புரெவிப் புயலில் பாதிக்கப்பட்ட கடற்றொழில் உபகரணங்களுக்கு விரைவில் நஸ்டஈடு – அதிகாரிகள் இறுதிக் கட்ட நடவடிக்கை!

Sunday, August 29th, 2021

புரெவிப் புயலினால் பாதிக்கப்பட்ட கடற்றொழில் உபகரணங்களுக்கான நஸ்ட ஈடுகள் விரைவில் வழங்கப்படவுள்ளன.

இதுதொடர்பாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கிய நிலையில்,

நஸ்ட ஈடுகளை வழங்குவதற்கான ஒழுங்கு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதனடிப்படையில், புரெவிப் புயல் காரணமாக தொழில் உபகரணங்கள் பாதிக்கப்பட்ட மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சி, யாழ்ப்பணம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த கடற்றொழிலாளர்கள்,  நஸ்டஈட்டு தொகையினைப் பெற்றுக்கொள்ளவுள்ளனர்.

கடந்த வருடம் டிசெம்பர் மாதம் வீசிய புரெவிப் புயலினால் வடக்கு மாகாணத்தினைச் சேர்ந்த கடற்றொழிலாளர்களின் தொழில் உபகரணங்கள் பகுதியளவிலும் முழுமையாகவும் பாதிக்கப்பட்டிருந்தன.

குறித்த பாதிப்புக்கள் தொடர்பான் முழுமையான மதிப்பீட்டு அறிக்கையினை சம்மந்தப்பட்ட அதிகாரிகளின் ஊடாகப் பெற்றுக்கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, மதிப்பீட்டு அறிக்கையின் அடிப்படையில் சுமார் 58 கோடி ரூபாய்க்கும் மேற்பட்ட பெறுமதியான நஸ்டஈட்டினை வழங்குவதற்கான அமைச்சரவை பத்திரம் ஒன்றினை சமர்ப்பித்திருந்தார்.

குறித்த அமைச்சரவைப் பத்திரம் தொடர்பாக ஆராய்ந்த அமைச்சரவை, குறித்த நஸ்ட ஈட்டினை வடக்கு கடற்றொழிலாளர்களுக்கு வழங்குதற்கு அங்கீகாரம் அளித்த நிலையில், அவற்றை வழங்குவதற்கான நடவடிக்கைகளை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

ஏற்கனவே, புரெவிப் புயலினால் பாதிப்படைந்த வீடுகளை புனரமைப்பதற்கும், பாதிக்கப்பட்டவர்ளுக்கான உடனடி உலர் உணவு போன்ற நிவாரண நடவடிக்கைகளுக்காகவும் அரசாங்கத்தினால் சுமார் 36 மில்லியனுக்கும் மேற்பட்ட நிதியுதவி வழங்கப்பட்டிருந்த நிலையில், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் பரிந்துரைக்கு அமைவாக கடற்றொழில் உபகரணங்களுக்கான நஸ்ட ஈட்டு தொகை வழங்கி வைக்கப்படவுள்ளமை  குறிப்பிடத்தக்கது.

000

Related posts: