பாத்தீனியத்தை ஒழிக்க மக்களின் பங்களிப்பும் அவசியம் – செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Thursday, December 20th, 2018

யாழ்.மாவட்டத்தில் மட்டுமன்றி வடக்கு மாகாணத்தில் காணப்படும் பாத்தீனிய செடிகளை அழிக்கும் நடவடிக்கையில், மக்கள் அனைவரும் மிகுந்த அக்கறையுடன் செயற்படுவதன் ஊடாகவே பாத்தீனிய செடிகளை எமது பகுதிகளில் இருந்து முற்றாக அழிக்க முடியும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

யாழ்.மாவட்டத்தில் கடந்த 17ஆம் திகதிமுதல் பாத்தீனியம் ஒழிப்பு நடவடிக்கைகள் குறித்த பகுதிகளில் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இப்பாத்தீனியச் செடிகளை முற்றாக அழிக்கும் நடவடிக்கைகளில் எமது மக்கள் குறிப்பாக இளைஞர் யுவதிகள் மிகுந்த விழிப்புணர்வுடன் செயற்படுவது காலத்திற்கு பொருத்தமான விடயம் என்றே நான் கருதுகிறேன்.

குறிப்பாக வலிகாமம் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் பயிர்செய் நிலங்களிலும் வெற்றுக் காணிகளிலும் அதிகளவில் காணப்படும் இப்பாத்தீனியச் செடிகள் மனித வாழ்வியலுக்கும் கால்நடைகளுக்கும் மிகுந்த ஆபத்தை தோற்றுவித்து வருகிறது என்பதை துறைசார்ந்தோரால் சுட்டிக்காட்டப்பட்டு வருகிறது.

அதுமாத்திரமன்று கால்நடைகள் இந்த பாத்தீனியச் செடிகளை மேய்வதன் காரணமாக உயிரிழக்கும் சந்தர்ப்பங்கள் ஏற்பட்டுள்ள அதேவேளை மனிதர்களின் உடலில் இந்த பாத்தீனியச் செடிகள் தொடுகையுறும் பட்சத்தில் தோல் நோய்கள் ஏற்படக்கூடியதான வாய்ப்புக்களும் இருப்பதாகவும் மருத்துவ துறைசார்ந்தோரால் சுட்டிக்காட்டப்பட்டு வருகிறது.

எனவே யாழ்.மாவட்டத்தில் குறித்த பகுதிகளில் காணப்படும் பாத்தீனியச் செடிகளை அழித்தொழிக்கும் நடவடிக்கை பாராட்டுவதற்குரியது. இந்த நடவடிக்கையில் துறைசார்ந்த திணைக்களங்களை சார்ந்தோர் மட்டுமல்லாது இளைஞர் யுவதிகளும் உரிய முறையில் ஆதரவையும் ஒத்துழைப்பையும் கொடுத்து ஒத்தாசையையும் வழங்குவதனூடாக பாத்தீனியமற்ற பகுதிகளாக எமது பகுதிகளை மாற்ற முடியும் என்பதுடன் எதிர்காலங்களில் பாத்தீனியச் செடிகளால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களில் இருந்து பாதுகாத்துக்கொள்ள முடியும் என்றும் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டியுள்ளார்.

Related posts: