பாதுகாப்பு கவலையீனத்தால் இலங்கை நாடும் மக்களும் இழந்தது அதிகம் – டக்ளஸ் எம்.பி. சுட்டிக்காட்டு!

Wednesday, May 8th, 2019

இந்த நாட்டைப் பொறுத்தவரையில், ஓர் அனர்த்தம் ஏற்பட்டதன் பின்னர்தான் அது தொடர்பில் அடியம், நுனியும் ஆராயப்படுகின்ற நிலை வழக்கமாகிவிட்டுள்ளது. அது இயற்கை அனர்த்தமாகட்டும், இத்தகைய பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பிலான அனர்த்தங்களாகட்டும் அனைத்துமே வந்த பின்னரே அணை கட்டுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

‘வெள்ளம் வருமுன் அணை கட்டுவோம்’ என்ற நிலைக்கு இந்த நாடு இன்னமும் தயாராக இல்லை என்பதையே இது எடுத்துக் காட்டுகின்றது.

இன ரீதியிலான – மத ரீதியிலான கருத்துக்கள் இந்த நாட்டு மக்கள் சமூகங்களிடையே பல்வேறு வழிகளிலும் தூண்டப்பட்டே வருகின்றன. குறிப்பாக, சமூக வலைத்தளங்கள் இதில் அதிக ஆதிக்கங்களைச் செலுத்துகின்றன. அதேநேரம், சுயலாப தமிழ் மற்றும் சிங்கள அரசியல்வாதிகள் சிலரும் இதில் மிக அதிகளவிலான பங்குகளை வகிக்கின்றனர்.

இத்தகைய குறுகிய நோக்கங்கள் காரணமாக ஏட்டிக்குப் போட்டியாக பரப்பப்படுகின்ற இனவாத – மதவாத கருத்துக்களால் முழு நாடும் பாரிய விபரீதங்களுக்கு முகங்கொடுக்கக்கூடிய நிலை வரையில் செல்ல வேண்டிய நிலைமைகளும் இல்லாமல் இல்லை என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் நடைபெறுகின்ற நாட்டின் தற்போதைய நிலைமைகள் தொடர்பிலான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் –

இந்த நாட்டில் சுயாதீன ஆணைக்குழுக்கள் உருவாக்கப்பட்டபோது, இன மற்றும் மத ரீதியிலான முரண்பாடுகளை தோற்றுவிப்போர் தொடர்பில் ஆராய்ந்து, விசாரணைகளை மேற்கொண்டு சட்ட ரீதியிலான நடவடிக்கை எடுக்கும் வகையில் ஓர் ஆணைக்குழு அமைக்கப்பட வேண்டும் என்ற தேவையை நாம் வலியுறுத்தி இருந்;தோம். ஆனால், நீங்கள் அதை அவதானத்தில் எடுத்துக் கொள்ளவில்லை.

அயலக நாடான இந்தியாவுடன் உறவுகளைப் பேணுகின்ற அதேநேரம், தமிழ்நாட்டுடனும் உறவுகளைப் பேணுவதற்கு வெளியுறவு அமைச்சு ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என பலமுறை நான் இந்தச் சபையிலே வலியுறுத்தியிருந்தேன். அதனையும் நீங்கள் சரிவரச் செய்ததாக இல்லை.

குறிப்பாக, இத்தகைய சர்வதேச ரீதியிலான பயங்கரவாதங்களை இலங்கை முறியடிக்க வேண்டும் எனில், தமிழ்நாட்டுனான உறவு என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகவே அமையும்.

மேற்படி சர்வதேச பயங்கரவாதக் குழுவுடன் தொடர்புடைய ஒரு நபர் தமிழ்நாட்டில் வைத்து கைதானதன் மூலமாகக் கிடைத்த தகவல்களின் அடிப்படையில், இலங்கையில் தாக்குதல் நடத்தப்படுவது தொடர்பில் அறியக் கிடைத்ததாகவும், அது தொடர்பில் இலங்கைக்கு அறிவிக்கப்பட்டதாகவும் இந்தியத் தரப்பில் கூறப்பட்டது.

இலங்கையில் நடத்தப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் காரணமாக இந்த நாட்டின் பொருளாதாரமும் மிக அதிகளவிலான பாதிப்புகளுக்கு உட்பட்டுள்ளது. குறிப்பாக, வெளிநாட்டு நேரடி முதலீடுகள் மற்றும் சுற்றுலாத்துறை என்பன பாரிய நெருக்கடி நிலைக்குள் தள்ளப்பட்டுள்ளன.

கடந்த ஆண்டில் சுற்றுலாத்துறையின் மூலமாக இந்த நாட்டுக்கு 4,381 மில்லியன் டொலர்கள் வருமானமாகக் கிடைத்துள்ளதாகத் தெரிய வருகின்றது.

கடந்த ஆண்டின் தரவுகளின்படி இலங்கையில் சுற்றுலாத்துறைச் சார்ந்து 2 இலட்சத்து 40 ஆயிரம் பேர் நேரடியாகவும், 1 இலட்சத்து 60 ஆயிரம் பேர் மறைமுகமாகவும் பணியாற்றி வருவதாக அறியக் கிடைத்தது.

எனவே, ஒரு பக்கத்தில் இந்த பயங்கரவாத செயற்பாடுகள் வேரோடு களையப்பட வேண்டிய அதே நேரம், இலங்கையின் சுற்றுலாத்துறை அடங்கலாக ஏனைய அனைத்துத் துறைகளையும் மீள கட்டியெழுப்ப வேண்டியத் தேவை அவசியமாகின்றது என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

அத்துடன், மேற்படி குண்டுத் தாக்குதல் அனர்த்தம் காரணமாக உயிரிழந்தோருக்கும், காயடைந்தோருக்கும் வழங்கப்பட வேண்டிய இழப்பீடுகளை உடன் வழங்க வேண்டும் என்பதையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.

Related posts:

மக்களுக்காக எத்தகைய துன்ப துயரங்களையும் எதிர்கொண்டு வெற்றிகொள்ள தயாராகவே இருக்கின்றோம் - தெல்லிப்ப ள...
சிறப்பாக நடைபெற்றது மாவட்டபுரம் கந்தசாமி கோவில் முகவுத்தரத் தேர் பவளக்கால் நாட்டுவிழா - டக்ளஸ் எம்.ப...
வவுனியா விஞ்ஞானன் குளம் மக்களது அடிப்படை பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு பெற்றுத்தரப்படும் – டக்ளஸ்...