பொருளாதார ஈட்டல்களுக்கான வாய்ப்புகளை தடுக்க வேண்டாம் – நாடாளுமன்றில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தோவானந்தா வலியுறுத்து!

Friday, May 25th, 2018

கடந்த காலங்களில் எமது பகுதிகளில் பல்வேறு கைத்தொழிற்துறைகள் செயற்பட்டு வந்துள்ளன. ஆனாலும் யுத்தம் காரணமாக அத்துறைகள் அனைத்தும் அழிந்துவிட்டுள்ள நிலையில், அவற்றை மீளக் கட்டியெழுப்புவதற்கான முயற்சிகளும் போதிய செயற்திறனுடன் முன்னெடுக்கப்படாதுள்ளது.

இந்நிலையில், இருக்கின்ற வாழ்வாதார துறைகளும், பல்வேறு தடைகளால் உரிய பயன்பாடுகளை எமது மக்களுக்கு தராத நிலையில், எமது மக்கள் தங்களது வாழ்வாதாரங்களுக்காக எங்கு போய், என்ன செய்ய முடியும்? என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்றையதினம் மதுவரிக் கட்டளைச் சட்டத்தின் கீழான கட்டளை, 2016ஆம் ஆண்டின் 24ஆம் இலக்க ஒதுக்கீட்டுச் சட்டத்தின் கீழான ஏழு பிரேரணைகள் தொடர்பிலான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் அவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் –

1971ஆம் ஆண்டின் 46ஆம் இலக்க தென்னை அபிவிருத்திச் சட்ட திருத்தத்தின் மூலமான 1975ஆம் ஆண்டின் 24ஆம் இலக்க திருத்தச் சட்டத்தின் மூலமாக பனை அபிவிருத்திச் சபையானது சட்ட ரீதியாக உருவாக்கப்பட்டதன் நோக்கமானது, கற்பக தருவான ‘பனையையும், பனைத் தொழிலையும் பாதுகாத்து, அதன் மேம்பாட்டிற்காக பாடுவது’ என உள்ள போதிலும், கடந்த கால யுத்தம் காரணமாக எமது பகுதிகளில் பெருந்தொகையான பனை மரங்கள் அழிக்கப்பட்டுள்ளன. பனை சார்ந்த தொழிற்துறைகளில் ஈடுபட்டு வந்திருந்த மக்கள் இடப்பெயர்வுகளுக்கும், பல்வேறு இழப்புகளுக்கும் முகங்கொடுக்க நேரிட்டிருந்தது.

யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டதன் பின்னர், எமது மக்கள் போதியளவு வாழ்வாதார வசதிகளின்றிய நிலையிலேயே மீளக் குடியேற வேண்டிய நிலைமைகள் ஏற்பட்டிருந்தன.  இன்றும்கூட இத்தகைய நிலைமைகளில் போதியளவு மாற்றங்கள் ஏற்படாமலேயே இருப்பதையும் இங்கு சுட்டிக்காட்டியே ஆக வேண்டும்.

இத்தகைய நிலையில் இன்று இந்த நாட்டின் பொருளாதார நிலைமையை எடுத்துக் கொண்டாலும் திருப்தி தரக்கூடிய நிலையில் இல்லை. அமெரிக்க டொலரின் இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று 159 ரூபாவினை எட்டிவிட்டுள்ளது. நிலையான வருமானத்தினை எட்டக்கூடிய உற்பத்திகளின் வறுமை நிலைக்கு நாடு முகங்கொடுத்து வருவதும், முதலீட்டாளர்களின் தடுமாற்றங்களும் இல்லாமல் இல்லை.

எனவே, இத்தகையதொரு நிலைமை நாட்டில் நிலவுகின்ற காலகட்டத்தில் எமது பகுதிகளில் தங்களது வாழ்வாதாரங்களை ஈட்டிக் கொள்வதற்கு இருக்கின்ற வாய்ப்புகளிலும் தடைகளை ஏற்படுத்தக் கூடாது என்பதையே நான் இங்கு வலியுறுத்த விரும்புகின்றேன் என அவர் மேலும் தெரிவித்தார்.

Untitled-2 copy

000

Related posts:


வடக்கு - கிழக்கில் உயிரிழந்த ஊடகவியலாளர்களது குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த ஒரு விN~ட திட்ட...
தற்போதைய அரசியல் சூழலை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களின் தீர்வுக்காக பயன்படுத்த வேண்டும் - ...
கிளி. இல் கொரோனா சமூக தொற்றில்லை - பரவலை மட்டுப்படுத்தி கட்டுப்படுத்த களத்தில் அமைச்சர் டக்ளஸ்!