பிலக்குடியிருப்பு மக்களின் தேவைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டும்- டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்து!

Tuesday, April 4th, 2017

முல்லைதீவு, கேப்பாப்புலவு, பிலக்குடியிருப்பு மக்கள் தங்களது சொந்த காணி, நிலங்களைக் கோரி, அகிம்சைப் போராட்டத்தில் ஈடுபட்டதையடுத்து, கடந்த மாதம் 01ஆம் திகதி பிலக்குடியிருப்புப் பகுதி அம் மக்களது மீள்குடியேற்றத்திற்கு விடுவிக்கப்பட்டு, தற்போது அங்கு சுமார் 54 குடும்பங்கள் வாழ்ந்து வருகின்ற நிலையில், அம் மக்களுக்கு எவ்விதமான அடிப்படை வசதிகளும் மேற்கொள்ளப்படவில்லை என்று அம் மக்கள் தெரிவிக்கின்றனர். எனவே, மேற்படி மீள்குடியேறிய பிலக்குடியிருப்பு மக்களுக்கான வீடமைப்புத் திட்டங்கள், போதிய குடிநீர், மலசலகூடங்கள், பாதைகள் புனரமைப்பு போன்ற அடிப்படை, அத்தியாவசிய தேவைகளை விரைவாகப் பூர்த்தி செய்து கொடுப்பதற்கும், மீள்குடியேற்ற மக்களுக்கு வழங்கப்படும் உரிய நிவாரணங்களை இம் மக்களுக்கும் பெற்றுக் கொடுப்பதற்கும், மேலும், அரச சார்பற்ற நிறுவனங்களினது உதவிகள் எதையேனும் பெற்று இம் மக்களது அத்தியாவசியத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும், இப்பகுதியில் இன்னும் அகற்றப்படாதிருக்கின்ற வெடிபொருட்களை அகற்றுவதற்கும் நடவடிக்கை எடுக்கமாறு நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் அமைச்சர் சுவமிநாதன் அவர்களிடம் இன்றைய தினம் (04.04.2017.) நாடாளுமன்றத்தில் வலியுறுத்தியுள்ளார்.

இவ்விடயம் குறித்து மேலும் தெரிவித்துள்ள டக்ளஸ் தேவானந்தா அவர்கள், ஏற்கனவே கேப்பாப்புலவு மாதிரிக் கிராமம் அமைக்கப்பட்டு, தற்காலிக ஏற்பாடாக இம் மக்கள் குடியேற்றப்பட்டதிலிருந்து குறிப்பிட்ட காலம் வரையில் உலருணவு நிவாரணம் தவிர்ந்த வேறு எதுவித நிவாரணங்களும் இதுவரையில் தங்களுக்கு வழங்கப்படவில்லை என்று தெரிவிக்கும் இம் மக்கள், பிலக்குடியிருப்பில் இன்று அடிப்படை வசதிகள் உட்பட வசிப்பதற்கு ஏற்ற இருப்பிடங்களும் இன்றி பாரிய பாதிப்புகளுக்கு முகங்கொடுத்து வருவதாகத் தெரிவிக்கின்றனர். குறிப்பாக, குடிநீர், மலசல கூடங்கள், இருப்பிட வசதிகள், பாதைகள் போன்ற வசதியீனங்களுக்கு மத்தியிலேயே இம் மக்கள் வாழ்ந்து வருவதாகக் குறிப்பிடப்படுகின்றது.

2012ஆம் ஆண்டு கேப்பாப்புலவு மாதிரிக் கிராமம் அமைக்கப்பட்டு அங்கு இம்மக்கள் தற்காலிக ஏற்பாடாக குடியேற்றப்பட்டபோது, இம் மக்களது சொந்த காணி, நிலங்கள் விடுவிக்கப்படும்வரை இங்கு வசிக்கும்படியும், சொந்த காணி, நிலங்கள் விடுவிக்கப்பட்டால் அந்த காணி, நிலங்களும், கேப்பாப்புலவு மாதிரிக் கிராம வீடுகள் உட்பட்ட காணிகளும் அம் மக்களுக்கே வழங்கப்படுமென்றே இம் மக்களுக்கு வாய்மூல வாக்குறுதிகள் அப்போதைய ஆட்சியின்போது வழங்கப்பட்டிருந்தது. இவ்வாறே, முள்ளிவாய்க்கால் கிழக்கு மற்றும் மேற்கு பகுதியைச் சேர்ந்த சுமார் 1200 குடும்பங்கள் 2012ம் ஆண்டு முற்பகுதியில் திம்பிலி பகுதியில் குடியேற்றப்பட்டு, இதே வாக்குறுதி வழங்கப்பட்டு, 2012ம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்குப் பின்னர் அவர்களது சொந்த காணி, நிலங்கள் விடுவிக்கப்பட்டபோது, அளிக்கப்பட்ட வாக்குறுதியின் பிரகாரம் அவர்களது சொந்த காணி, நிலங்களும், திம்பிலி பகுதி வீடுகள் உள்ளிட்ட காணிகளும் அம் மக்களுக்கு வழங்கப்பட்டன என்பதை கௌரவ அமைச்சர் அவர்களது அவதானத்திற்குக் கொண்டுவர விரும்புகின்றேன் எனத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:


அத்தியாவசிய பொருட்களின் விலைகள் கட்டுப்பாடுகள் இன்றி அதிகரிப்பது வருந்தத் தக்கது - டக்ளஸ் தேவானந்தா ...
யாழ் மாவட்ட பனை தென்னை வள அபிவிருத்தி கூட்டறவு சங்க பிரதிநிதிகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுடன...
தெளிவான கொள்கையும் கூர்மையான பார்வையும் ஈ.பி.டி.பி. யிடம் இருக்கிறது: சரவணையில் அமைச்சர் டக்ளஸ் தேவ...