பிரித்தானியர்கள் நாட்டைவிட்டு வெளியேறியும் மலையக மக்களின் உழைப்புச் சுரண்டல் நிறுத்தப்படவில்லை – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. சுட்டிக்காட்டு!

Thursday, April 4th, 2019

1823 களில் இந்த மக்கள் இந்தியாவின் புதுக்கோட்டை, திருச்சி,  கேரளா, கர்னாடகா, ஆந்திர பிரதேசம் போன்ற பகுதிகளிலிருந்து வறிய மக்கள் ஆயிரக் கணக்கில் கப்பல் மூலமாக மலையகத் தோட்டத்  தொழிலுக்கென கொண்டு வரப்பட்டனர்.

அக்காலகட்டத்தில் எதிர்பாராத வகையில் கோப்பி பயிர்ச் செய்கை பின்னடைவு கண்ட  காரணத்தினால், பிரித்தானிய காலணித்துவ ஆட்சியானது 1867ல் தேயிலை பயிர்ச் செய்கையை இலங்கைக்கு அறிமுகப்படுத்தியதிலிருந்து தேயிலை நாற்று நடுதல் முதற்கொண்டு கொழுந்து பறித்தல், தேயிலை உற்பத்தி, விற்பனை என்பன இன்று இந்த உழைப்பினை சுரண்டுகின்ற சந்தர்ப்பம் வரையில் பரம்பரை, பரம்பரையாக இருந்து வருகின்ற ஒரு துறை போலாகிவிட்டுள்ளது.

பிரித்தானியர்கள் இந்நாட்டைவிட்டு வெளியேறியதும், இப்பாரிய தேயிலைத் தோட்டங்கள் காணி உரித்திருந்த உயர் சாதியினர் எனக் கருதப்பட்டவர்களின் கைகளுக்கும், தொழிலாள குத்தகைக்காரர்களான அவர்களது சமூகத்தைச் சார்ந்தோர்களினதும் கைகளுக்குச் சென்று சுரண்டல்கள் தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்டன. இந்த முறைமையினுள் அக்கால காலணித்துவ ஆட்சியார்களினதும், அவர்களது வழியொட்டி வருகின்ற இலங்கை ஆட்சியாளர்களினதும், சுய நலன்களுக்காக இம் மக்கள் அடகு வைக்கப்பட்டுள்ளனர். 1823ல் இலங்கைக்கு வந்து எங்களது மக்களாகிவிட்டுள்ள இம்மக்களுக்கு அன்றுமுதல் இன்று வரையில் உரித்து என எதுவுமே அற்ற நிலையே உருவாகிவிட்டுள்ளது.

1948ல் பிரித்தானியரிடமிருந்து சுதந்திரம் பெற்றதன் பின்னர் அப்போதைக்கு சுமார் ஒரு இலட்சம் பேர் வரையிலிருந்த மலையக மக்களின் பிரஜா உரிமை, நாட்டுரிமை மற்றும் வாக்குரிமை தொடர்பிலான சட்டத்தின் மூலமாக மலையக தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை ஈடுசெய்து கொள்வதற்கு இந்நாட்டு ஆட்சியாளர்களுக்கு பல காலம் எடுத்தன. அன்று, இம்மக்களின் பிரஜாவுரிமையினைப் பறிப்பதற்கு வடக்கு, கிழக்கு மாகாணங்களைப் பிரதிநிதித்துவப்படுத்திய தமிழ் கட்சியான அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியும் அதனது தலைமையும் துணைபோயிருந்த துரதிர்ஸ்ட நிலைமையும் ஏற்பட்டிருந்தமை உண்மையிலேயே எம்மை தலைகுனிய வைத்ததொரு விடயமாகும்.

இத்தகைய துரோகத்தனமான கொள்கை வழிவந்துள்ள தமிழ் அரசியல்வாதிகள், கடந்த யுத்த காலங்களில் மன்னாரிலிருந்து விடத்தல்தீவு போன்ற பகுதிகளுக்கு பொருட்களை கடத்தி, பல மடங்கு அதிக விலையில் எமது மக்களுக்கு விற்பனை செய்து, எமது மக்களை சுரண்டி வயிறு பிழைத்தவர்கள், இன்று இங்கே வந்து அந்த மக்களுக்காக நீலிக் கண்ணீர் வடிக்கின்றபோது, சாத்தான்கள் வேதம் ஓதுவதை நேரிலேயே பார்க்கக் கூடியதாக இருக்கின்றது.

