பாலியாற்றை பாதிப்புகளுக்கு உட்படுத்தாமல் பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுக்கவும் – சபையில் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்து!
Tuesday, June 20th, 2017வடக்கு மாகாணத்தில், பாலியாற்றுக் கரையோரங்களில் இடம்பெற்று வருகின்ற சட்டவிரோத செயற்பாடுகளை உடன் நிறுத்துவதற்கும், தற்போது அப்பகுதியில் மேற்கொள்ளப்பட்டுள்ள சேதங்களை நிவர்த்தி செய்து, அதனைப் பாதுகாப்பதற்கும், மேலும் இத்தகைய செயற்பாடுகள் அப்பகுதிகளில் ஏற்படாத வகையில் பாதூகப்பு ஏற்பாடுகளை மேற்கொள்வதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள், நீர்ப்பாசன மற்றும் நீர் முகாமைத்துவ அமைச்சர் விஜித் விஜயமுனி டி சொய்சா அவர்களிடம் இன்றைய தினம் (20) நாடாளுமன்றத்தில் வலியுறுத்தியுள்ளார்.
இவ்விடயம் தொடர்பில் மேலும் தெரிவித்தள்ள அவர், வவுனியா மாவட்டத்தின் புளியங்குளம் பகுதியருகே உருவாக்கம் பெற்று, வடக்கு மற்றும் வடமேற்கு நோக்கி வவுனியா, முல்லைதீவு, மன்னார் மாவட்டங்களினூடாக மன்னார் பாக்கு நீரிணை கடல் பகுதியில் கலக்கின்ற, வரலாற்று ரீதியிலும் புகழ்பெற்ற, வடக்கின் நீர்த் தேவையினை ஓரளவு பூர்த்தி செய்கின்ற பாலியாற்றினை பாதுகாப்பதற்காக மேற்படி ஆற்றின் இரு மருங்குகளிலும் பல கிலோ மீற்றர்கள் தூரம்வரையில் அரசாங்கத்தினால் காணிகள் ஒதுக்கப்பட்டுள்ளன என்றும், இந்தக் காணிகளில் முதிரை, பாலை, கருங்காலி, மருதம் போன்ற மரங்கள் பாரியளவில் வளர்ந்து இயற்கையையும், மண்ணரிப்புகள் ஏற்படாமலும் பாதுகாத்து வருவதாகவும் தெரிய வருகின்ற நிலையில், தற்போது பலர் அப்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து, காட்டு மரங்களை வெட்டியும், ஆற்றின் கரையோரப் பகுதிகளை பாரியளவில் சேதப்படுத்தியும், சட்டவிரோதமான முறையில் பயிர்ச் செய்கைகளை மேற்கொண்டு, ஆற்று நீரைப் பயன்படுத்தி வருவதாகவும், மேற்படி காணிகள் வவுனிக்குளம் நீர்ப்பாசனத் திணைக்களத்திற்கு உட்பட்டது என அடையாளப்படுத்தும் வகையில் நீர்ப்பாசனத் திணைக்களத்தினால் எல்லைக் கற்கள் நடப்பட்டுள்ள போதிலும், அதனையும் மீறியே மேற்படி சட்டவிரோத செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், இதன் காரணமாக மேற்படி ஆறு பல்வேறு பாதிப்புகளுக்கு உட்பட்டு, அதனை நம்பியிருக்கின்ற மக்களுக்கு நீர்வளம் கிடைக்காமல் போகக்கூடிய அபாயமும்ஈ பாரிய இயற்கை அழிவுகளும் ஏற்பட்டுள்ளதாகவும் அம் மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
வடக்கில் அடிக்கடி ஏற்படுகின்ற வரட்சி கால நிலை முன்பாக இத்தகைய நீராதாரங்களைப் பேணிப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு இன்றியமையாததாக இருக்கும் நிலையில், மேற்படி சட்டவிரோதமான செயற்பாடுகள் உடனடியாக தடுத்து நிறுத்தப்பட வேண்டிய அவசியமேற்பட்டுள்ளது எனத் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
வடக்கில் அதிகரித்துவரும் சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகளை கட்டுப்படுத்த நடவடிக்கை வேண்டும் – டக்ளஸ்...
பருத்தித்துறை சிவன் ஆலயத்தில் மீண்டும் பூஜை - அமைச்சர் டக்ளஸின் வேண்டுகோளை தொடர்ந்து சுகாதாரத் தரப்ப...
வடகடல் நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டதன் நோக்கம் நிறைவேறும். - அமைச்சர் டக்ளஸ் நம்பிக்கை!
|
|