புலம்பெயர்ந்த எமது மக்கள்முக்கிய தேர்தல்களில் வாக்களிக்கும் வசதி வேண்டும் – டக்ளஸ் தேவானந்தா

Tuesday, July 4th, 2017

இடம்பெயர்ந்து எமது நாட்டுக்குள் வாழ்ந்து வருகின்ற வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்களைப் போன்றே வெளிநாடுகளிலும் மேற்படி மாகாணங்களைச் சேர்ந்த மக்கள் புலம்பெயர்ந்து வாழ்ந்து வருகின்றனர்.  இந்த புலம்பெயர் மக்களுக்கும் எமது நாட்டில் இடம்பெறுகின்ற முக்கியத் தேர்தல்களின்போது வாக்களிப்பதற்கான விசேட ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற கோரிக்கையை நான் தொடர்ந்தும் முன்வைத்து வருகின்றேன்.

அந்த வகையில் தற்போதைய நிலையில் சுமார் 10 இலட்சத்திற்கும் அதிகமான எமது மக்கள் புலம்பெயர்ந்த நிலையில் இந்தியா உட்பட வெளிநாடுகளில் வாழ்ந்து வருகின்றனர்.

மேற்படி மக்கள் எமது நாட்டிலிருந்து புலம்பெயர்ந்தபோது, எமது நாட்டில் வாக்களிக்கக் கூடிய வயதினை எட்டியிருப்பின் அவர்களுக்கு எமது நாட்டில் நடைபெறுகின்ற ஜனாதிபதித் தேர்தல்கள் பொதுத் தேர்தல்கள் மற்றும் மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் போன்றவற்றில் வாக்களிக்கக்கூடிய வசதிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

கடந்த கால யுத்தம் மற்றும் இயற்கை அனர்த்தங்கள் போன்றவை காரணமாகவும் ஏற்கனவே எமது பகுதிகளில் அபிவிருத்திச் செயற்பாடுகள் புறக்கணிக்கப்பட்டிருந்த நிலையிலும், வடக்கு, கிழக்கு மாகாணங்கள் பல்வேறு அபிவிருத்தி நிலைகளை இன்னும் எட்ட வேண்டிய நிலையிலேயே உள்ளன. அதே நேரம் எட்டப்பட வேண்டிய அபிவிருத்தியானது எமது மக்களின் வாழ்வாதாரங்களுடன் தொடர்புடையதாக அமைய வேண்டிய கட்டாய நிலைமைகளும் காணப்படுகின்றன.

இத்தகையதொரு நிலையில் தற்போது குடியிருக்கும் மக்களின் தொகையினைப் பொறுத்தே மாவட்டங்களுக்கான நாடாளுமன்ற பிரதிநிதிகளின் எண்ணிக்கை நிர்ணயிக்கப்படுவதால் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி தேர்தல் மாவட்டத்தைப் பொறுத்தவரையில் நாடாளுமன்ற உறுப்பினர்களது தொகை குறைப்பு என்பது எமது பகுதியினதும் மக்களினதும் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வதற்கும் எமது பகுதிகளை மீளக் கட்டியெழுப்புவதற்கும் பெரிதும் பாதகமாகவே உள்ளது.

எனவே நான் தொடர்ந்து வலியுறுத்தி வருவதைப் போல் புலம்பெயர் மக்களுக்கும் எமது முக்கியத் தேர்தல்களில் வாக்களிக்கக்கூடிய வசதிகளை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து இந்த அரசு அவதானம் செலுத்த வேண்டும் என்பதை மீண்டும் வலியுறுத்த விரும்புகின்றேன் என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா இன்றைய தினம் நாடாளுமன்றத்தில் உரையாற்றும்போது  சுட்டிக்காட்டியுள்ளார்.

Related posts:

நலன்புரி முகாம்களில் வாழும் மக்களின் உணர்வுகளுக்கு அரசாங்கம் மதிப்பளித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் ...
பெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்கும் பொருத்தமான பொருளாதாரத் திட்டம் உருவாக்கப்பட வேண்டும் - டக்ளஸ் த...
வடக்கின் பொருளாதார மேம்பாட்டிற்கு கைத்தொழில் மற்றும் வாணிபத்துறை அமைச்சின் பங்களிப்பு மிக அவசியம் - ...