புதிய அரசியலமைப்பில் சிறுபான்மை இனங்களின் பாதுகாப்பும், உரிமைகளும் உறுதிப்படுத்தப்பட வேண்டும் – ஊடகவியலாளர்களிடம் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு

Wednesday, January 18th, 2017

புதிய அரசியலமைப்பு அல்லது அரசியலமைப்பு சீர் திருத்தம் தொடர்பான வரைபில் சிறிய மற்றும் சிறுபான்மை கட்சிகளின் சார்பில் பொதுவான தீர்மானமொன்றை ஏற்படுத்தும் முயற்சியில் நாங்கள் இறுதிக்கட்டத்திற்கு வந்திருப்பது மகிழ்ச்சியளிக்கின்றது என்று செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்தார்.

சிறிய மற்றும் சிறுபான்மை கட்சிகளின் தலைவர்கள் மற்றும் கட்சிகளின் முக்கியஸ்த்தர்கள் கலந்து கொண்ட கூட்டம் கொழும்பில் அமைந்துள்ள சிறி லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைமையகமான தாருஸலாமில் நடைபெற்றது. அக் கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போது செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா  மேலும் கருத்துத் தெரிவிக்கையில் –
இன்று ( 18.01.2017) சிறிய மற்றும் சிறுபான்மைக் கட்சிகள் என்றவகையில் நாங்கள், புதிய அரசியலமைப்பு அல்லது அரசியலமைப்பு சீர் திருத்தத்தில், சிறுபான்மை இனங்களின் உரிமைகள், அதிகாரங்கள், நிர்வாக வடிவங்கள், மொழி, சமயம் போன்ற விடங்களையிட்டு மிகுந்த கரிசனையோடு ஆராய்ந்திருக்கின்றோம்.

all dd 1
இன்றைய சந்திப்பில் எமது பொதுத் தீர்மானத்தை பெருமளவில் இறுதி செய்திருக்கின்றோம். விரைவில் எமது வரைபை பிரதமர் தலைமையிலான வழி நடத்தல் குழுவில் சமர்ப்பிப்போம். ஈ.பி.டி.பியைப் பொறுத்தவரை குறிப்பாக மத்திக்கும், மாநிலத்திற்குமிடையிலான மேல் சபையில் சிறுபான்மையினருக்கு 50 வீத பிரதிநிதித்துவம் உறுதிப்படுத்தப்பட வேண்டும். ஏன் என்றால் மேல் சபை ஒன்றுக்கான அவசியமானது, சிறுபான்மை இனங்களுக்கு ஏற்புடையதற்ற விடயங்களிலிருந்து எம்மைப் பாதுகாக்கும் என்பதுதான் என்று கூறிய செயலாளர் நாயகம் அவர்கள், இலங்கை மதச்சார்பற்ற நாடாக இருக்க வேண்டும் என்பதும், சிங்களமும், தமிழும் ஆட்சி மொழிகள் என்பது தெளிவாக குறிப்பிடப்பட வேண்டும் என்பதும், ஜனாதிபதி மக்களால் தெரிவு செய்யப்படுகின்ற முறைமையானது சிறுபான்மை மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்பதும் எமது நிலைப்பாடாக இருக்கின்றது.

all dd
அதேவேளை, உள்ளுராட்சி சபைகளுக்கான எல்லை நிர்ணய வரைபு அமைச்சர் பைசர் முஸ்தபா அவர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது. அதில் 54 விடயங்களை திருத்த வேண்டுமென தேர்தல் ஆணையாளர் குறிப்பிட்டிருக்கின்றார். இந்த நிலையில் அந்த எல்லை நிர்ணய வரைபை சட்டமாக்குவதற்கு முன்னர் அதில் சுட்டிக்காட்டப்படும் தவறுகளையும், குறைபாடுகளையும் ஆராய்ந்து, எந்த இனத்தைச் சார்ந்தவர்களும் பாதிக்கப்படாத வகையில் பொது இணக்கத்தின் அடிப்படையில் இறுதி வடிவம் கொடுக்கப்பட்டு சட்டமாக்கப்பட வேண்டும் என்றும் செயலாளர் நாயகம் தெரிவித்தார்.

Related posts:

வடக்கிற்கும் கிழக்கிற்கும் வறுமையே முகவரி – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. சுட்டிக்காட்டு!
கடற்றொழில் செயற்பாடுகளின் வினைத்திறனை அதிகரிக்க புதிய கட்டிடம் : அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் திற...
புரவி புயலால் பாதிக்கப்பட்ட கடற்றொழிலாளர்களின் விபரங்கள் ஒரு வாரத்திற்குள் சமர்ப்பிக்கப்பட வேண்டும் ...