும் 10 ரூபா அதிகரித்தது. பின்னர் எரிவாயு விலை அதிகரிப்பில் 10 ரூபாவும், எரிபொருள் அதிகரிப்பில் மேலும் 10 ரூபாவும் என அதிகரித்துள்ளது.

எனவே, பொலித்தீன் தடையுடன், உக்கக்கூடிய வகையிலான மாற்று ஏற்பாடுகளுக்கான ஊக்குவிப்புகளை நீங்கள் மேற்கொள்ள வேண்டும். காகிதம் சார்ந்த உற்பத்திகளை பரவலாக ஆரம்பிக்கலாம். அதற்கென வாழைச்சேனை காகித ஆலையைப் பயன்படுத்தலாம். பனைசார் உற்பத்திகளை மேலும் ஊக்குவிக்கலாம். இதன் காரணமாக எமது பகுதிகளில் தொழில்வாய்ப்புகளையும் பெருக்கிட முடியும். எனவே, இவற்றை ஊக்குவிக்க முன்வாருங்கள். அதேபோன்று இந்த நாட்டின் சூழலைப் பாதுகாப்பதற்கு பரந்தளவிலான திட்டங்களை, வலுவுள்ளதாக, பலமுள்ளதாக முன்னெடுக்கும் வழியைப் பாருங்கள் எனக் கேட்டுக் கொள்கின்றேன்.

Untitled-10 copy

Related posts:

பூநகரி, சோலைநிலா குடியிருப்பு  பகுதிக்கு மின்சாரம் பெற்றுக்கொடுக்க  டக்ளஸ் தேவானந்தா நடவடிக்கை!
மருந்துப் பொருட்களின் விலைக் குறைப்பு தொடர்பில் மேலும் அவதானம் செலுத்தப்பட வேண்டும் - நாடாளுமன்றில் ...
கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா - கிராமிய நீர் வழங்கல் திட்ட இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த இடை...