பியரின் விலைகுறைப்பு இளவயதினரின் மதுப்பழக்கத்தை அதிகரிக்கும் – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி சுட்டிக்காட்டு!

Thursday, June 7th, 2018

பியரின் விலைக் குறைப்பானது இந்த நாட்டில் இளம் வயதினரிடையே – குறிப்பாக கல்வி கற்கின்ற தரப்பினரிடையே மதுப் பழக்கத்திற்கும், அதிகரித்த மது பாவனைக்கும் வழிகாட்டியுள்ள நிலையில் இது செறிவு கூடிய மதுவகைகளை நோக்கிய பயணத்திற்கும் அவர்களுக்கு உந்து சக்தியாக இருக்கின்றது – என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர்நாயகம் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டியுள்ளார்.

நாடாளுமன்றில் இன்று நடைபெற்ற மதுவரிக்; கட்டளைச் சட்டத்தின் கீழான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –

நாட்டில் பாடசாலை மாணவர்களை வெகுவாக இலக்கு வைத்து பல்வேறு வகையிலான போதைப் பொருட்கள் பாடசாலைகளை அண்டியப் பகுதிகளிலேயே விற்பனை செய்யப்படும் செயற்பாடுகள் பெருகியுள்ளன. கடந்த வருடத்தில் போதைப் பொருள் கடத்தல் தொடர்பில் 29,790 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் எனத் தெரிய வருகின்ற நிலையில், இவர்களில் 39 வீதமானவர்கள் 20 வயதினை அண்டியவர்களாகவே காணப்படுகின்றனர். 60 வீதமானவர்கள் 30 வயதினைத் தாண்டியவர்கள் எனத் தெரிய வருகின்றது.

பியரின் விலையைக் குறைத்து, ஏனைய செறிவு கூடிய மது வகைகளின் விலை அதிகரிப்பானது, மது பாவனையாளர்களை சட்டவிரோத மது பானங்களை நோக்கி நகர்த்துவதாகவே இருக்கின்றது. இதனால், ஏற்கனவே 6 – 7 வீதமான அளவில் இருந்துள்ள சட்டவிரோத மது பாவனையாளர்களது எண்ணிக்கை இன்னும் சில காலங்களில் அதிகரிக்கக்கூடிய வாய்ப்புகளும் இருக்கின்றன. தற்போதைய நிலையில், வடக்கு மாகாணத்தில் இத்தகைய சட்டவிரோத மது உற்பத்திகள் அதிகரித்து வருவதையும், இத்தகைய உற்பத்தி செயற்பாடுகளில் பாடசாலைகளைவிட்டு இடைவிலகிய மாணவர்களை இணைத்துக் கொள்ளும் நடவடிக்கைகளையும் காணக்கூடியதாக இருக்கின்றது.

அதுமட்டுமல்லாது, கஞ்சா போன்ற போதைப் பொருட்களின் பாவனை அதிகரிப்பிற்கும் இது வழி வகுத்துள்ளது என்றே தெரிய வருகின்றது.
எனவே, இந்த நாட்டினை போதையற்ற நாடாக மாற்ற வேண்டுமெனில், அது தொடர்பிலான சட்டங்களை நடைமுறைப்படுத்துகின்ற நிறுவனங்கள் தொடர்பில் இறுக்கமான ஏற்பாடுகள் இருத்தல் அவசியமாகின்றது. வடக்கு மாகாணத்தில் கடந்த காலங்களில் போதைப் பொருள் கடத்தல் நடவடிக்கைகளை பெரும்பாலும் தடுப்பதற்கு ஏதுவாக இருந்த தமிழ் பொலிஸ் அதிகாரிகள் உட்பட பலர் மாற்றப்பட்டு, இன்று வடக்கிலே போதைப் பொருள் கடத்தல் என்பது பாரியளவில் அதிகரித்துள்ளது.

இதே நேரம் பொலிஸ் துறையில் குற்றங்களுக்கு ஆட்படுகின்ற பொலிஸ் அதிகாரிகள் தண்டணை என்ற பெயரில் வடக்கு மாகாணத்திற்கு மாற்றப்படுகின்ற நிலையில், அவர்களில் பெரும்பாலானவர்களும் மேற்படி குற்றங்களுக்குத் துணை போகின்ற நிலைமைகளும் இல்லாமல் இல்லை.

எனவே, பொலிஸ் சேவைகள் ஆணைக்குழு, பொலிஸ் மா அதிபர் இது தொடர்பில் கூடிய அவதானமெடுத்து, பொலிஸ் சேவையில் இருக்கின்ற நேர்மையான அதிகாரிகளை வடக்கு மாகாணத்திற்கு நியமித்து, மேற்படி போதைப் பொருள் கடத்தல் மற்றும் விற்பனை செயற்பாடுகள் உள்ளிட்ட சமூகவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதற்கு உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டு, அதே நேரம் தற்போது வடக்கில் நிலை கொண்டுள்ள கடற்படையினரை பயன்படுத்தி, எமது கடற்றொழிலாளர்களது தொழில் முயற்சிகளுக்கு பாதிப்பினை – சிரமங்களை ஏற்படுத்தாத வகையில், கடுமையான நடவடிக்கைளை மேற்கொண்டு இந்த போதைப் பொருள் கடத்தல்களை முறியடிக்க இந்த அரசு முன்வர வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றேன் என தெரிவித்துள்ளார்.

Related posts:


சர்ச்சைக்குரிய கீரிமலை இறங்குதுறை விடயத்தில்  உரிய தீர்வு பெற்றுத்தரப்படும் – டக்ளஸ் தேவானந்தா
மாற்றுத்திறனாளிகளின் வாழ்வா தாரத்தை மேம்படு த்துவதில் நாம் மிகுந்த அக்கறையுடன் செயற்பட்டு வருகினறோம்...
ஊர்காவற்றுறை பிரதேச மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு கிடைக்கும் – கட்சியின் ஆலோ...