புரவியை எதிர்கொள்ள அனைத்து ஏற்பாடுகளும் தயார் – ஈ.பி.டி.பி அமைப்பாளர்களுக்கு அமைச்சர் டக்ளஸ் உத்தரவு!

Wednesday, December 2nd, 2020

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண காலநிலையை எதிர்கொள்வதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள  கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, புரவி புயல் நாட்டை தாண்டிச் செல்லும் வரை அனைவரையும்  பாதுகாப்பான இடங்களில் இருக்குமாறும் தேவையேற்படின் தகவல்களை தெரிவிக்க தேவையான கட்டமைப்புக்களின் தொலைபேசி இலக்கங்களை தெரிந்து வைத்துக் கொள்ளுமாறும் மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளார்.

மேலும், அனர்த்த நிலைமைகளை கையாள்வதற்கு நாடளாவிய ரீதியில் அனர்த்த முகாமைத்துவக் கட்டமைப்புக்கள் மற்றும் முப்படையினரும் தயாராக இருக்கின்றனர் என்றும், இதுதொடர்பாக சம்மந்தப்பட்ட பிரதாணிகளுடன் கலந்துரையாடியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

வடக்கு கிழக்கு பிரதேசங்களில் அனர்த்த நிலைமைகள் ஏற்படும் பட்சத்தில் அரச கட்டமைப்பக்களுக்கும் பொது மக்களுக்குமான ஒருங்கிணைப்பு மேற்கொள்வதற்கு தேவையான ஒத்துழைப்புக்களை வழங்குமாறு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் பிரதேச அமைப்பாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் ஈ.பி.டி.பி கட்சியின் செயலாளர் நாயகம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேலும் தெரிவித்துள்ளார்.

வங்கக் கடலில் ஏற்பட்ட தாழமுக்கம் புரவிப் புயலாக மாற்றமடைந்துள்ளது. குறித்த புயல், திருகோணமலை மற்றும் முல்லைத்தீவு இடைப்பட்ட பிரதேசங்களுக்கு ஊடாக நாட்டை ஊடறுத்துச் செல்லும் என்றும் இன்று(02.12.2020) இரவு 7.00 மணி தொடக்கம் இரவு 10.00 மணி வரையான காலப் பகுதியில் நாட்டினுள் நுழையும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

இதன்காரணமாக வடக்கு கிழக்கு பிரதேசத்தில் தொடர்ச்சியான மழையுடன் கூடிய கடுமையான காற்று வீசி வருவதுடன் கடல் நீர் மட்டமும் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: