பொறியியல் பீடத்தை வடமாகாணத்திற்கு கொண்டுவந்தவர்கள் நாமே – டக்ளஸ் தேவானந்தா!

எமது மாணவர்களின் உயர் கல்வியை கருத்தில் கொண்டு வடமாகாணத்தில் பொறியியல் துறையை கொண்டுவந்தவர்கள் நாமே என டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலை முன்னிட்டு கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி பிரதேசத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள டக்ளஸ் தேவானந்தா முட்கொம்பன் பகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் ஆதரவாளர்களுடனான நடைபெற்ற சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் –
1978 ஆம் ஆண்டுமுதல் யாழ்.பல்கலைக்கழகத்திற்கு பொறியியல் துறையை கொண்டுவரவேண்டும் என்பதில் பல தரப்பாலும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டபோதிலும் அவை யாவும் கைகூடாமலேயே இருந்துவந்தன.
ஆனால் கடந்த அரசுடனான எமது இணக்க அரசியலினுடாக கிளிநொச்சி அறிவியல் நகரில் பொறியியல் பீடத்தை நாம் நிறுவிக்காட்டியுள்ளோம். அது எமது அரசியல் சாணக்கியத்திற்குக் கிடைக்கப்பெற்ற மாபெரும் வெற்றியாகவே கருத முடியும்.
எமது இந்த அரசியல் நகர்வுக்கு எவரும் உரிமைகோர முடியாது. இதேபோன்று இன்னும் இந்தப் பகுதியில் மட்டுமன்றி கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ளூராட்சி மன்றங்களினூடாக முன்னெடுக்கப்படவேண்டிய வேலைத்திட்டங்கள் இருக்கின்றபோதிலும் அவற்றை செயற்படுத்துவதில் கடந்த காலங்களில் நாம் பல்வேறு நெருக்கடிகள் எதிர்கொண்டிருக்கப்பட்டதை யாவரும் அறிவீர்கள்.
கிடைக்கப்பெற்ற அதிகாரத்தையும் மக்களின் பலத்தையும் கொண்டு, மக்களுக்கு சரியான சேவையாற்றாதவர்களின் கைகளில் ஆட்சியும் அதிகாரமும் தொடர்ந்தும் இருப்பதால் எவ்விதமான பயன்களும் மக்களுக்குக் கிடைக்கப்போவதில்லை என்றும் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்
எனவே மக்கள் இந்த உண்மையை உணர்ந்துகொண்டு எமது கட்சியின் வீணைச் சின்னத்திற்கு வாய்ப்பளித்து எம்மை வெற்றியடையச் செய்வார்களேயானால் உங்களின் பிரதேசத்தை நீங்கள் வென்றெடுத்து நீங்களே உங்களது பகுதிகளை அபிவிருத்தியால் தூக்கி நிறுத்த முடியும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.
|
|