புதிய கைத்தொழில் நிறுவனங்களை ஈர்க்கக்கூடிய பொறிமுறைகள் உருவாக்கப்பட வேண்டும் – டக்ளஸ் தேவானந்தா!

Tuesday, February 21st, 2017

எமது நாட்டில் இன்று பரந்த நிலையில் காணப்படுகின்ற கறுவா போன்ற உற்பத்திகள் ஒன்றிணைக்கப்பட்ட ஒரு பொறிமுறைக்குள் கொண்டுவரப்பட வேண்டும். அது தொடர்பிலான நவீன தொழில்நுட்பங்கள் வழங்கப்பட்டு, இவ்வாறான துறைகள் மென்மேலும் ஊக்குவிக்கப்படல் வேண்டும் என்பதை இங்கு வலியுறுத்த விரும்புகின்றேன் என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்றையதினம் இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சட்டத்தின் மீதான கட்டளை செயல் நுணுக்க அபிவிருத்திக் கருத்திட்டங்கள் சட்டத்தின் கீழான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில் –

‘ஒபெக்’ அமைப்பிடம் எரிபொருள் தொடர்பான ஏகபோகம் இருப்பதைப் போல், சுமார் 2000 வருடங்களுக்கும் மேலாக எமது நாட்டிடமே கறுவாவுக்கான ஏகபோகம் இருந்து வருகிறது. எமது ஏற்றுமதிப் பொருட்களிலேயே இது ஒன்றுதான் எமது ஏகபோகமாக இருக்கிறது. என்றாலும், இது பெறுமதி சேர்க்கப்பட்ட தயாரிப்பு என்ற வகையில் சர்வதேச சந்தையில் நிலையானதொரு இடத்தை இன்னும் பெற்றுக் கொள்ளவில்லை என்றே தெரிய வருகிறது.

எமது நாட்டில் இன்று பரந்த நிலையில் காணப்படுகின்ற கறுவா போன்ற உற்பத்திகள் ஒன்றிணைக்கப்பட்ட ஒரு பொறிமுறைக்குள் கொண்டுவரப்பட வேண்டும். அது தொடர்பிலான நவீன தொழில்நுட்பங்கள் வழங்கப்பட்டு, இவ்வாறான துறைகள் மென்மேலும் ஊக்குவிக்கப்படல் வேண்டும் என்பதை இங்கு வலியுறுத்த விரும்புகின்றேன்.

ஏற்றுமதிப் பொருட்களுக்கான உற்பத்திகளை பல்வகைத் தன்மைகளுக்கேற்ப அதிகரிக்க வேண்டிய நிலையிலும், இறக்குமதியைவிட  ஏற்றுமதி தொடர்பிலேயே அதிக அக்கறை கொள்ள வேண்டிய நிலையிலும் நாம் இருக்கின்றோம். அதே நேரம், எமது உற்பத்திகள் சந்தைக்கு வருகின்ற சந்தர்ப்பங்களில் அப் பொருட்களுக்கான இறக்குமதியினைக் கட்டுப்படுத்த வேண்டிய தேவையும் இருக்கிறது.

இவ்வாறான சந்தர்ப்பங்களில் இறக்குமதிக்கான வரிகளை அதிகரிப்பதன் மூலமாக எமது உற்பத்திகளுக்கான உள்ளூர் சந்தை வாய்ப்பினை அதிகரிக்கலாம் என எண்ணுகின்ற நிலையில், உள்ளூர் உற்பத்திகளின் தரம் சிறந்த நிலையில் இருக்க வேண்டியதும் அவசியமாகிறது. எனவே, இவ்வாறான அடிப்படைகள் குறித்தும் நாம் அதிக அக்கறை செலுத்த வேண்டியுள்ளது என்பதை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

வெளிப்படைத் தன்மையுடன் கூடிய சாதகமான சூழல்களை உற்பத்தி நிறுவனங்கள் தொடர்பில் ஏற்படுத்தப்பட்டு, அவை செயற்படுத்தப்பட வேண்டும் என்றும்,

புதிய கைத்தொழில் நிறுவனங்களை ஈர்க்கக்கூடிய வகையிலான சாத்தியப்பாடுகள், மற்றும் அதற்கான தடைகள் குறித்து ஆழமான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும், இதற்கான பொறிமுறைகள் உருவாக்கப்படல் வேண்டும் என்றும்,

நேரடி சந்தைப்படுத்தல்கள் தொடர்பிலும், வாய்ப்புகளுக்கான முதலீட்டாளர்களுடனும் கலந்துரையாடல்களை மேற்கொள்ள வேண்டும் என்றும், அதிகளவில் பல்வகைப் பொருட்கள் தொடர்பிலான முதலீடுகளுக்கு ஊக்கம் அளிக்கப்பட வேண்டும் என்றும்,

உள்ளூர் வளங்களைக் கொண்ட பெறுமதி சேர் உற்பத்திகள் தொடர்பில் அதிக பட்சமான அக்கறை செலுத்தப்பட்டு, அவை ஊக்குவிக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

cabinet656565 copy

Related posts:

யாழ்.போதனா வைத்தியசாலை நிலைவரங்கள் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் கரிசனை - சுகாதார அமைச்சரிடமும் வலியுறுத...
எமது மக்கள் இழந்த உயிர்களைத் தவிர அனைத்தும் மீளப் பெற்றுத் தரப்படும் - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெர...
இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் சந்திப்பு - ஜப்பான் அரசினால் கடற்றொழில் துறைய...

டக்ளஸ் தேவானந்தா அவர்களின் கோரிக்கைக்கமைவாக கிட்டங்கிப் பாலத்தை அமைப்பதற்கு இடைக்காலத் திட்டம் தயார்...
அனைத்து கட்சிகளை நோக்கியும் எமது மக்களுக்கான நேசக்கரத்தை நாம் நீட்டி நிற்கிறோம் - டக்ளஸ் எம்.பி தெரி...
கிளிநொச்சி அறிவியல் நகரில் யாழ் பல்கலைக்கழகம் உருவாகுவதற்கு அமைச்சர் டக்ளஸின் தொடர்ச்சியான முயற்சியே...