புலம்பெயர் தமிழ் மக்களின் உற்பத்தி முயற்சிகளை எம் தாயக தேசமெங்கும் ஊக்குவிப்போம் – டக்ளஸ் தேவானந்தா!

Tuesday, February 21st, 2017

புலம்பெயர் எமது மக்களின் பங்களிப்புகளை எமது பல்வகை உற்பத்தித்துறைக்கு நாம் பெற்றுக் கொள்ள வேண்டுமானால் அதற்கேற்ற வசதிகளை நாம் ஏற்படுத்திக் கொடுப்பதன் மூலமே அது சாத்தியமாகும் என நான் நம்புகின்றேன் என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்றையதினம் இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சட்டத்தின் மீதான கட்டளை செயல்நுணுக்க அபிவிருத்திக் கருத்திட்டங்கள் சட்டத்தின் கீழான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில் –

இரட்டைப் பிரஜாவுரிமைகளை வழங்குவது போன்றே, அம் மக்கள் அடிக்கடி எமது நாட்டுக்கு வருகை தருகின்ற வகையிலான சூழல்களும், அவர்கள் தற்போது வாழ்ந்து வருகின்ற நாடுகளில் அவர்கள் முதலீடுகளை மேற்கொள்வதைவிட சிறப்பான வாய்ப்புகளை அவர்களுக்கு எமது நாட்டில் உருவாக்கி, இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்ளும் வகையில் அவர்கள் கவரப்பட வேண்டும். அதற்கான அரசியல் சூழல் ஏற்படுத்தப்பட வேண்டும் என இச் சந்தர்ப்பத்திலே கேட்டுக் கொள்கின்றேன்.

எமது நாட்டில் முதலீடுகளை மேற்கொள்வதற்கு புலம்பெயர் மக்களுக்கு பல்வேறு தரப்பினரால் அழைப்பு விடுக்கப்படுகின்ற போதிலும், அதற்கான சூழல் இங்கு உருவாக்கப்படவில்லை என்றும், அரசியல்வாதிகளுக்கு இலஞ்சம் வழங்கி, கொமி~ன் வழங்கி இங்கு முதலீடுகளை மேற்கொள்ள புலம்பெயர் மக்கள் தயாராக இல்லை என்றும் ஊடக வாயிலாக அம்மக்களது பிரதிநிதிகள் கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். எனவே, இதன் உண்மை என்னவென்று ஆராய்ந்து, அவ்வாறான தடைகள் இருக்குமாயின், அவை அகற்றப்பட வேண்டும்.

அத்துடன், கைத்தொழிற் துறை சார்ந்தும் மேலும் எத்தகைய விருத்திகளை கொண்டு வரலாம் என்பது குறித்து ஆராய்ந்து, அதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட வேண்டும்;. புதிய கைத்தொழில்களை எமது நாட்டுக்குள் கொண்டு வருவதற்கான பெரும் முயற்சிகள் எட்டப்பட வேண்டும். தனியார்த் துறைக்கும் அரசுக்கும் இடையிலான ஒத்துழைப்புகள் மேம்படுத்தப்பட வேண்டும். உற்பத்திகள் குறித்த அதிக கவனம் செலுத்தப்படுவதுடன், கூட்டு தொழில் முயற்சிகள் தொடர்பில் அதிக ஆர்வமும் காட்டப்பட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன்.

அதே நேரம், எமது கடல் வளத்தைப் பயன்படுத்தியும், அது சார்ந்த பல்வேறு தொழிற்துறைகளை அமைத்துக் கொள்ளக்கூடிய வாய்ப்புகள் குறித்து ஆராய்ந்து, உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதும் அவசியமாகும்.

யுத்தப் பாதிப்புகளுக்கு நேரடியாக முகங்கொடுத்திருந்த வடக்கு – கிழக்கு மாகாணங்கள் நீண்ட காலமாகவே கைவிடப்பட்ட கைத்தொழில்சார் பகுதிகளாகவே காணப்படும் நிலையில், இங்கு மேற்கொள்ளத்தக்க கைத்தொழில்கள் பற்றிய பல்துறை ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு, அப் பகுதிகளில் அத்துறைகளை முன்னேற்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

parliment 45555 copy

Related posts:


தாயகத்தில் வாழும் உறவுகளின் வாழ்வியலை முன்னேற்ற புலம்பெயர் தேச உறவுகள் முன்வரவேண்டும் – அமைச்சர் டக்...
அரசியலமைப்புப் பேரவையின் அமைப்பை மீள் பரிசீலித்தல் வேண்டும் - நாடாளுமன்றில்டக்ளஸ் எம்பி சுட்டிக்காட்...
நல்லாட்சியில் அதிபர் சேவை நியமனத்தில் அநீதி - நியாயம் பெற்றுத்தரக் கோரி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவ...