பெரும்போக செய்கைக்கு முன்னதாக வயற் காணிகள் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தல்!

Friday, September 17th, 2021

சட்ட விரோத மணல் அகழ்வுகள் கட்டுப்படுத்தப்பட வேண்டும் என்பதுடன் இயற்கை வளங்களுக்கு பாதிப்புக்களை ஏற்படுத்தாத வகையிலும் மக்கள் நியாயமான விலையிலும் மணல் கிடைப்பதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அதிகாரிகளுக்கு வலியுறுத்தினார்.

மேலும், பெரும்போக நெற் செய்கைக்கு முன்னதாக வயல்க் காணிகள் பகிர்ந்தளிக்கும் செயற்பாடுகள் நிறைவடைய வேண்டும் என்று வலியுறுத்திய அமைச்சர், விவசாயச் செயற்பாடுகளும் அத்தியாவசிய சேவையாக உள்ளடக்க்பட்டுள்ளமையினால் விவசாய நடவடிக்கைகளுக்கான காணி வழங்கும் செயற்பாடுகளுக்கும் அதிகாரிகள் முன்னுரிமையளித்துச் செயற்பட வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

கிளிநொச்சி மாவட்டத்தின் நிலைமைகளை ஆராயும் வகையில்  அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நேற்று(16.09.79) நடைபெற்ற மெய்நிகர் வழியூடான கலந்துரையாடலின் போதே, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேற்கண்ட கருத்துக்களை தெரிவித்தார்.

கிளிநொச்சி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற சட்ட விரோத மணல் அகழ்வினை கட்டுப்படுத்துவது தொடர்பாக இன்றைய கலந்துரையாடலின்போது விரிவாக ஆராயப்பட்டது. இதன்போது கிளிநொச்சியில் இடம்பெற்று வருகின்ற சட்ட விரோத மணல் அகழ்வு தொடர்பாக தென்னிலங்கை ஊடகங்களில் வெளியாகிய செய்தியினை சுட்டிக்காட்டிய அமைச்சர், குறித்த சட்டவிரோதச் செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதற்கான பிரதேசப் பொலிஸ் தரப்பினரின் ஆலோசனைகளைக் கேட்டறிந்தார்.

மணல் அனுமதிப் பத்திரங்களில், மணல் அகழ்விற்கு அனுமதிக்கப்படுகின்ற பிரதேசங்கள் மற்றும் மணல் ஏற்றும் வாகனங்களின் பயணப் பாதைகள் போன்றவை தெளிவாக சுட்டிக்காட்டப்படுமானால் இலகுவாக சட்ட விரோத மணல் அகழ்வினைக் கட்டுப்படுத்த முடியும் எனத் தெரிவித்த பொலிஸ் தரப்பினர், சட்ட விரோத மணல் அகழ்வினை கட்டுப்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் உறுதியளித்தனர்.

மக்களுக்கு தேவையான மணலினை பெற்றுக் கொள்ள முடியாமல் இருக்கின்றமையும் சட்டவிரோத மணல் அகழ்விற்கு காரணமாக இருக்கின்றது என்ற கருத்தும் இதன்போது முன்வைக்கப்பட்டது.

இந்நிலையில், மணல் அகழ்விற்கான அனுமதிகளைப் பொருத்தமானவர்களுக்கு வழங்குவதில் காணப்படுகின்ற நடைமுறைச் சிக்கல்கள் தொடர்பாக ஆராயப்பட்டதுடன், வனப் பாதுகாப்புத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டினுள் இருக்கின்ற காட்டுப் பிரதேசத்தில் மணல் அகழ்விற்கு பொருத்தமான இடங்களை அடையாளப்படுத்துவதுடன், அவ்வாறான பிரதேசங்களில் இருந்து மணல் அகழ்வினை மேற்கொள்வது தொடர்பாக மாவட்ட அரசாங்க அதிபருடன் ஒருங்கிணைந்து செயற்படுமாறு வனப் பாதுகாப்பு அதிகாரிகளை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கேட்டுக் கொண்டார்.

அதேவேளை, ஜெயபுரம் பிரதேசத்தில் மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்ட வயல் நிலங்களில் ஒரு பகுதியினை வன்னேரிக்குளம் பிரதேச மக்கள் உரிமை கோரியிருப்பது தொடர்பான பிரச்சினை, மற்றும் கௌதாரிமுனையில் வயல் காணிகளுக்காக விண்ணப்பித்திருக்கின்றவர்களுக்கு காணிகளை பகிர்ந்தளித்தல் ஆகிய செயற்பாடுகளை பெரும்போக நெற் செய்கை மேற்கொள்வதற்கு ஏதுவாக, பருவ காலத்திற்கு முன்னதாக நிறைவு செய்யுமாறும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சம்மந்தப்பட்ட அதிகாரிகளைக் கேட்டுக் கொண்டார்.

Related posts:

கைப்பணித்துறையின் மேம்பாட்டுக்கு என்றும் உறுதுணையாக இருப்போம் - செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா!
தொல்பொருள் திணைக்களம் வடக்கு கிழக்கில் ஆக்கிரமிப்பு யுத்தம் நடத்துகின்றது – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்...
எரிபொருள் நெருக்கடிகளுக்கு விரைவில் தீர்வு - கடற்றொழிலாளர்களுக்கு அமைச்சர் டக்ளஸ் உத்தரவாதம்!

மன்னார்ப் பகுதி கடற்றொழிலாளர்கள் மீதான தாக்குதல்கள் கண்டிக்கப்பட வேண்டிவை! செயலாளர் நாயகம் டக்ளஸ் ...
நியாயத்தினதும் மனித நேயத்தினதும் அடிப்படையில் வீடுகள் இல்லாத மக்களுக்கு வீட்டத் திட்டங்கள் நிச்சயம் ...
மயிலிட்டி மீன்பிடித் துறைமுக காவல் பணியாளர்கள் இருவர் நியமனம் – கடிதங்களை வழங்கிவைத்தார் கடற்றொழில் ...