1977ன் பின்னர் மலையக தமிழ் மக்களின் வாக்கு அதிகார ரீதியில் அழுத்தமிகு நிலைக்கு வந்தாலும், வடக்கு, கிழக்குப் பகுதிகளில் படிப்படியாக வளர்ச்சி பெற்றிருந்த உரிமைப் போராட்டங்கள் காரணமாகவும், அரசியல் ரீதியாக இம் மக்கள் அழுத்தங் கொடுக்கக்கூடிய நிலையினை உரித்தாக்கிக் கொள்ள இயலாத நிலையில் இருந்ததால், அவர்களது குறைந்தபட்ச அடிப்படை உரிமைகளையேனும் வழங்குவதற்கு இந்நாட்டு அரசியல் இடங்கொடுக்கவில்லை. 1978ன் அரசியல் யாப்பின் ஊடாக இந்த நாட்டில் ஒரு பிரஜாவுரிமையே நிலவுவதாக வலியுறுத்தப்பட்டு, பரம்பரையில் மற்றும் பதிவில் என இரு பிரஜாவுரிமைகள் இனங்காணப்பட்டதன் ஊடாக இம் மக்களது பிரஜாவுரிமை ஏற்றுக் கொள்ளப்பட்டது என பொதுவாகக் கூறலாம்.

எனினும், அம் மக்களுக்கு வாக்குரிமையும், பிரஜாவுரிமையும் உரித்தாகின என்ற போதிலும், அம் மக்கள் சமூகத்திற்கு இதுவரையிலும்  உண்மையானதும், உரித்துடையதுமான சமூக கௌரவம் என்பது கேள்விக்குறியாகவே தொடர்வது, வேதனைக்குரிய விடயமாகவே இருந்து வருகின்றது.

பிரஜாவுரிமை இரத்துச் செய்யப்பட்டதன் பின்னர், அரச கொள்கை வகுத்தல்களின் போது, இம் மக்கள் கவனத்தில் கொள்ளாது விடப்பட்டதால், 1948 முதல் நிர்வாக ரீதியில் கவணிப்புகள் பலவற்றுக்கு இம்மக்கள் உள்ளடக்கப்படவில்லை என்றே தெரிய வருகின்றது.

இம் மக்கள் தொடர்பான நிர்வாக விடயங்களின் பொறுப்புகள் தோட்ட அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்ட முறைமையொன்றை அரச நிர்வாகம் கடைப்பிடித்து வந்ததால், தோட்டப் பகுதிகளுக்கான கிராம சேவையாளர்கள்கூட 1998 – 99 போன்ற அண்மைய காலங்களில்தான் நியமிக்கப்பட்டனர். அந்த வகையில், இம் மக்களது பிறப்பு, இறப்புகளை பதிவு செய்தல், நிர்வாக விடயங்களுக்குத் தேவையான தேசிய அடையாள அட்டை போன்ற அடிப்படை சட்ட ஆவணங்கள்கூட மறுக்கப்பட்ட மக்களாகவே இவர்கள் ஒன்றரை நூற்றாண்டு காலமாக வாழ்ந்து வந்திருக்கின்றனர்.

இத்தகைய புறக்கணிப்புகளுக்கு இம் மக்கள் தள்ளப்பட்டிருந்ததன் காரணமாகவே, இன்றைய அரச பொது நிர்வாகத்தினுள் இம் மக்களது கல்வி, சுகாதார வசதிகள், உரிய வீடுகள், வறுமை ஒழிப்பு போன்ற துறைகள் சார்ந்த வேலைத் திட்டங்களுக்குள் உள்வாங்க இயலாதுள்ளது. சுதந்திரத்திற்குப் பின்னர் இன்று வரையில் இம் மக்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் இந்நாட்டுக்குள் இன ரீதியிலான அடிப்படையில் வன்முறைகளுக்கு உட்பட்டு வருகின்ற நிலைமைகளும் இல்லாமல் இல்லை.

Related posts:

இலங்கையர்களாக வாழ வேண்டும் என்பதற்காக தமிழர்கள் என்ற அடையாளத்தை இழப்பதற்கு நாம் தயாராக இல்லை!
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களை முருகண்டி பிள்ளையார் ஆலய நிர்வாகிகள் சந்தித்து கோரிக்கை முன்வைப்பு...
போலித் தமிழ் தேசிய வாதிகளால் மக்களிடமிருந்து பிரிக்கமுடியாத இமயமாக திகழும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சிய...