பொங்கல் திருநாள் தமிழர்களுக்கு – புது வழியைப் பிறக்கச் செய்யட்டும் – தைப்பொங்கல் வாழ்த்துச் செய்தியில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா!

Tuesday, January 15th, 2019

தை பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள் தமிழர்கள் வாழ்வில் தை பிறந்தாலும் வழிகள் பிறப்பதாக இல்லை. புதிய அரசியலமைப்பு வரைபும் தமிழர்களின் தீர்வுக்கு வழியை பிறக்கச் செய்யும் அரசியல் சூழல் தற்போதிருப்பதாகத் தெரியவில்லை என்று ஈ.பி.டி.பி.யின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா விடுத்துள்ள தைப்பொங்கல் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் –

போர் ஏற்படுத்திய வடுக்களும், பொருளாதாரச் சுமையுமாக வாழும் தமிழ் மக்களின் வாழ்க்கை வறுமையின் பிடியில் சிக்குண்டு கிடக்கின்றது. பொருளாதார ரீதியாக தமிழர்களின் வாழ்க்கையை உயர்த்திவிட உழைக்காதவர்கள், தொழில் வாய்ப்புகள் வேண்டாம், அபிவிருத்தி வேண்டாம், என்றும் பொங்கலுக்குத் தீர்வு, தீபாவளிக்குத் தீர்வு என்றும் கூறிக்கொண்டு காலத்தை விரையமாக்கிக்கொண்டு இருக்கின்றார்கள்.

தமிழ் மக்களின் அபிலாஷைகளை நிராகரித்து ஒருமித்த நாடு என்ற ஒற்றையாட்சிக்குள் தமிழ் மக்களின் அபிலாஷைகளை சட்ட ரீதியாக வலுவிழக்கச் செய்யவே முயற்சிக்கின்றார்கள். புதிய அரசியலமைப்பு வரைபானது தனி நபர்களின் சுயநல சுகபோகங்களுக்கு உடனடித் தீர்வைக் கொடுக்குமே தவிர, தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளுக்கு நிலையான தீர்வைப் பெற்றுக்கொடுக்கும் என்று தமிழ் மக்கள் நம்பவில்லை.

தமிழ் மக்களை காலத்திற்குக் காலம் உசுப்பேற்றி தங்களின் அரசியல் நலன்களை முன்னிறுத்தி செயற்படுவோர், தொடர்ந்தும் இல்லாத ஊருக்கே வழிகாட்டுகின்றார்கள். அவர்கள் காட்டும் வழியில் தமிழ் மக்கள் போய்ச் சேர அங்கே ஒரு இலக்கில்லை என்பதையே பல தசாப்தங்களாக நாம் அவதானித்து வந்திருக்கின்றோம்.

வறுமையில் வாடுவோருக்கு தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்தும், இயற்கை அழிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு காலம் தாழ்த்தாது நஷ்ட ஈடுகளைப் பெற்றுக்கொடுத்தும் துன்பத்திலிருந்து எமது மக்களை மீட்டெக்கப்படும் பொழுதே திருநாள் கொண்டாட்டங்கள் மகிழ்ச்சியுள்ளதாக அமையும்.

அதைவிடுத்து எமது மக்களின் அடுப்படியில் பூனைகள் தூங்கிக் கிடக்கும் வறுமையான வாழ்வில், பொங்கலும், ஏனைய பண்டிகைகளும் மகிழ்ச்சியானதாக அமையாது. எனவே பொருளாதார தன்னிறைவோடு மகிழ்ச்சியாக எமது மக்கள் வாழ்வதற்கு புதிய வழியை பிறக்கச் செய்யும் பொங்கலாக இந்தப் பொங்கலாவது அமையட்டும் என்றும் அந்த வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

Related posts:


அச்சுறுத்திவரும் சட்டவிரோத கடல் தொழில் துறை நடவடிக்கைகள் அனைத்தும் உடனடியாக நிறுத்தப்படும் - டக்ளஸ் ...
அரசியல்பலத்தை மக்கள் வழங்கினால் வலி. வடக்கின் எஞ்சிய பிரதேசங்களையும் விடுவிக்க முடியும் – அமைச்சர் ட...
நல்லூர் பிரதேச சபையால் பாதிக்கப்பட்ட திருநெல்வேலி பொதுச்சந்தை வியாபாரிகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவ...