புலம்பெயர் உறவுகள் தமது பூர்வீக பிரதேசங்களின் மேம்பாட்டிற்கு உதவவேண்டும் – டக்ளஸ் தேவானந்தா!

Sunday, May 14th, 2017

புலம்பெயர் தேசங்களில் வாழும் உறவுகள் தமது பூர்வீக பிரதேசங்களின் அபிவிருத்தி முன்னேற்ற செயற்பாடுகளுக்கு முழுமையான பங்களிப்பை வழங்கவேண்டும். அதனூடாகவே குறித்த பிரதேசங்களில் மாற்றத்தைக் கொண்டுவர முடியுமென ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள கட்சியின் தலைமைச் செயலகத்தில் இன்றையதினம் (14) நடைபெற்ற நாரந்தனை பிரதேச மக்கள் பிரதிநிதிகளுடனான சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் –

வாழ்கின்ற சூழலில் இருந்து சமூக முன்னேற்றத்துடன் கூடியதான அபிவிருத்தியை நோக்கி மக்களை முன்கொண்டு செல்வதே எமது கட்சியின் நிலைப்பாடாக உள்ளது.

கடந்த காலங்களில் நாம் முன்னெடுத்துவந்த இணக்க அரசியலினூடாக கிடைக்கப்பெற்ற சந்தர்ப்பங்களை உரிய முறையில் பயன்படுத்தி தீவகம் உள்ளிட்ட வடக்கின் பல்வேறு பகுதிகளில் முடியுமானவரையில் வீதிப்புனரமைப்பு, உட்கட்டுமாணங்கள், போக்குவரத்து, கல்வி, சுகாதாரம், சுயதொழில், வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை மேற்கொண்டிருந்தோம்.

ஆனால் மாறிவந்த அரசியல் சூழலில் எம்மால் தொடர்ந்தும் அவ்வாறான பணிகளை முன்னெடுப்பதில் துரதிஸ்டவசமான சூழல் எற்பட்டுள்ளபோதிலும் எமது மக்களின் நாளாந்த பிரச்சினைகளுக்கு தீர்வுகளைப் பெற்றுக்கொடுப்பதற்காக நாடாளுமன்றில் தொடர்ச்சியாக குரல்கொடுத்து வருகின்றோம்.

இந்நிலையில் முன்னர் எதிர்ப்பரசியலையும் தற்போது எமது வழிமுறையை பின்பற்றி இணக்க அரசியலையும் முன்னெடுத்தவருகின்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரால் மக்கள் நலன்சார்ந்த செயற்றிட்டங்களை உரிய மறையில் முன்னெடுக்கப்பட முடியாமல் இருப்பதையிட்டு வேதனையடைகின்றேன்.

தேர்தல் காலங்களில் மக்கள் தமக்கு வாக்களிக்கும் பட்சத்தில் அவர்களது நாளாந்த பிரச்சினைகள் உள்ளிட்ட பல பிரச்சினைகளுக்கு உரிய தீர்வுகளை பெற்றுத்தருவோம் என கூறிக்கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் நாட்டின் எதிர்க்கட்சி தலைவர் உள்ளிட்ட அதிகாரம் மிக்க உயர் பதவிகளை பெற்றுக்கொண்டுள்ள போதிலும், இதுவரையில் மக்களுக்காக எதனைச் செய்துள்ளார்கள் என்றும் கேள்வியெழுப்பினார்.

மக்களின் வாக்குகளை சூறையாடிய கூட்டமைப்பினரை நம்பி ஏமாற்றம் கண்ட மக்கள் தமது அடிப்படை பிரச்சினைகள் உள்ளிட்ட தேவைகளை பெற்றுக்கொள்வதற்கு வீதியில் இறங்கி போராடவேண்டிய துர்ப்பாக்கிய நிலையும் தற்போது ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் யுத்தப் பாதிப்புகளில் இருந்து மீண்டெழுவதற்காக காத்திருக்கும் எமது உறவுகளுக்கு நாரந்தனை மக்கள் நலன்புரி சங்கத்தின் பிரான்ஸ் கிளையினர் உதவிக்கரம் நீட்டியிருப்பது எமக்கு மகிழ்ச்சியளிக்கும் அதேவேளை, அச்சங்கத்திற்கு எனது வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.

மேலும் புலம்பெயர் தேசங்களில் வாழும் எமது உறவுகள் தமது பூர்வீக பிரதேசங்களினதும் அங்கு வாழும் உறவுகளினதும் அபிவிருத்திக்கு கரம் கொடுத்து தூக்கி நிறுத்த முன்வரவேண்டும் எனவும் இதனூடாகவே சமூகத்தில் பாரிய மாற்றங்களை ஏற்படுத்த முடியும் எனவும் தெரிவித்தார்.

இந்த சந்திப்பில் கட்சியின் யாழ் மாவட்ட நிர்வாக செயலாளர் கா வேலும்மயிலும் குகேந்திரன்,  கட்சியின் ஊர்காவற்றுறை பிரதேச நிர்வாக செயலாளர் ஜெயகாந்தன், கட்சியின் ஊடக செயலாளர் தோழர் ஸ்ராலின் மற’;றும் யாழ் மாநகரசபை முன்னாள் முதல்வர் யோகேஸ்வரி பற்குணராஜா உள்ளிட்ட கட்சியின்  முக்கியஸ்தர்களும் உடனிருந்தனர்.

Related posts:

முன்னாள் போராளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்குவதிலுள்ள தடைகள் என்ன? நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ்...
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களை முருகண்டி பிள்ளையார் ஆலய நிர்வாகிகள் சந்தித்து கோரிக்கை முன்வைப்பு...
யாழ் மாவட்ட கூட்டுறவுச் சபை ஊழியர்கள் தமது எதிர்காலம் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் ஆராய்...