புத்தபெருமானின் சிலையை ஒரு ஆக்கிரமிப்பு அடையாளமாக சில இனவாதிகள் பாவிப்பது தடுக்கப்பட வேண்டும்.

Thursday, December 8th, 2016

இந்த நாட்டில் நீதி அமைச்சராக இருப்பவரே புத்த சாசன அமைச்சராகவும் இருப்பது வரவேற்கத்தக்க ஒரு விடயம் என்றே நான் கருதுகின்றேன். அந்த வகையில், நீண்ட காலமாகத் தீர்க்கப்படாதுள்ள ஒரு விடயம் தொடர்பில் முதலில் இங்கு அவதானத்திற்குக் கொண்டு வர விரும்புகின்றேன்.

1938ம் ஆண்டு சேனாநாயக்க சமுத்திரம் உருவாக்கப்பட்டதன் பின்னர் அப்போது கற்குகைகளில் வாழ்ந்திருந்த சுமார் 7 ஆதிவாசிகளின் குடும்பங்கள், அக் குடும்பங்களது காட்டு வாழ்க்கையை முடிவுறுத்தி அழைத்து வரப்பட்டு, பிபிலை பிரதேசத்தில் ரத்துகல பகுதியில் குடியமர்த்தப்பட்டு, தற்போது சுமார் 78 வருடங்கள் ஆகின்ற நிலையில், அக்குடும்பங்கள் 108 குடும்பங்களாகப் பெருகி இருக்கும் நிலையில், அக் குடும்பங்களுக்கு எவ்வித அரச உதவிகளும் கிடைக்கவில்லை எனக் கூறப்படுகின்றது.

இந்த நிலையில், ஒரு சந்தர்ப்பத்தில் மீண்டும் காட்டு வாழ்க்கைக்கே திரும்பிச் சென்று விடுவோமா? என்றுகூட நினைக்கும் அளவுக்கு அந்த மக்கள் இந்த வாழ்க்கையில் வெறுப்படைந்த நிலையே தோன்றியிருந்ததாகவும் தெரிய வந்தது.

எனவே, இந்த மக்களின் தேவைகளை உரிய அமைச்சுக்களுடன் இணைந்து பூர்த்தி செய்வதற்கு முன்வர வேண்டும் எனக் கௌரவ அமைச்சர் விஜயதாச ராஜபக்ச அவர்களிடம் கேட்டுக் கொள்கின்றேன்  என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் (08) வரவு – செலவுத் திட்டத்தின் புத்ததாசன அமைச்சு, தபால், தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய அலுவல்கள் அமைச்சுத் தொடர்பான குழு நிலை விவாதங்களில் கலந்து கொண்டு உரையாற்றுகையி லயெ அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்து  தெரிவிக்கையில் –

கடந்த காலங்களில் தென் பகுதிகளில் பல பௌத்த விஹாரைகள் பொருளாதாரமின்மை காரணமாக மூடப்பட்டு வந்த நிலைமையை நாம் ஊடகங்கள் வாயிலாக அறிய முடிந்தது. இவை சிறிய விஹாரைகளாக இருந்தும், அவற்றால் அந்தந்த பகுதிகள் – கிராமங்கள் மத, கலாசார, பண்பாட்டு விழுமியங்களால் கட்டியெழுப்பப்பட்டு வந்தன என்பது உண்மையே. எனவே, இந்த நிலைமைகள் தொடராமல், அந்தக் கட்டமைப்பினை உறுதிப்படுத்தவதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் எனக் கேட்டுக் கொள்வதோடு, இந்த நாட்டில் எந்தவொரு இடத்திலும் கௌதம புத்த பெருமானின் சிலைகளை வைப்பதற்கு அந்த மதத்தை வழிபடுவோருக்கு முழமையான உரிமை இருக்கின்றது என்பதை நாம் ஏற்றுக் கொள்கின்றோம். ஆனால், அந்த மதத்தை வழிபடும் மக்கள் இல்லாத பகுதிகளில் வேறு மத மக்கள் வாழும் நிலையில், அவர்களை அச்சுறுத்தும் வகையில் இந்தச் சிலைகளை வைப்பதே தற்போது ஒரு முரண்பாட்டு நிலையை எமது சமூகங்களிடையே ஏற்படுத்தி வருகின்றது என்பதையும், மதங்களுக்கிடையிலான சமத்துவங்கள் பேணப்பட வேண்டும் என்பதையும், இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

குறிப்பாகக் கூறப் போனால், இவ்வாறான சிலரது செயல்கள் காரணமாக கௌதம புத்த பெருமானின் சிலை என்பது ஓர் ஆக்கிரமிப்பின் அடையாளமா என ஒரு சாரார் நினைக்கும் அளவுக்கு மாறியிருப்பதால், கௌதம புத்த பெருமானின் மகிமை மதிக்கப்பட வேண்டிய நிலையில் அது, சில இனவாதிகளின் குறுகிய சுயலாபங்களுக்குப் பயன்படுத்தப்பட்டு, அவரது மகிமை புறக்கணிக்கப்படுகின்ற நிலையே காணப்படுகின்றது.

தேசிய நல்லிணக்கம் தொடர்பில் இந்த அரசு கொண்டுள்ள சிந்தனைகளை இவ்வாறான செயற்பாடுகள் சிதைப்பதாகவே இருக்கின்றன என்பதால், இவ்வாறான செயற்பாடுகள் தடுக்கப்பட வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டு, குறிப்பாக, கடந்த யுத்த காலத்தில்கூட நயினாதீவு விஹாரையையும், யாழ் நகரிலுள்ள நாக விஹாரையையும் பாதுகாத்து வந்துள்ளனர். குறுகிய சுயலாபங்களுக்காக சிலர் நாக விஹாரையை உடைத்த போதிலும் அது பின்னர் உரிய முறையில் கட்டியெழுப்பப்பட்டு, இன்றும் எமது மக்கள் அந்த விஹாரைகளுக்குரிய கௌரவத்தை வழங்கி, பேணி வருகின்றனர். இந்த நிலையே நாடெங்கிலும் பின்பற்றப்பட வேண்டும் என விரும்புகின்றேன்.

Untitled-3 copy

Related posts:


எமது மக்கள் கையேந்து நிலைக்கு காரணம் தவறான தமிழ் அரசியல் தலைமைகளே - டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டு
மக்களுக்கு பாதகம் ஏற்படும் செயற்றிட்டங்களை யார் முன்னெடுத்தாலும் அதற்கு நாம் ஒருபோதும் துணைபோக மாட்ட...
மக்களை அச்சுறுத்தும் கொறோனா வைரஸை கட்டுப்படுத்த யாழ்ப்பாணத்தில் உயர் மட்ட கூட்டம் – அமைச்சர் டக்ளஸ் ...