பிறக்கும் புத்தாண்டில் மாற்றத்தை விரும்பும் எம் மக்களுக்கு புது நிமிர்வை கொடுப்போம் – புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் டக்ளஸ் தேவானந்தா

Monday, January 1st, 2018

பிறக்கும் புத்தாண்டில் மாற்றத்தை விரும்பும் எம் மக்களுக்கு புது நிமிர்வை கொடுப்போம் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தனது புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவித்ததாவது –

பிறந்துவரும் ஒவ்வொரு புத்தாண்டுகளையும் எமது மக்கள் மாற்றம் ஒன்றை தரும் என்ற நம்பிக்கையோடு மட்டுமே கொண்டாடி மகிழ்ந்து வருகிறார்கள்.

ஆனாலும்…மாற்றங்களை தரும் என்ற நம்பிக்கைகளுக்கு மாறாக கடந்து போன புத்தாண்டுகள் பலவும் எமது மக்களுக்கு வெறும் ஏமாற்றங்களை மட்டுமே  தந்துவிட்டு போயிருக்கின்றன.

இதுவே இன்று எமது தமிழ் தேசிய இனத்தின் ஆழ்மன துயரம்!

பாமர மக்களில் இருந்து படித்த மக்கள் வரை,. வறிய மக்களில் இருந்து வசதி படைத்த மக்கள் வரை,

உள்ளூர் கிராமங்களில் இருந்து  நகரங்கள் வரை…

உழைக்கும் மக்களில் இருந்து

இளைஞர் யுவதிகள் வரை…

சகல மக்களின் மனங்கள் தோறும்

புத்தாண்டின் புது மகிழ்ச்சி

பூத்துக்குலுங்க வேண்டும் என்பதே

எமது விருப்பமாகும்!…

நாம் உரிமைக்காக போராடிய ஒரு தேசிய இனம். இறுதி இலக்கை இதுவரை நாம் எட்ட முடியாமல் போனாலும் எமது மக்கள்

தோற்றுப்போன ஒரு இனமல்ல.மக்களாகிய உங்களது துயரங்களும் ஏமாற்றங்களுமே  எமது நெஞ்சில் தீராத இலட்சிய உறுதியை மேலும் வளர்த்து வருகின்றது.

எமது மக்களின் இலட்சியக்கனவுகள் யாவும் நிச்சயம் வெல்லும்.உங்களின் அன்றாட பிரச்சினைக்கு உடனடி தீர்வு வேண்டும்!

உங்கள் வரலாற்று வாழ்விடங்கள் அபிருத்தியில் நிமிரவேண்டும்!!உங்கள் நிரந்தர மகிழ்ச்சிக்கு அரசியலுரிமை சுதந்திரம் வேண்டும்!!

இவைகளே எங்களது இலட்சியக்கனவுகள்! இவைகளை நாம் வென்றெடுப்பதே உங்களின் புத்தாண்டு மகிழ்ச்சியாகும்.

உரிமைக்காக போராட எழுந்த நீங்கள் இன்று அடுத்தவனிடம் கையேந்தி வீதியில் நிற்கிறீர்கள்.

நிலமிழந்த மக்கள் இன்று வீதிகளில்;.. காணாமல் போன உறவுகளைதேடும் மக்கள் இன்று வீதகளில்;… வேலையற்ற பட்டதாரிகள் இன்று வீதிகளில்…அரசியல் கைதிகளை விடுவிக்க கோரும் மக்கள் இன்று வீதிகளில்….

இவ்வாறு இன்று வீதிகளில் நிற்கும் நீங்கள் உங்கள் கோரிக்கைகளை வென்று உங்கள் இல்லங்கள் தோறும் உங்கள் உறவுகளுடன் சேர்ந்து மகிழ்ந்து வாழ்வதே  உங்களின் புத்தாண்டு மகிழ்ச்சி!..

பிறந்து வரும் இப்புத்தாண்டில் நீங்களாகவே உங்கள் வாழ்வில் மாற்றங்களை உருவாக்கும் அரிய வாய்ப்பொன்றும் உங்களை தேடி வந்திருக்கிறது.

அதை நீங்கள் சரிவரப் பயன்படுத்துவீர்கள் என்று உறுதியான நம்பிக்கை எமக்கு பிறந்திருக்கிறது.

உங்கள் கிராமங்கள். உங்கள் பிரதேசங்கள்.. உங்கள் நகரங்கள்.. உங்கள் நிலங்கள்.. உங்கள் வீதிகள் உங்கள் சனசமூக நியையங்கள்  இவைகள் யாவும் உங்களுக்கே சொந்தம்..

இவைகளை வளப்படுத்த நீங்களே விழிப்படைந்து முன்வருவதே  உங்களது புத்தாண்டு மகிழ்ச்சி!

இது உங்கள் வயல் நிலம்.. உங்கள் கடல் வளம்.. உங்கள் பனை வளம். உங்கள் தொழில் நிலம்…இவைகளை பாதுகாத்து உங்கள் பூமியை வளம் கொழிக்கும் பூமியாக மாற்றிட. நீங்களாக எழுந்து வருவதே உங்கள் புத்தாண்டின் மகிழ்ச்சி.

தொடர்ந்தும் மாய மான்களை பின் தொடர்ந்து ஓடுவதால் உங்கள் வாழ்வில் நிரந்தர மகிழ்ச்சி ஒருபோதும் உருவாகப் போவதில்லை.

இதுவே இதுவரைகால உங்களது அனுபவங்கள்!. இந்த அனுபவங்களை சிறந்த பாடமாக கற்றுகொண்டு.. மாற்றங்களை உருவாக்க மக்களாகிய நீங்களே எழுந்து வர வேண்டும்.

ஆற்றலும்,. ஆளுமையும் .மக்கள் மீதான அக்கறையும்உள்ளவர்களின் கரங்களில் அரசியல் அதிகாரங்கள் இருக்கவேண்டும்.

அதுவே மக்களாகிய உங்களது வாழ்வில் மாற்றங்களை உருவாக்கும். உங்கள் வாழ்வில் நிரந்த மகிழ்ச்சியை உருவாக்கும். உங்கள் விருப்பங்களையும் கனவுகளையும் சுமந்து நிற்கும் இலட்சிய தேரை.. உங்கள் இலக்கு நோக்கி நாம் இழுத்து வருகிறோம்.

அதன் வடம் பிடித்து இழுக்க நீங்களும் எழுந்து வரவேண்டும்!

சாதித்த எம் கரங்களை பலப்படுத்துங்கள்! அதுவே சரித்திரம் படைக்கும் நாளை.

இனி பிறந்து வரும் ஒவ்வொரு புத்தாண்டுகளும் உங்கள் வாழ்வில் நிரந்தர ஒளி அள்ளி வீசும்.

அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்!

நன்றி!

Related posts: