புதிய ஆண்டில் நீர் வேளாண்மை தொடர்பில் அதிகளவிலான செயற் திட்டங்கள் – அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Wednesday, November 17th, 2021

மூவாயிரம் மில்லியன் ரூபா கடற்றொழிலுக்கென வரவு – செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், இதன் மூலம் அடுத்த வருடத்தில் இரண்டு இலட்சம் ஹெக்டயர் நீர் நிலைகளில் நன்னீர் வேளாண்மைக்கான வசதிகளை மேற்கொள்வதற்கும், இதற்கென 196 மி;ல்லியன் மீனின குஞ்சுகள் வைப்பிலிடப்பட்டு, அதன் மூலம் சமார் 18 ஆயிரம் மில்லியன் பெறுமதியான 125 ஆயிரம் மெற்றிக் தொன் அறுவடையினை எதிர்பார்ப்பு கொள்ளப்படுகின்றது. அதேநேரம், மூல வளங்களின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்கிக் கொள்வதற்கான வாய்ப்புகள் அதிகம் என்பதால் நிறையவே பலன்களை நாம் எதிர்பார்க்க முடியுமென அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

2022 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் தொடர்பிலான எனது கருத்துக்களை நாடாளுமன்றில் தெரிவித்து உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது அவர் மேலும் கூறுகையில் –

மேலும், வடக்கு மாகாணத்திற்கான நிலைபேறான கடற்றொழில் அபிவிருத்தித் திட்டம், கடற்றொழில் துறைமுக அபிவிருத்திகள். நீர்வள ஊக்கம் (தியவர திரிய) கடன் திட்டத்திற்கான நிதிப் பங்களிப்பு, பலநாட் களங்களுக்கான வழித்தட கண்காணிப்புக் கருவிகள், கடற்றொழில் மற்றும் நன்னீர் வேளாண்மைகளில் ஈடுபடுகின்ற மக்களின் வாழ்வியலை மேம்படுத்தல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் நிதி ஒதுக்கீடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மேலும,; மேலதிகமாக 1000 மில்லியன் ரூபாவை ஒதுக்குவதற்கும் முன்மொழியப்பட்டுள்ளதால், அடுத்த வருடத்தில் நீர் வேளாண்மை தொடர்பில் மிக அதிகளவிலான செயற் திட்டங்களை நாம் நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளக் கூடியதாக இருக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை அண்மையில் கிழக்கு மாகாணத்திற்கான எனது விஜயத்தின்போது, பல்வேறு கடற்கரையோர பகுதிகள் கடலரிப்புக்கு உட்படுவதை அவதானிக்கக் கூடியதாக இருந்தது.

அப் பகுதிகளில் மட்டுமல்லாது கடலரிப்பானது நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் விரைவானதொரு மட்டத்தில் ஏற்பட்டு வருவதையும் அவதானிக்கக் கூடியதாகவே இருக்கின்றது.

இத்தகைய கடலரிப்பிலிருந்து அப்பகுதிகளைப் பாதுகாப்பதற்கென நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சுக்கென நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: