புகையிலைச் செய்கைக்கு தடை என்றால் அதற்கீடான மாற்றுப் பயிர்ச் செய்கை என்ன? – நாடா ளுமன்றத்தில் டக்ளஸ் தேவானந்தா கேள்வி!

Tuesday, July 4th, 2017
புகையிலைச் செய்கை தடை செய்யப்படுகின்ற நிலையில், புகையிலைச் செய்கையில் தற்போது ஈடுபட்டு வருகின்ற மக்களுக்கு மாற்றுப் பயிர்ச் செய்கைகள் என்ற வகையில் என்னென்ன பயிர்ச் செய்கைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன? இல்லையேல் அறிமுகப்படுத்தப்படவுள்ளன? என்று நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள், இன்றைய தினம் நாடாளுமன்றத்தில் விவசாய அமைச்சரிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.
இவ்விடயம் தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள அவர், யாழ்ப்பாணத்தில் சுமார் 400 ஆண்டு காலத்திற்கும் அதிகமான காலமாக தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்ற புகையிலைச் செய்கையானது, அச் செய்கையில் ஈடுபடுகின்ற மக்களுக்கு ஒரு பணப் பயிர் என்ற வகையில் பொருளாதார ரீதியில் பாரியளவிலான நலன்களை ஈட்டிக் கொடுத்து வந்தாலும், 2020ஆம் ஆண்டுக்குள் புகையிலைச் செய்கை முற்றாகத் தடை செய்யப்படும் என உலக சுகாதார ஒன்றியத்திடம் இலங்கை உறுதியளித்துள்ள நிலையில், மேற்படி புகையிலைச் செய்கையை தங்களது வாழ்வாதாரமாகக் கொண்டு, அதில் நேரடியாகவும், மறைமுகமாகவும் பயன் பெறுகின்ற மக்களுக்கு மாற்று பயிர்ச் செய்கைகளை அறிமுகப்படுத்தி, அதனை ஊக்குவிக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.
வடக்கில் அனைத்து மாவட்டங்களிலும், கிழக்கில் மட்டக்களப்பு மாவட்டத்திலும் புகையிலைச் செய்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தாலும், யாழ்ப்பாணத்திலேயே அதிகளவில் இப்பயிர்ச் செய்கை மேற்கொள்ளப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில், இம்முறை யாழ்ப்பாணத்தில் 741.615 ஹெக்ரேயர் நிலப்பரப்பில் 1,956 விவசாயிகள் மேற்படி புகையிலைச் செய்கையில் ஈடுபட்டுள்ளனர் எனத் தெரிய வருகின்றது. அதாவது, யாழ்ப்பாணம் மாவட்டத்தில் சுமார் 27,952 குடும்பங்கள் விவசாயத்தில் ஈடுபட்டு வருகின்ற நிலையில், சுமார் 3,035 குடும்பங்கள் மேற்படி புகையிலைச் செய்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இது மொத்த விவசாய செய்கையாளர்களில் நூற்றுக்கு 10.87 வீதமாகும் என்பது குறிப்பிடத்தக்கது. இதனைவிட இப் பயிர்ச்செய்கையில் தங்கியிருப்போரது எண்ணிக்கையும் பாரியதாகவுள்ளது.
தற்போது, யாழ்ப்பாணத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற மிளகாய் மற்றும் வெங்காய செய்கைகள் ஒப்பீட்டளவில் புகையிலைச் செய்கைக்கு அடுத்தபடியாக பொருளாதார ரீதியில் சாதகமான நிலையினைத் தருவதாக கூறப்படுகின்ற நிலையில்,
தற்போது புகையிலைச் செய்கையில் ஈடுபட்டு வருகின்ற விவசாயிகளுக்கான மாற்றுப் பயிர்ச் செய்கை என்ற வகையில், வெங்காயம் மற்றும் மிளகாய் பயிர்ச் செய்கைகளில் ஈடுபடுவதற்காக மானியங்கள், ஊக்குவிப்புக்கள் மற்றும் ஏனைய வசதிகள் செய்து கொடுக்கப்படுமா? என்றும், இதே போன்று நவீன கேள்விச் சந்தைக்கு ஏற்ற வகையிலான ஏனைய பயிர்ச் செய்கைகளை அறிமுகஞ் செய்கின்ற ஏற்பாடுகள் இருப்பின், அவற்றில் ஈடுபடுகின்ற விவசாய மக்களுக்கு மானியங்கள் வழங்கப்படுமா? என்றும், வழங்கப்படுமாயின் என்ன வகையிலான மானியங்கள் வழங்கப்படும்? என்றும், தற்போது யாழ் குடாநாட்டில் மேற்கொள்ளப்படுகின்ற உருளைக் கிழங்கு, வெங்காயம், மிளகாய் போன்ற பயிர்ச் செய்கைகளின் அறுவடைகளை சந்தைப்படுத்துவதில் தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில் இருக்கக்கூடிய தடைகளை அகற்றுவதற்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் என்ன? என்றும் கேள்விகளை எழுப்பியுள்ள டக்ளஸ் தேவானந்தா அவர்கள், குறிப்பாக, எமது உற்பத்திகள் சந்தைக்கு வரும்காலத்தில் அதே பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்டு, குறைந்த விலைகளில் விற்கப்படுவதால், எமது விவசாய உற்பத்தியாளர்கள் பெரும் பாதிப்புக்கு முகங்கொடுக்கின்ற நிலை தொடர்கின்றது.
எனவே, இறக்குமதி வரிகளை அதிகரிப்பதோடு மட்டும் நின்று விடாமல், அப் பொருட்களின் இறக்குமதியை மட்டுப்படுத்துவதற்கு அல்லது அக்காலங்களில் இறக்குமதியை நிறுத்துவதற்கு உரிய தரப்புகளுடன் இணைந்து நடவடிக்கை எடுக்க முடியாதா? எனவும் வினவியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

வவுனியா சண்முகபுரம் கிராமத்தின் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்பட வேண்டும் - டக்ளஸ் தேவானந்தா வலியுறு...
இரணைதீவு  மக்களை சொந்த இடத்தில் மீளக்குடியேற்ற வேண்டும் - ஜனாதிபதிக்கு டக்ளஸ் எம்.பி. கடிதம்!
ஈ.பி.டி.பி. இணைந்துள்ள ஆட்சியில் தமிழர்களுக்கு இன்னல்கள் ஏற்படாது: திருமலை மக்கள் முன்னிலையில் அமைச்...