புகையிரத சேவையில் பாரிய சுகாதாரச் சீர்கேடுகள்: தமிழ் மொழியும் புறக்கணிப்பு – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. எடுத்துரைப்பு!

Monday, March 25th, 2019

வடக்கிலுள்ள இரயில் நிலையங்கள் பலவும் மிகுந்த அசுத்த நிலையில் காணப்படுகின்றன. போதியளவு துப்புரவுத் தொழிலாளர்கள் இன்மையே இதற்கக் காரணமெனக் கூறப்படுகின்றது. எனவே, இதற்கான ஆளணிகளை வடக்கு பகுதியிலிருந்தே நியமிப்பதற்கு அமைச்சர் அவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இடம்பெற்ற போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு, துறைமுகங்கள், கப்பற்துறை மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சு ஆகிய அமைச்சுகள் தொடர்பிலான குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –

அதேநேரம், இந்த நாட்டின் இரயில் பாதைகளை எடுத்துக் கொண்டால், பெரும்பாலானவை தமிழ் பேசும் மக்கள் வாழ்கின்ற பகுதிகளை ஊடறுத்தே செல்கின்றன. குறிப்பாக, கொழும்பு, கோட்டை இரயில் நிலையத்தை பிரதானமாக எடுத்துக் கொண்டால், வடக்கு நோக்கி காங்கேசன்துறை வரை செல்கின்ற பாதை, பதுளை, மாத்தளை, திருகோணமலை, மட்டக்களப்பு, புத்தளம், அவிசாவளை, தலைமன்னார் வரை செல்கின்ற பாதைகள் அனைத்துமே தமிழ் பேசும் மக்கள் வாழுகின்ற பகுதிகளின் ஊடாகவே செல்கின்றன.

அந்தவகையில், இரயில் பயணங்களை அதிகமாகப் பயன்படுத்துகின்ற மக்களாகவும் தமிழ் பேசுகின்ற மக்கள் இருக்கின்றனர். எனவே, இந்த மக்களுக்குப் புரிகின்ற மொழியில் அறிவிப்புகளை மேற்கொள்ள வேண்டியது புகையிரதத் திணைக்களத்தின் பொறுப்பாகும்.

அதேநேரம்,  செல்ல வேண்டிய நேரம்,  செல்ல வேண்டிய இரயில், அது புறப்படுகின்ற நேரம், தாமதங்கள் ஏற்படுமா என்ற தகவல், சென்றடையக் கூடிய எதிர்பார்க்கப்படுகின்ற நேரம்,  தரித்து நிற்கக்கூடிய இரயில் நிலையங்கள், அவசரமான பொது அறிவிப்புகள் போன்ற அனைத்து தகவல்களையும் தங்களுக்குப் புரிகின்ற மொழியினில் அறிந்து கொள்வதற்கான உரிமை இந்த நாட்டில் அனைத்துப் பயணிகளுக்கும் உண்டு.

இந்த நாட்டைப் பொறுத்தவரையில் சுமார் 410 இரயில் நிலையங்கள் உள்ளதாகவும், இவற்றில் 177 இரயில் நிலையங்கள் பிரதான நிலையங்களாகும் என்றும், 162  உப இரயில் நிலையங்களும், 71 சாதாரண தரிப்பிடங்களுமாக இருக்கின்றன என்றும் தெரிய வருகின்றது.

இந்த இரயில் நிலையங்களில் தமிழ் மொழி மூலமான அறிவிப்புகள் எத்தனை இரயில் நிலையங்களில் வழங்கப்படுகின்றன? என்ற கேள்வி எழுகின்றது. குறிப்பாக, தமிழ் பேசும் மக்கள் வாழ்கின்ற பகுதிகளின் ஊடாகச் செல்கின்ற பாதைகளில்  முக்கிய சந்திகளில் அமையப்பெற்றுள்ள,  ராகம இரயில் நிலையம், பொல்ககவெல, மாகோ, மதவாச்சி, பேராதனை இரயில் நிலையங்களில்கூட தமிழ் மொழி மூலமான அறிவிப்புகள் இல்லை என்றே கூறப்படுகின்றது.

இந்த நாட்டில் ஏனைய பல்வேறு துறைகளைப் போல், பொதுப் போக்குவரத்துச் சேவையிலும் இத்தகைய மொழிப் புறக்கணிப்புகள் இடம்பெறுகின்ற நாட்டிலேயே தேசிய நல்லிணக்கம் – பொறுப்பு கூறல் என்றெல்லாம் கதைக்கப்படுவது வேடிக்கையானதாகவே இருக்கின்றது.

எனவே, இந்த விடயங்கள் தொடர்பில் கௌரவ அமைச்சர் அவர்கள் உரிய அவதானங்களைச் செலுத்த வேண்டும் எனக் கேட்டுக் கொண்டு, பலாலி விமான நிலையத்தின் ஊடாக ஐரோப்பா வரையில் விமானச் சேவை நடத்தப்படவுள்ளதாக அண்மையில் ஊடகங்களில் தகவல்கள் வெளிவந்திருந்தன. அது எந்தளவிற்கு தற்போது சாத்தியமான நிலையில் இருக்கின்றது? என்பது பற்றியும், பலாலியிலிருந்து இந்தியாவிற்கான விமான சேவையினை ஏற்படுத்துவது தொடர்பான விடயம் குறித்த இன்றைய நிலைமைகள் பற்றியும் தெளிவுபடுத்த வேண்டும் எனக் கேட்டுக் கொண்டு, 

துறைமுகங்கள் விமானப் போக்குவரத்து அமைச்சு தொடர்பில் கூறுகின்றபோது, குறிப்பாக காங்கேசன்துறையிலிருந்து இந்தியாவிற்கான கப்பல் போக்குவரத்து சேவையினை ஆரம்பிக்க வேண்டும் எனும் கோரிக்கையை நான் தொடர்ந்தும் முன்வைத்து வருகின்றேன். இது தொடர்பில் அண்மையில் அரச தரப்பு அவதானம் செலுத்தி வருவதாகவும் செய்திகள் வெளிவந்திருந்தன. அது குறித்த தெளிவுகளை கௌரவ அமைச்சர் சாகல ரத்னாயக்க அவர்கள் வழங்குவார் என்ற எதிர்பார்க்கின்றேன்.

Related posts:

உயிருக்கு அச்சுறுத்தல் இருந்தபோதும் மக்களோடு வாழ்ந்தவர்கள் நாம் - நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. சுட்ட...
கடற்றொழிலாளர்களுக்கு 55 அடி நீளமான படகுகளை 50 வீத மானிய விலையில் வழங்கப்படுவது தொடர்பில் குழப்ப நில...
புலிகளின் உறுப்பினர்களும் எமது குழந்தைகள் என்பதை மறக்க முடியாது - திருமலையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந...